என் மலர்
ஈரோடு
- கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
- சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மொட்டையன் காட்டுப்புதூர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பைப்லைன் அமைத்து சுமார் 13 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பைப்லைன் மூலம் போதுமான தண்ணீர் அனுப்பப்பட்டும் மொட்டையன் காட்டுபுதூர் பகுதிக்கு ஏன்? சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை என்பதற்காக முருங்கத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தினர் பைப் லைனை ஆய்வு செய்தனர்.
அப்போது முருங்கத் தொழுவை சேர்ந்த பெரியசாமி என்ற விவசாயி கடந்த 2 ஆண்டுகளாக தனது விவசாய நிலத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முருங்கத் தொழுவு ஊராட்சித் தலைவர் பிரபா தமிழ்செல்வன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைத்து முறைகேடாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை பகுதியில் கரியாங்காட்டு தோட்டத்தில் வசித்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (74). இவ்வூரின் அருகில் தோட்டத்து வீட்டில் விவசாயி முத்துசாமியும், அவரது மனைவி சாமியாத்தாளும் தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் இருவரையும் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதேபோல் கடந்த 2022-ல் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் பகுதியில் குட்டையகாட்டு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரை நள்ளிரவில் கொலையாளிகள் படுகொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த 2 படுகொலை சம்பவங்களை சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் கண்ணன் (25). இவர் இந்த 2 படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரும் மற்ற சிலரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கண்ணனிடம் இருந்து அரை பவுன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் குட்டைய காட்டுத் தோட்டத்தில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்த காளியப்பன் மகன் இளையராஜன் (28). இவர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதங்களாக வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் சென்னிமலை அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து இந்த 2 வழக்குகளிலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
- குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
மாஞ்சோலை தேயிலை தோட்டம், மின்கட்டண உயர்வு, வேலை உறுதித்திட்டம், மத்திய அரசின் குற்றவியல் சட்டம் குறித்து 4 நாள் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு என்பது மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி வரும் ஜூலை 29-ந் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
வேலை உறுதி திட்டத்தில் 4 மாத காலமாக வேலையும், ஊதியுமும் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வழங்கப்பட வில்லை என்றால் வேலை உறுதி அளிப்பு சட்டப்படி பாதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு இதற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காமல், வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டம் தனியார் வசம் தான் உள்ளது. 2028-ம் ஆண்டு வரை தனியார் வசம் தான் இருக்கும். ஆனால் அதற்குள் தொழிலா ளர்களை வெளியேற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் வெளியேற்ற கூடாது என்று கூறி உள்ளது. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
- வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.
விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.
- அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
- அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.
சென்னிமலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கோவை, திருப்பூர் வழியாக வரும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது அணைக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 59 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வந்த தண்ணீரில் இருந்த உப்புத்தன்மை (டிடிஎஸ்) 1640 இருந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி நின்றது. அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று பகலில் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 418 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது. நேற்று மாலை அணையில் 11.6 அடி தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் இன்னும் ஒரிரு நாளில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நொய்யல் ஆற்றை யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்று பொது பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலத்திலிருந்து ஈரோடு வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் - ஈரோடு இடையே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதானதால், பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும். பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது, பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது.
பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுநர் பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
- துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
சித்தோடு:
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் கேயன், பஸ்சை உடனடியாக சாலை யோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைப்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகு தியில் மின்சாரம் இல்லாமல் 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
மலை கிராமம் கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளிதிம்பம், தடசலட்டி என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.
மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகிலுள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.
- யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையில் சுற்றி வருவதும், சிலசமயம் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் யானையை பார்த்ததும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரமாக சாலையிலேயே நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நின்று கொண்டிருந்த யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் யானை அருகே நின்று செல்பி எடுத்த நபர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று பவானிசாகர் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 661 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 74.73 அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.
- கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 399 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 70.93 அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கனஅடி என மொத்தம் 955 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.
- மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும்.
- பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும்.
மலை கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அந்த சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மாயாற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்தானதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கறைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கும் மாணவர்கள் மற்றும் வியாபாரத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் நீண்ட வருடமாக தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






