என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பைப் குடோன்"
- கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
- தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் ராவணன். கடையின் பின்பகுதியில் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
இன்று காலை வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப ட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும், குடோன்களுக்கும் பரவி வருவதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நின்று கொண்டனர்.
அதேபோல் அருகில் தனியார் பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கும் கரும்புகை பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அருகில் கடையில் உள்ளவர்கள் அவசர அவசரமாக தங்களது பொருட்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் கடையில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக கரும்புகை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியது. 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. எனினும் தண்ணீர் தேவையான அளவு இல்லை. இதை தொடர்ந்து மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஈரோடு-சத்தி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.






