என் மலர்
மதுரை
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
- அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பதுடன், திருமண தடைகள் அகலும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி உள்ளிட்ட இடங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
எனவே மூலஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் அதற்கு பதிலாக சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சன்ன தியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வேண்டுதலுக்காவும், வேண்டுதல்கள் நிறை வேறியமைக்காகவும் காவடி சுமந்தும், பால்குடம் ஏந்தியும் அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

சுவாமிமலை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
முன்னதாக அதிகாலை மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
மேலும், பங்குனி உத்திரத்தன்று முருகனை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றியும், அர்ச்சனை செய்தும் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

வயலூர் முருகன்
குமார வயலூர் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு குத்தி வந்தூம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் முருகப்பெ ருமா ன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா நடைபெறுகிறது.
நாளை (சனிக்கிழமை) உபய அபிஷேகங்களும், 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி வேலன் வேடனாக விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்ட நிகழ்ச்சி பின் முருகப்பெருமானாக காட்சியளித்தலும் நடைபெறுகிறது.

15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக பாலாயம் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறாதால். இந்த பங்குனி உத்திரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
- முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை.
- ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான்.
அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம்.
பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது.
எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம்.
ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளுக்கு நாள் அதிரித்து வரும் பரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
- வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
மதுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரோட்டாவின் ருசிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. டிபன் வகைகளில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என்று அனைத்து வீட்டிலேயே தயாரித்து அடிக்கடி வழங்கும் நிலையில், ஓட்டலில் தயாராகும் புரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு.
அனைவருக்கும் பிடித்த உணவாகிப்போன பரோட்டா உடலுக்கு கேடு என்றும், அது தொடர்பாக பல்வேறு டாக்டர்களின் விமர்சனங்கள் வந்தபோதிலும் வாய்க்கு பூட்டு போட யாரும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் அதிரித்து வரும் புரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
விருதுநகர் பொரிச்ச பரோட்டாவில் தொடங்கி, மதுரை பன் புரோட்டா, லேயர் லேயராக வரும் நூல் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை லாப்பா பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, சிலோன் பரோட்டா, வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல் மதுரையில் மற்றுமொரு சுவையாக தர்பூசணி பரோட்டாவை ஒரு தனியார் ஓட்டல் அறிமுகம் செய்துள்ளது.
மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாசா நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி அதன் நிர்வாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் முகக்கவசம் போன்ற வடிவில் பரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக இந்த ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து வருகிறது. தற்போது தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம், அடிக்கிற வெயி
லுக்கு ஆனந்தமாய் சுவைத் திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்து
டன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர், ஆகா, ஓகோ, அருமை என்று கூறி அந்த ஓட்டலை குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வரு
கின்றனர்.
அதன்படி அந்த ஓட்டலில் திடீரென தர்பூசணி பரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை பரோட்டாமாவின் மீது வைத்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி, அதனை பொறித்து பீட்சா போல வெட்டிக் கொடுப்பது போன்ற வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே மாதத்தில் பரோட்டா தயாரிக்கும் பயிற்சியும் ஒரு குழுவால் அளிக்கப்பட்டு வருகிறது.
- ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது.
- எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பா குருக்கள், சங்கர் குருக்கள் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2021-ம் ஆண்டில் திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக எந்தவித ரசீதும் வழங்காமல் நன்கொடை வசூலிக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பியதால் எங்களை இடமாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனவே இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், மேற்கண்ட கோவில் கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களிடம் எந்த ரசீதுகளும் இல்லாமல், எந்த கணக்குகளும் இல்லாமல் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் 24.10.2021 அன்று நடத்தப்பட்டது. சாமானிய மக்களும் பக்தர்களும் இந்தப் பிரச்சனையை 2021-ம் ஆண்டிலேயே எழுப்பியுள்ளனர். இந்த முறைகேடு சம்பந்தமாக இந்த நீதிமன்றம் 2022-ம் ஆண்டில் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது.
மேலும் 2022-ம் ஆண்டில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது தணிக்கை அறிக்கையிலும் உறுதியாகி உள்ளது. நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்யவும், பணிகளை மேற்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளது. கும்பாபிஷேக பணிகளை எந்த உத்தரவும் இல்லாமல் செய்துள்ளனர்.
ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அறநிலையத்துறை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனையை மறைக்கும் நோக்கில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் உண்மையைக் கண்டறிய இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
எனவே இந்த கோவில் கும்பாபிஷேக நிதி முறைகேடு புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரித்து முறைகேடுக்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. மத்திய மண்டலத்தின் காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, இந்த விசாரணையை கண்காணித்து, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட் டுள்ளன என்பதை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை இந்த கோர்ட்டு முறையாக கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை:
திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.
அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
- மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறப்பும் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது.
வரத்து வினாடிக்கு 516 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி-சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோடையின் தாக்கம் இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் நிலை இருந்த போதிலும் கோடை மழையும் கை கொடுத்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆறுதல் படுத்தி வருகிறது.
மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் உள்ள நீரின் அளவு சித்திரை திருவிழாவுக்கு திறப்பதற்கு போதுமான அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், வைகை அணையில் தற்போது 2.4 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு காலம் முடியும் தருவாயில் உள்ளது.
இதனால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கவும், கோடையில் குடிநீர் தேவைக்கும் தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாகும் என்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. வரத்து 493 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1543 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.60 அடி. வரத்து 71 கன அடி. இருப்பு 110.96 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடி. வரத்து 26 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 50.34 மி.கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 35.80 அடி. வரத்து 12 கன அடி. இருப்பு 34.80 மி.கன அடி.
- காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரெியல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இதற்காக அவர் இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார்.
இதற்கிடையே பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.
இதில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பசும்பொன் பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மோடிக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மோடி வருகையை கண்டித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கருப்பு கொடியுடன் பிரதமர் மோடியை கண்டித்தும், புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பழனிக்குமார் வட்டார தலைவர்கள் ஜெயராஜ், வேல்முருகன், செல்வராஜ், செந்தில், நகரத் தலைவர் சவுந்தர், எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் ராஜா தேசிங்கு மற்றும் நிர்வாகிகள் மனோகரன், பாலகிருஷ்ணன், முனியசாமி போஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கச்சத்தீவை மீட்க ஆவண செய்வார்.
- இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார்
மதுரை:
ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரெயில் பாலம் மற்றும் கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்தான தூக்கு பாலம் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரெயில்வே பாலத்திற்கு பிறகு, தற்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே பாலம் பெருமைக்குரியது. இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். அவை அத்தனையையும் நிறை வேற்றி இருக்கிறார்.
குறிப்பாக தமிழக மீனவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அத்தனைக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரை வார்க்கப்பட்டது. அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.
ஆனால் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசி வருகின்றனர். பிரதமர் கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- மாநாடு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
- புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொது மாநாடு தொடங்கியது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சி.பி.ஐ.எம்.எல். விடுதலை பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி.பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் சாலமன் பாப்பையா, ராஜமுருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றி மாறன், பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.
இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே சங்கரய்யா நினைவு திடலில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.
வெங்கடேசன் எம்.பி. வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரளா முதல்-அமைச்சர் உறுப்பினர் ஆகி விஜயன் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
வரவேற்பு பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூற மாநாடு நிறைவு பெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
புதிய செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் சில பொலிட் பீரோ உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் தவாலேவை தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொலிட் பீரோவில் உள்ள மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி. ராம கிருஷ்ணன், பினராய் விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சுர்ஜ்ய காந்த மிஸ்ரா ஆகியோருக்கு 75 வயது நிரம்பி உள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில் பினராய் விஜயன் மீண்டும் தனக்கு கேரள முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது.
- தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது.
மதுரை:
மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து தனக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர் பஷீர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, டி.இ.டி.யில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியரான பஷீருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது. மற்றும் என்.சி.டி.இ., டி.இ.டி., ஐ தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.
எனவே, டி.இ.டி. தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது. அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு டி.இ.டி. தகுதியைப் பொருத்தவரை செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டு உள்ளனர்.
- பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை நடக்கிறது
- பிரதமர் மோடியை சந்திக்க 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மதியம் 3.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.
இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள்.
- ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:
தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள். அந்த தலைவர்களை நமக்கு தெரியவே இல்லை. அது மாதிரி நமக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார். அடுத்த தலைமுறையும் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று கேள்வி கேட்க போகிறார்கள்.
விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கிறேன்.
எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிய கட்டமைப்பு மேல் கட்டமைக்கப்படவில்லை என்றால் ஏதோ கட்டத்தில் மக்களுக்கு எதிர்நிலையில் போய் நின்று விடும் என்பது என்னுடைய புரிதலாக உள்ளது.
இதெல்லாம் 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






