என் மலர்
ஈரோடு
- பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ.67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ.64 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ.10 லட்சம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
- கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பழைய மார்க்கெட் அருகே ஜின்னா வீதியை சேர்ந்தவர் சிராஜூ தீன் (வயது 70). இவரது மனைவி லைலா பானு. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
மூத்த மகள் மட்டும் தந்தை வீட்டு அருகே திருமணமாகி வசித்து வருகிறார். சிராஜூதீன் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சிராஜூதீன் மற்றும் குடும்பத்தினர் விடுமுறையை கழிக்கும் வகையில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டனர்.
இதையடுத்து நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது நடுவீட்டில் ஓடு பிரிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோ இருக்கும் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சிராஜூதீன் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
- கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.
இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
- தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.
இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.
காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.
இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.
தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 34 லட்சத்து 83 ஆயிரத்து 183 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 106 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாளவாடி மரூர், குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாளவாடி பகுதியைச் சேர்ந்த மாதவ சாமி மகன் மகேந்திரா (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவப்பா மகன் பிரவீன் குமார் (27), ரங்க சாமி மகன் புருஷோத்தமா (31), நாராயண மகன் ரங்க சாமி (40), குருசாமி மகன் மாதேஷா (38), ரங்கசாமி மகன் மூர்த்தி (31), பசுவ ண்ணா (32), சித்தமல்லு (30), சித்தமல்லு கௌதா (40), மாதேவா (33), ராமே கௌதா (55), மாதேஷ் (55), மாதேவா (60), குமார் (38), மாதவசாமி (46), நாகராஜப்பா (35), குருசித்தச்சாரை, வசந்த் (24), மாதப்பா (54), சங்கரப்பா (64) ஆகிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.90 ஆயிரத்து 70 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைபோல் தாளவாடி மல்லன்குழி, மல்குதிபுரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுப ட்டுக் கொண்டிருந்த தாள வாடி பகுதியைச் சேர்ந்த நாகேஷ் (39), மஞ்சுநாதா (44), பீரேஷ் (34), சன்மதா (35), அருள்ராஜ் (42), தண்ட பாணி (50), சிவகுமார் (33), திருப்பதி (60), ரங்கசாமி (58), ஜடேசாமி (69), கர்நா டகா மாநிலத்தைச் சேர்ந்த நந்திஷ் (44), சென்னிமலை பகுதியைச் சேர்ந்த அம்மா சியப்பன் (64), தாளவாடி பகுதியை சேர்ந்த மகதே வ்சாமி (45), பக்தவசலா (35), சிவசாமி (42), வெங்கட்ரா மன் (59), ரஞ்சனா நாயகா (56), ரமணா (37), சித்தராஜ் (29) ஆகிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.39 ஆயிரத்து 930 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது.
- குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
ஈரோடு:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆங்காங்கே மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள திரு.வி.க. வீதி பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கண்டித்தும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு போர்டு வைத்து உள்ளனர்.
மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஈரோடு சூரம்பட்டி திரு.வீ.க. வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரம்பட்டி காந்தி ஜி மெயின் ரோட்டில் வலது புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி ஜனத்தொகை அதிகம் உள்ள நெருக்கடியான பகுதியாகும்.
இங்கு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையும் அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்கள் ஆங்காங்கே குடித்து விட்டு வாந்தி எடுத்து ரோட்டில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் அலங்கோலமான நிலையில் உள்ளனர். இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தும் சென்று விடுகின்றனர். குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் திரு.வீ.க பகுதிக்கு உடனடியாக சென்று அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.
- தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் பணியாற்று வருகின்றனர்.
இது தவிர செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, தனிப்பட்டறை என ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும்போது குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு விடுமுறை எடுத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஓட்டு போடவும், பிரசாரத்தில் ஈடுபடவும் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.
இன்று காலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல வந்திருந்தனர். இனி வரும் நாட்களில் சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்...
- நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்தியூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரேயொரு சாதனை சொன்னால் நாங்கள் போட்டியில் இருந்து விலகிவிடுகிறோம்.
* தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.
* என்ன நடந்திருக்கு எந்த நாட்டில்? ஆட்சி பொறுப்பேற்கும் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார் மோடி. தற்போது 20 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள்.
* ஒரே ஒரு தடவ பத்திரிகையாளர்களை மோடி சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்.
* எல்லாவற்றிலும் புதுசு தேடும் போது, 75 வருஷமா உதயசூரியன், 60 வருஷமா இரட்டை இல்லை, அதே தாமரை, அதே கை... எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒரே தடவ மைக்கை அழுத்து..
* எல்லாரும் அவங்க சின்னத்துல நின்னு போட்டியிடுறாங்க. எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்... நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
* இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, என்னுடைய வரியை, வரிவரி என்று வாங்கி குவித்தவர்கள், ஊழல், லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
- திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,
பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.
தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.






