என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன.
    • வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறித்து உணவு இருக்கிறதா? என்று தேடுவதும் தொடர்கதை ஆகிவருகிறது.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை கூட்டம் சாலையைக் கடந்து பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    எனினும் அதே பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    • கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வெகுவிமர்சியாக மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தையுடன் நடைபெற்றது.

    இதையடுத்து தேர்த்திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து குருசாதசாமி கோவிலில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவில் அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்சங்களை காணதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தினமும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.

    இந்த பண்டிகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து குருநாதசாமி கோவில்விழா இன்று பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த பண்டிகைக்காக 9 இடங்களில் பக்தர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. மாடுகளை ஏற்றி வருவதற்காக 45,000 டெம்போக்களும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 1 லட்சம் கார்களில் பக்தர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.

    மேலும் 12 ஆயிரம் மாடுகள், ஆயிரம் குதிரைகள் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குதிரைச் சந்தை பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு தஞ்சாவூர் சாஷ்டராயூனிவர் சிட்டியில் இருந்து 5 பேர் கொண்ட டீம், ஏ, டெக்னாலஜி பயன்படுத்தி பழைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பிக் பாக்கெட் உள்ளிட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்து சறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த முறை 4 இடங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ராட்டணம், சாகச கிணறு, குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன். இதனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் அண்ணா மடுவு ஜி.எச் கார்னர், பஸ் நிலையம் ரவுண்டானா, வெள்ளப்பிள்ளையார் கோயில், வனம், கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு போக்குவரத்தில் சிரமம் இன்றி தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்திருந்தனர்.

    கடந்தாண்டு வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ரவுண்டான பகுதியில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்த மாற்றத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று சரி செய்யப்பட்டது.

    • மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    கர்நாடகா மாநிலம் மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடிமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு காவடிரி ஆற்றில் படகு போக்குவரத்து இருந்து வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு போக்குவரத்து நிறத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதையடுத்து நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி நடந்து வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நெரிஞ்சிபேட்டை - பூலாம் பட்டிக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து படகுகள் நெரிஞ்சிபேட்டை காவிரி கரையோரங்களில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தபட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    • சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவண்ணா என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது.

    நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சிவண்ணா தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றது. காலையில் எழுந்து சிவண்ணா பார்த்த போது ஆடு கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தை கால் தடம் என்பதை உறுதி செய்தனர். இதனைக் கேட்டு விவசாயிகள் பீதி அடைந்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
    • நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கி வருகிறது. 1 கோடியே 79 லட்சம் வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 238 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் 50 சதவீத உற்பத்தி ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் நூல் வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் உற்பத்தி முடிக்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வருடத்திற்கு இதுவரை நூல் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி திட்டத்தில், இந்த ஆண்டு சேலை உற்பத்திக்கு பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருந்தன. இதை போல் பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதை தொடர்ந்து இன்று காலை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கடந்த வருடம் இலவச வேட்டி-சேலை தயாரிக்க எந்த நடைமுறை பின்பற்றபட்டதோ அதே நடைமுறை இந்த வருடமும் பின்பற்றபடும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு விசைத்தறியார்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதை தொடர்ந்து விசைத்தறிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.

    • இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே 420 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

    இதற்கிடையே மேலும் 120 வீடுகள் கட்டுவதற்காக பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பவானிசாகர் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பவானி சாகர் மார்க்கெட் சதுக்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், 15 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பவானிசாகர் அண்ணா நகர் கடை வியாபாரிகள் சங்கம் அனைத்து வணிகர் சங்கம் மூத்த குடிமக்கள் சங்கம் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் சங்கம் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பெரும்பா லும் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 100 குடும்பங்கள் முதல் 300 குடும்பங்கள் வரை மட்டுமே உள்ளனர்.

    ஆனால் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளதால் இங்கு பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.

    எனவே இப்போது உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

    ஏற்கனவே இங்கு வகிக்கும் 420 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கோழிப்பண்ணை பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்ட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே இங்கு இலங்கை தமிழர் முகாமில் மக்கள் தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இங்கு உள்ள முகாம் குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் பவானி சாகர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்டுவதை தவிர்த்து திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    மேலும் தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ளது போல் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் உள்ள ஆயிரம் குடும்பங்களை 300 குடும்பங்களாக குறைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதோடு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனை

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலின் போது தன்னார்வ அமைப்பு நிறுவனங்கள் புற்றுநோய் தாக்கம் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.

    ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்ப தால் புற்றுநோய் கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுத்தது. இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

    13 ஆயிரத்து 89 பேருக்கு சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்து 39 பேர் சோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியப்படி 14 இடங்களில் கட்டண படுக்கை அறை திறந்து வைக்க உள்ளோம். இதில் குளிர்சாதன வசதி, கழிவறை, டி.வி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்ட த்திற்கு எதிராக எடுக்க ப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இரு ப்பது கண்டறியப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொரு ட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பத்தாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவதுமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் போதை பொட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது.
    • பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் நடப்பாண்டு சேலை உற்பத்திக்கான காட்டன் பாவு நூலுக்கு பதில், பாலிஸ்டர் நூல் தருவதாக அறிவித்துள்ளனர். பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது. கைப்பாவில் மட்டும் குறைந்த அளவு பாவு ஓட்ட முடியும்.

    அனைத்து விசைத்தறிகளுக்கும் முழுமையாக பாவு நூல் வழங்க இயலாமல், விசைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். உரிய நேரத்தில் உற்பத்தி செய்து, பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    வெளி மாநிலங்களில் சேலையை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்பட்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    மேலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, தோக்கவாடி, ராஜகவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சடையம்புதூர், கொல்லப்பட்டி, நெசவாளர் காலனி, வெப்படை, பள்ளிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியை சுற்றிலும் ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. அதேபோல் நீலகிரி மாவட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெ க்டர் ராம் பிரபு தலைமையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கர்நாடகா மற்றும் நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார், சிறப்பு இலக்கு படை போலீசார் (எஸ்.டி.எப்), வனத்துறையினருடன் இணைந்து எத்திகட்டி மலை, கல்வீரன் கோவில் மற்றும் கொங்கள்ளி வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம், சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் முக்கியமாக கேரளா வயநாடு நிலச்சரிவு காரணமாக, அங்கு காட்டுக்குள் நடமாடிக்கொண்டு இருந்த மாவோயிஸ்ட்கள் தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் முகாமிடாதபடி மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள், சிறப்பு இலக்கு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து பர்கூர், கடம்பூர், பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி ஆகிய மலை எல்லையோர கிராமங்களிலும் வனப்பகுதியில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கர்நாடக மற்றும் நீலகிரி எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    மேலும் மலைகிராம மக்களிடம் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்தும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். 

    • முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
    • நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேபோல் பில்லூர் அணையிலிருந்தும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரை விட அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இதனால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 126 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 150 கன அடியும் என மொத்தம் 1,055 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.03 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.07 அடியாக உயர்ந்து உள்ளது. ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்ம ட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும்.
    • பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்திகடவு-அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். கலெக்டர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

    இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த 3 பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தி.மு.க. அரசு தான் காரணம்.

    விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.

    பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும். முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.

    1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம் அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு உபரி நீரை கொண்டு அத்திகடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேதி நிர்ணயம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

    • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
    • தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வரு கிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்துக்கு 1500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.

    இதனால் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் விடு முறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை யொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொடிவேரியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது பற்றி தெரியாமல் பல்வேறு பகதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இரு சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். கொடிவேரியில் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து மக்கள் அணைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×