என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
    • கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் கோபி, சக்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செய்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கோபி நம்பியூர் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்று மாலை மற்றும் இரவில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.

    இதனால் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று தடைவிதித்துள்ளனர். இதனால் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ரசித்தும் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

    இதை போன்று அணையின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியில் பரிசல் இயக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் துணித்து வைத்தல் போன்றவைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது குறித்து நுழைவு வாயில் பகுதியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    • கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 3 மணிக்கு பிறகு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து தொடங்கியது.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மதியம் 3.45 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. உடனடியாக நகராட்சி பொறியாளர் சிவகுமார் அடங்கிய குழுவினர் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் வற்றியது.

    மழைக்காலத்தில் குடியிருப்புகள் தண்ணீர் புகாத வகையில் ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் கொடிவேரிப்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், குண்டேரிப்பள்ளம் அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதேப்போல் அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாநகர பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம்-62.20, எலந்த குட்டைமேடு-23.60, கொடிவேரிஅணை-11, அம்மாபேட்டை-9.40, வரட்டுப்பள்ளம்-8.40, கவுந்தப்பாடி-6.40, சென்னிமலை-4, பெருந்துறை-3, குண்டேரிப்பள்ளம் -2.20, பவானிசாகர்-1.80, ஈரோடு-1.20.

    • கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
    • தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் ராவணன். கடையின் பின்பகுதியில் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.

    இன்று காலை வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப ட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.

    இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும், குடோன்களுக்கும் பரவி வருவதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நின்று கொண்டனர்.

    அதேபோல் அருகில் தனியார் பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கும் கரும்புகை பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

     

    அருகில் கடையில் உள்ளவர்கள் அவசர அவசரமாக தங்களது பொருட்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் கடையில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.

    தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக கரும்புகை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியது. 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. எனினும் தண்ணீர் தேவையான அளவு இல்லை. இதை தொடர்ந்து மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஈரோடு-சத்தி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது.
    • 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக வந்த நீர் இன்று காலை மேலும் அதிகரித்து 4,649 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.31 அடியாக உயர்ந்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.

    • பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
    • 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் படியும், சத்தியமங்கலம் நகர பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வில் அசைவ ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்து சில்லி சிக்கன் தயாரித்து விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டு ஆயிரம் ரூபாய் வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் சில்லி புரோட்டா தயாரிப்புக்கு பழைய புரோட்டாவை பயன்படுத்திய ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும், அஜினோமோட்டோ பயன்படுத்திய ஒரு கடைக்காரருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.

    கோபிசெட்டபாளையம் நகர பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள், பேக்கரி கடைகள் மற்றும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது

    ஆய்வில் சுகாதாரம் இல்லாத 2 கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை நியூஸ் பேப்பரில் வைத்து உண்பதற்கு கொடுத்த 2 கடைகளுக்கு ரூ.1000 வீதம் 2 கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், பானி பூரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தரமான பானி பூரியை பயன்படுத்த வேண்டும் எனவும் பானி பூரி ரசத்தில் செயற்கை வண்ணம் ஏதும் சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு உரிமம் பானி பூரி கடைக்காரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும், முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    ஆய்வில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், கோபி நகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை, கிருஷ்ணா தியேட்டர் அருகே நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண் வாகன ஓட்டிகள் லைசன்ஸ் பெற்று வாகனங்களை ஓட்டுகின்றனரா? என்பது குறித்தும், ஆர்.சி.புத்தகம், ஹெல்மெட் அணிதல், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாக பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்ட 70 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் பெண் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வரும் நாட்களில் இதுபோல ஆண், பெண் என பாரபட்சமின்றி வாகன சோதனை மேற்கொண்டு அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (55). இவரது மகன் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அர்ச்சுனன் தனது மகனை கல்லூரி செல்வதற்காக பஜனைகோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

    பஸ்சில் அவரது மகன் ஏறியதும், அர்ச்சுனன் வீடு செல்வதற்காக கோபி-ஈரோடு சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் அர்ச்சுனன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சேகர் மற்றும் அர்ச்சனனை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அர்ச்சுனன் சாலையை கடப்பதும், அப்போது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாடார் மேடு, அண்ணாதுரை வீதியை சேர்ந்தவர் பர்கத்பாவா (28). இவர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜனதுல்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பர்கத்பாவா தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்று விட்டார். நேற்று நள்ளிரவு குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம், 3 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
    • யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சிக்கள்ளி கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் விவசாயி சங்கர் (30) என்பவர் தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிரை சேதாரம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தொடர்ந்து வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×