என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரத்தில் டி.டி.வி. தினகரனை கண்டித்து தீபா பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சிதம்பரம், ஜூன்.12-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று போயஸ் கார்டனுக்கு திடீரென வந்தார். அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தான் தாக்கப்பட்டதாகவும், தீபா பேட்டியளித்தார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தீபா பேரவை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி. மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பிய அவர்கள், திடீரென அவரது உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்ததாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று முத்தரசன் கூறினார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு, செம்மேடு, ஏரிப்பாளையம், தாழம்பட்டு, சிறுவத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியபடி கெடிலம் ஆறு ஓடுகிறது. ஆற்றுப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது.

    ஆற்றுக்குள் லாரிகள் சென்று வரும் வகையில், செம்மண் கொட்டி சாலை அமைத்து, இங்கிருந்து மணலை அள்ளி சென்று வருகிறார்கள்.

    தொடர்ந்து நடந்து வரும், மணல் கொள்ளையால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையிலும், அதிகாரிகள் யாரும் மணல் கொள்ளையை தடுக்க முன்வரவில்லை.

    இந்த நிலையில், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு சென்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட முத்தரசன் பேசுகையில், கடந்த ஒரு ஆண்டாக கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    மேலும் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும், அதிகாரிகள் இதுவரையில் செயல்படுத்தவில்லை.

    மணல் கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்ததாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    நெய்வேலி என்.எல்.சி.யில் இன்று மேற்கூரை சரிந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் மின் உற்பத்தி செய்யப்படும் பாய்லர் பகுதியிலும், மேற்கூரை பகுதியிலும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தினால் பணியில் ஈடுபட்டிருந்த 11 தொழிலாளர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு என்.எல்.சி. பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரியில் அரசு பஸ்சை உடைத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பதட்டம் நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர். இவர் புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று செந்திலின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் வந்திருந்தனர். அவர்கள் புவனகிரி பஸ்நிலையத்திற்குள் சென்று கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் கூறினர்.

    இதனால் வியாபாரிகள் அவசரமாக அவசரமாக கடைகளை மூடினர். அப்போது புவனகிரி பஸ்நிலையத்துக்குள் வந்த அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர்.

    அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து டிரைவர் ராஜரத்தினம் புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து சிதம்பரம் கூடுதல் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பஸ்சை உடைத்ததாக சிதம்பரத்தை சேர்ந்த சிவக்குமார்(35), மாரி என்ற மாரிவளவன்(27), கிளியனூரை சேர்ந்த சிவக்குமார்(36), சிதம்பரத்தை சேர்ந்த பெருசரித்திரன்(28), பாண்டி என்ற ராமச்சந்திரன்(44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து புவனகிரியில் பதட்டம் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கருவேப்பிலங்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தேவங்குடி. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகள் துர்காதேவி (வயது 19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று துர்கா தேவி தனது தம்பியுடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த பாலமுருகன் சாப்பாடு தரும்படி கேட்டார்.

    அதற்கு துர்காதேவி இன்னும் சமைக்கவில்லை என்றார். இதனால் பால முருகன் தனது மகளை திட்டியுள்ளார்.

    தந்தை திட்டியதால் மனவேதனை அடைந்த துர்காதேவி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் துர்காதேவி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருவேப்பி லங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கருவேப்பிலங்குறிச்சியில் போலி டாக்டர் சரவணனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ஊசி, மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலம் அருகே உள்ள வல்லியம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தேவங்குடி சாலையில் மருந்து கடை வைத்துள்ளார்.

    டிப்ளமோ பார்மசி படித்த இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக புகார் கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் தலைமை டாக்டர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரவணன் நடத்தி வந்த மருந்து கடையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது சரவணன் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து போலி டாக்டர் சரவணனை கைது செய்தனர்.

    மேலும் அவர் மருந்து கடையில் வைத்திருந்த ஊசி, மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம் என சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார்.
    சிதம்பரம்:

    மது ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா-வெற்றிவிழா பொதுக்கூட்டம் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    உச்சநீதிமன்றம் வரை சென்று நாம் போராடியதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவால் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். பீகாரில் முதல்- அமைச்சர் நிதீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டுவந்துள்ளார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தி மூடச்செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள். மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள், முன்னேற்றத்தை அன்புமணி ராமதாஸ் தருவார்.

    தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு 9 வழிகள் என்பார்கள். ஆனால் தற்போது நடைபெறும் ஊழலை பார்த்தால், அதற்கு எத்தனை வழிகள் என்பதே தெரியவில்லை. தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது படம் தேவைதானா?. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி நடத்துகிறார்கள். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.


    இனிவரும் காலங்களில் தமிழகத்தை நல்ல ஆட்சியாளர்கள் ஆள வாய்ப்பு கொடுங்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீரமைக்க பல போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. தற்போதும் இந்த பல்கலைக்கழகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்தவில்லையென்றால், பா.ம.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழகத்தில் எண்ணை கிணறுகள் இருக்கக்கூடாது, அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டக்கோரி எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும். தமிழ்நாட்டை காக்க மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை நான் கொடுப்பேன், தமிழக மக்கள் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளிகாற்றுடன் பலத்த மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அக்கினிநட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேகம் கறுத்து மழை பெய்யும் சூழ்நிலை இருந்துவந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. அப்போது சூறாவளிகாற்றும் வீசியது.

    கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி போன்ற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திட்டக்குடி பகுதியில் சூறாவளிகாற்றுடன் மழைபெய்ததால் கீழசெருவாயில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே இருந்த ஆலமரம் வேரோடு சாய்து விழுந்தது. இதனை பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், விக்கிரவாண்டி போன்ற பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் பெய்த இந்த மழையால் ரோடுகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    பலத்தமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து கடலூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், இந்த தடையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி திருமேனி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மனித நேய ஜனநாயக கட்சி தலைமை கழக பேச்சாளர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், என் உணவு, என் உரிமை அதில் தலையிடாதே என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகர செயலாளர் கோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அப்துல்ரஹீம், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர்களான சீதாலட்சுமி, குமார், அவரது மனைவி விஜி மற்றும் இளைய ராஜா ஆகியோருடன் நெய்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பண்ருட்டியில் இருந்து காரில் புறப்பட்டார்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் பண்ருட்டிக்கு புறப்பட்டனர். காடாம் புலியூர் அருகேஉள்ள தாமரை குளம் என்ற இடத்தில் கார்வந்து கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து வடலூர் நோக்கி மற்றொரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் இந்த 2 கார்களும் நேருக்குநேர் மோதி கொண்டன.

    இதில் 2 கார்களின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்வின் மனைவி ஜெயலட்சுமி, அவரது உறவினர்கள் சீதாலட்சுமி, குமார், அவரது மனைவி விஜி, இளையராஜா ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்த அக்‌ஷயகுமார் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 10 பேர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தாவும், பேத்தியும் இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    நாகை மாவட்டம் வக்காரமாரி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 55), விவசாயி. இவர் நேற்று தனது பேத்தி ஜெமி (5)யுடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவிலுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது சொந்த ஊரான வக்காரமாரிக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.

    கொள்ளிடம் ஆற்றுபாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜசேகர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட குழந்தை ஜெமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தாள். ராஜ சேகர் படுகாயம் அடைந்தார்.

    விபத்துகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜசேகரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன்அளிக்காமல் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். தாத்தாவும், பேத்தியும் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாடகங்கள் முடிவுக்கு வந்தால் தான் அ.தி.மு.க. அணிகள் இணைவது சாத்தியம் என்று விருத்தாசலத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    விருத்தாசலம்:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருத்தாசலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. 2 அணிகள் இணையும் என்று நினைக்கிறோம். தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த அணியினர் பல்வேறு விதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அந்த நாடகம் முடிவுக்கு வரும்போது, இணைப்பு சாத்தியாகும்.

    ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் உரிய நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதே போல் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கழகம் விடுபட வேண்டும். அதுவரை எங்களது கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.


    ஜெயலலிதாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோது, டாக்டர்கள் தெரிவித்த தகவல்களை நம்பி தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். அப்போது, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று நான் அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடமும், தம்பிதுரையிடமும் பலமுறை வலியுறுத்தினேன்.

    ஜெயலலிதா கொள்கையின் அடிப்படையில் நல்லது பயக்கின்ற எந்த ஒரு திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். மக்கள் எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம். தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார். ஆனால் தற்போது, கட்சியில் யாரையும் நீக்கமுடியாது என்று கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் தான் பதில் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
    ×