என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாடு இடமாற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பங்கேற்பு
- அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நேற்று 2-ந் தேதி தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் இந்த மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் வாசுகியிடமிருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஏ.கே.பத்ம நாபன் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் மாநாட்டு கொடியை மேற்கு வங்காள மூத்த தலைவர் பிமன்வாசு ஏற்றி வைத்தார். இதையடுத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த மாநாட்டுக்கு திரிபுரா முன்னாள் முதல்-அமைச்சர் மாணிக் சர்கார் தலைமை தாங்கினார்.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டச்சாரியா, புரட்சிக்கர சோசியலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டின் வரவேற்பு குழு உறுப்பினரான பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சண்முகம், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சினிமா டைரக்டர்கள் ராஜூ முருகன், நடிகர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிகள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று 3-வது நாள் மாநாடு மாலை 5 மணியளவில் கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கமாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ராஜா முத்தையா மன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கருத்தரங்கில் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்று பேசுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்க உரையாற்றுகிறார்.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். முடிவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
இந்த கருத்தரங்கில் நெய்யாற்றிங்கரை பெண்கள் குழுவினரின் சிங்காரி மேளம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ப தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரைக்கு வரும் மு..க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் ராஜா முத்தையா மன்றம் சென்று கருத்த ரங்கில் பங்கேற்க ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு காரணமாக தல்லா குளம், கோரிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை (4-ந்தேதி) 3-ம் நாள் மாநாடு மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லீம் பெண்கள் குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. இதனை தொடர்ந்து சென்னை கலை குழுவினரின் நாடகம் கானா விமலா பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சினிமா நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி தமுக்கம் கலையரங்கில் நடைபெறு கிறது.






