என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: முத்தரசன் பேச்சு
    X

    மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: முத்தரசன் பேச்சு

    மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்ததாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று முத்தரசன் கூறினார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு, செம்மேடு, ஏரிப்பாளையம், தாழம்பட்டு, சிறுவத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியபடி கெடிலம் ஆறு ஓடுகிறது. ஆற்றுப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது.

    ஆற்றுக்குள் லாரிகள் சென்று வரும் வகையில், செம்மண் கொட்டி சாலை அமைத்து, இங்கிருந்து மணலை அள்ளி சென்று வருகிறார்கள்.

    தொடர்ந்து நடந்து வரும், மணல் கொள்ளையால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையிலும், அதிகாரிகள் யாரும் மணல் கொள்ளையை தடுக்க முன்வரவில்லை.

    இந்த நிலையில், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு சென்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட முத்தரசன் பேசுகையில், கடந்த ஒரு ஆண்டாக கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    மேலும் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும், அதிகாரிகள் இதுவரையில் செயல்படுத்தவில்லை.

    மணல் கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்ததாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×