என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தியாகத்தின் திருஉருவமாய் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி உள்ளோம். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்த பெருமை தீரன் சின்னமலைக்கு உண்டு. ஆனாலும் பிரிட்டிஷ்காரர்களால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வேங்கை, தீப்பொறி இந்த மண்ணிலிருந்து பிறந்தது. இது போன்ற தலைவர்கள் வாங்கி கொடுத்த இந்த சுதந்திரத்தை இன்று கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச சக்திகள். சுதந்திரத்துக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடியவர் தீரன் சின்னமலை. அவரை எப்படி பிரிட்டிஷ்காரர்கள் பலி வாங்கினார்களோ அதே போல் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்தவர்களையும் அவர்கள் பலி வாங்கினர். அவரைப் போன்று இப்பவும் சுதந்திரத்துக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். அவர் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான வழக்குகள் போடப்படும் நிலை இந்த மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது. போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும். பா.ஜ.க அரசிடம் தான் ராணுவ அமைப்பு, விமானம், கடற்படை, பிரிவு என பல்வேறு அமைப்புகள் இருக்கு. அவர்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத் தான் போதை பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். அங்கிருந்துதான் தமிழ்நாடு பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என்று சொல்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் எங்கு ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். குஜராத்தில் ஒரு தொழிற்சாலையில் பிடித்திருக்கிறார்கள். அங்கு கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருட்கள் வராது என ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி உள்ளனர்.

    அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து செல்வப்பெருத்தகை கூறும் போது, நாங்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. கொலை வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிறது. பத்தாண்டுகள் ஆகிறது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது அவங்க ஆட்சி தானே நடந்தது.

    கொலை வழக்கில் கண்டபடி யாரையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது. தீவிர புலன் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆகட்டும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி அன்பு என்னிடம் எல்லா விவரத்தையும் கூறியுள்ளார். ஏறக்குறைய குற்றவாளி அருகே நெருங்கி விட்டார்கள். கொலை வழக்குகளை எடுத்தும் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. புலன் விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வர வேண்டும்.

    விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். தி.மு.க.வுடன் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது நாங்கள் யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வதும், ஆடி 18 அன்று தம்பதியர் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் காவிரி தாயை வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உபரி நீராக அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் சன்னதியின் மேல் படிக்கட்டு முதல் தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மூலம் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தகர செட் அமைத்து அடைக்கப்பட்டு பாதுகாப்பு செய்து உள்ளனர். அதேபோல் ஆண், பெண் என பக்தர்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் 2 இடங்களில் சமர்பாத் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொட்டிகள் அமைத்து குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் திதி, மற்றும் தர்ப்பணம் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஷவர் பாத் மற்றும் தொட்டிகளில் நிரப்பட்ட தண்ணீர்களில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் பலர் வந்து ஷவர்களில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனை வழிபட்டனர்.

     

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பலர் கன்னிமார் பூஜை செய்தனர்.

    இதே போல் அம்மாபேட்டை காவிரி கரை பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அம்மாபேட்டை சொக்கநாதன் கோவில் காவிரி கரை படித்துறை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், காட்டூர், நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் பக்தர்கள் பலர் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் பலர் ஷவர்களில் குளித்து விட்டு சொக்கநாதரை வழிபட்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். ஆனால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் காவிரி தாய் வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் மக்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் பொதுமக்கள் கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பக்தர்கள் பலர் தடையை மீறி புனித நீராடி காவிரி தாய் வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் பலர் காளிங்கராயன் வாய்க்காலில் திதி, தர்ப்பணமும் கொடுத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கவில்லை. ஆனால் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் கொடுமுடிக்கு வந்து மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி கூட்டணி ஒத்துழைப்போடு அமைத்த சூழலில் கூட பாராளுமன்ற கூட்டத்தில் வரம்பு மீறி பேசுகிறார்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தி பார்த்து சாதி பற்றி பேசுவது அநாகரிகமான செயல். மட்டமான பேச்சை மத்திய அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தான்.

    மத்திய அமைச்சர்கள் அவதூறாக பேச வேண்டும் என தூண்டி விடுவதால் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி பெரும் தன்மையாக தனது பேச்சில் கண்ணியத்தை கடைப்பிடித்து உள்ளார். மோடியின் சர்வாதிகார தன்மை நீண்ட நாளுக்கு நீடிக்காது.

    நீடித்தால் வன்முறையுடன் அல்லது வன்முறை இல்லாமல் மோடி வீழ்த்தப்படுவார். ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் அவரை துரத்தி விடுவார்கள். அது காந்தி வழியா, நேதாஜி வழியா என்று தெரியவில்லை. புதிய சட்டத்தின் பெயர்கள் இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி இருக்கிறார்கள். இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் நீதிபதிகள் சட்டத்தை பெயர் மாற்றத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தி தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது.

    கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பிரதமர் மோடி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து டியூஷன் எடுக்க வேண்டும்.

    கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொன்னார். மோடி நல்ல தலைவர் என்று சொன்னது கட்சி வளர்ச்சியா? நான் கார்த்தி சிதம்பரம் திருந்துவாறு என்று நினைத்தேன். காங்கிரஸ் கூட்டத்தில் இதுபோன்ற தகவல்கள் வந்ததால் சிறிது நாள் கழித்து கருத்து சொன்னேன். கள் பருகுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்படாது. கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் விற்பனை குறையும்.

    கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். கவர்னர் இமயமலைக்கு சென்று தியானம் செய்வதை விட்டு தமிழகத்தில் ஏன் கவர்னராக மத்திய அரசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய அரசு ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு 10 ஆண்டுகளாக ஆட்சி எதுவும் செய்யாமல் தற்போது ஏன் நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
    • வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தடை.

    காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    பவானி. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில். கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம், அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோயில், நஞ்சைகாளமங்கலம், அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், ஊஞ்சலூர், அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் காவிரி ஆற்றங்காரையின் அருகே உள்ள சிறிய திருக்கோயிலுக்கு வரும் பக்கதர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
    • மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த வாரச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

    இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர். 2018-ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச்சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச் ச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆனால் இதுவரை வாரச் சந்தை அமைக்கப்பட வில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை.

    எனவே மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
    • முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாற்றம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இதில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதேபோல் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டுவதும் பதிவாகி உள்ளது.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகி ன்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சமீபகாலமாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த நபர் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். இது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அந்த நபரால் பெரிய பிரச்சனை ஏற்படும் முன் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மக்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.47 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
    • குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதனை த்தொடர்ந்து மின்சாரமின்றி இந்த மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இன்று 6-வது நாட்களாக அவதி பட்டு வருகின்றனர்.

    மலைகிராமம் கேர்மாளம், ஒசட்டி, காட ட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

    மின்தடையால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட ஜார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.விவசாயிகள் பயிர்களுக்கு நீர்பாச்ச முடியாமலும், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 6-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளித்து பயணில்லை என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கந்தம்பாளையம் பகுதியில் அரசு ஊராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 65 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

    ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுடன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் வகுப்புகளை கற்பதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

    இந்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட ஒரு படி உயர்ந்து தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதலாக ஆங்கிலத்தில் தங்களது பேச்சு, எழுத்து திறன்களை மேம்படுத்தி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதனை கண்ட இடங்களில் தூக்கி வீசாமல் அதனை சேமித்து வைத்து பள்ளியில் ஒப்படைத்து வருகிறார்கள்.

    அந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் வரும் நிதியை கொண்டு பள்ளிக்கு பின்பு சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதில் செடிகளை வைத்து மாணவர்களே பராமரித்து வருவதாகவும் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளை பள்ளி சத்து ணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக உதவி கரம் பெற்று ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை ஆங்கில வழியில் உயர்த்துவதுடன் மாணவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடவும் அவர்கள் வரும் காலங்களில் மேல் படிப்பிற்கு உதவுவ தாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 

    • கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.
    • முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.10 அடியாக அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×