என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிகொல்லையை சேர்ந்தவர் பாவாடை (வயது 36). இவரது மனைவி நதியா (22). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
பாவாடை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நதியாவுக்கும், எறும்பூரைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (22) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 7 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பாவாடை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். மனைவியை கண்டித்தார். உடனே, நதியா கோபம் அடைந்து தனது கள்ளக்காதலன் சுபாஷ் சந்திரபோசுடன் சென்று விட்டார்.
இது தொடர்பாக பாவாடை சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மனைவி நதியா நகை-பணத்துடன் மாயமாகி விட்டார். அவரை கண்டு பிடித்து ஒப்படைக்கும்படி கூறியிருந்தார். ஆனால், போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த பாவாடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் கடலூர் கோர்ட்டில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை நாடி பாவாடை மற்றும் நதியா ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று மாலை பாவாடை கடலூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்தார். அதன் பின்னர் நதியா தனது கள்ளக்காதலன் சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய தாய் மஞ்சுளா ஆகியோருடன் அங்கு வந்தார்.
அங்கு வந்த நதியாவை பார்த்து பாவாடை ஆத்திரம் அடைந்தார். தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி நதியாவை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த சுபாஷ் சந்திரபோசின் தாய் மஞ்சுளாவையும் சரமாரியாக வெட்டி விட்டு ஓட முயன்றார்.
அவரை அங்கு நின்றவர்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த நதியா, மஞ்சுளா ஆகிய 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயம் அடைந்த நதியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோர்ட்டு வளாகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவரே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் தொகுதி எம்.பி., கோ.அரி. இவர் திருத்தணி, முருகப்பா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அ.தி.மு.க. (அம்மா) அணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் அரி எம்.பி நிருபர்களிடம் கூறும் போது “அ.தி.மு.க வை விட்டு சசிகலா, டி.டி.வி தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதற்கு டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ, “சசிகலா பற்றி பேச அரி எம்.பி.க்கு அருகதை இல்லை” என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆதரவாளர்களிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரி.எம்.பி.யின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் பலர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். சசிகலா - தினகரன் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் அரி எம்.பி. புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொண்டாற்றி வருகிறேன். கடந்த 26-ந் தேதி கட்சி ரீதியாக பேட்டி கொடுத்தேன். அதில் சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டு இருந்தேன்.
இதை பார்த்த சசிகலா- தினகரன் ஆதரவாளர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து பேசி வருகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
புகார் மனுவில் கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்களின் செல்போன் எண்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 31 செல்போன் எண்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுபவீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 23-ந் தேதி பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்களது தரப்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர்.
திருமாவளவனும், நெப்போலியனும் கோர்ட்டில் ஆஜராக முடியாதது குறித்து அவரது வக்கீல்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இவர்களது மனுவை நீதிபதி கணேஷ் தள்ளுபடி செய்தார்.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாத திருமாவளவன் மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கணேஷ் வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் குழப்பமான நிலைப்பாட்டால் மாணவர்கள் மருத்துவம் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

நீட் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு தாமாக முன்வந்து அ.தி.மு.க.ஆதரவு அளித்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது.
ராம்நாத் கோவிந்து ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ஆனால் மீராகுமார் ஜனநாயக சிந்தனையாளர் எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மீரா குமாருக்கு நித்தீஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கல்வியை காவிய மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியை எந்தவகையில் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்போம்.
முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. அவரை விசாரிக்காமலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டு அவரை விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடலூர் ஜோதிநகர் பகு தியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 41). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் வீட்டில் இருந்து நேற்று மாலை நெய்வேலி சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு நெய்வேலி மந்தாரக்குப்பம் தபால் நிலையம் அருகே சுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். அவர் காதில் இருந்து ரத்தம் வழிந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை இவர் வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் திடீரென்று 5 அடி நீளமுள்ள கருநாக பாம்பு புகுந்தது.
இதைப்பார்த்ததும் சுந்தரி மற்றும் குழந்தைகள் கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு கருவேப்பிலங்குறிச்சி காட்டில் கொண்டு விடப்பட்டது.
பிடிபட்ட கருநாகபாம்பு விஷத்தன்மை கொண்டதாகும். பாம்பு பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-1 படித்து வந்தார். அந்த சிறுமிக்கும், அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் இன்று திருப்பதி கோவிலில் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.
சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அந்த சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
அப்போது திருமணத்துக்கு திருப்பதிக்கு செல்ல சிறுமியின் குடும்பத்தினர் தயாராக இருந்தனர். இதையடுத்து சிறுமியின் தந்தையை அழைத்து உங்களது மகளுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. எனவே அவளை திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து சிறுமிக்கு இன்று திருப்பதியில் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. போலீசார் அந்த சிறுமியை மீட்டு விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிறுமி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
பண்ருட்டியை அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனசெழியன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமானார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலைவாணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் கருகலைப்பு செய்தனர். தொடர்ந்து கலைவாணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கலைவாணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் கணவர் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கலைவாணியின் உடலை உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கலைவாணியின் உறவினர்கள் கூறியதாவது:-
கலைவாணிக்கு கருகலைப்பு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் கருகலைப்பு செய்ய வியாழக்கிழமை வாருங்கள் என்று கூறியதின் பேரில் நாங்கள் கலைவாணியை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.
தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை கலைவாணிக்கு டாக்டர்கள் கருகலைப்பு சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்து சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து கலைவாணியை வெளியே அழைத்து வந்த போது கலைவாணி எந்தவித அசைவுமின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.
கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கலைவாணியை மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு டாக்டர்களிடம் கேட்டோம். அதற்கு டாக்டர்கள் நாங்களே உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கலைவாணி சுவாசிக்க சிரமப்படுவதாகவும், அவருக்கு சுவாசிக்க செயற்கை சுவாசம் அளிக்கப்போவதாகவும் டாக்டர்கள் கூறினர்.
ஆனால், சிறிது நேரத்தில் கலைவாணி இறந்து விட்டதாக எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். கலைவாணிக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். டாக்டர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன கலைவாணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் கலைவாணியின் உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெய்யலூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தது. பின்னர், அங்கு ஆழ்துளைகிணறு அமைத்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகழகம் என்ற பெயரில் அந்த நிறுவனம் ஆராய்ச்சி பணியை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்ததேதி முடிவடைந்த பிறகும், அந்த இடத்தில் ஆய்வு கழகம் தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதமாக ஆய்வு கழகத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து, வெய்யலூர், மடப்பாக்கம், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், பரிபூரணநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெய்யலூரில் இயங்கி வந்த இயற்கை எரிவாயு ஆய்வு கழகத்தின் ஆராய்ச்சி பணியை நிறுத்த வேண்டும் என்று கோரிக் கை விடுத்தனர். இந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெய்ய லூரில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு கழகம் முன்பு ஒன்று திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வு கழகத்தின் ஆராய்ச்சி பணியை நிறுத்தி, அங்குள்ளவர்கள் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கைக்குழு தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடல் அருகில் நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் 60 ஆண்டுகாலமாக தனிநபர் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றக் கோரி சிலர் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலிசெய்து வெளியேர வேண்டும். இல்லையென்றால் அகற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், துப்புரவு அலுவலர் குமார், நகரஅமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், துப்புரவு ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜே.சி.பி.எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதை அறிந்ததும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். அதனால் எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளை இடித்தால் தீக்குளிக்கப்போவதாக மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜ.தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா மற்றும் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்பு அங்கு கட்டப்பட்டிருந்த 3 வீடுகளையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுபவீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கு விசாரணையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்களது தரப்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர்.
திருமாவளவனும், நெப்போலியனும் கோர்ட்டில் ஆஜராக முடியாதது குறித்து அவரது வக்கீல்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இவர்களது மனுவை நீதிபதி கணேஷ் தள்ளுபடி செய்தார்.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாத திருமாவளவன் மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி நடந்து கொண்டதாக பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் விசாரணை நடத்தினர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.சபா.ராஜேந்திரன் சுபவீர பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக என் மீது வழக்கு போடப்பட்டது. இது எதிர்கட்சியினரை அலைக்கழிக்கவே போடப்பட்ட வழக்காகும்.
தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் ஊதுகுழலாக அ.தி.மு.க.அரசு மாறிவிட்டது. பாரதீய ஜனதாவின் பினாமியாகவும் உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக முதல்-அமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவும் எதிர்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ம.க.யாரை ஆதரிக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரிக்க போவதாக அ.தி.மு.க. தாமாகவே முன்வந்து அறிவித்துள்ளது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது.
நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கக்கோரி வருகிற 29-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பா.ம.க.வினர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். ராஜீவ்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, ராபர்ட் உள்பட 7 பேரை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகையால் பண்ருட்டி நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள கழுதூரை சேர்ந்தவர் சிவா (வயது 38). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (62). கட்டிட தொழிலாளிகளான 2 பேரும் அதே கிராமத்தில் உள்ள பழைய பொருட்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
அப்போது பழமையான ‘பெட்ரோமாஸ்’ விளக்கு ஒன்று இவர்களுக்கு கிடைத்தது. இந்த விளக்கில் அதிக விலை மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக ஏமாற்றி விருத்தாசலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் வேல்முருகன் (45) என்பவரிடம் ரூ.5 கோடிக்கு விற்க ஏற்பாடு செய்தனர்.
இது பற்றி குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசுக்கு தகவல் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெரால்டு, சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சி மற்றும் போலீசார் மாறு வேடத்தில் கழுதூருதுக்கு வந்து சிவா, வேலாயுதத்தை சந்தித்தனர்.
அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை விலைக்கு வாங்குவது போல் பேசினர். அப்போது சிவாவும், வேலாயுதமும் ரூ.5 கோடி கொடுத்தால் விளக்கை தருவோம் என்று கூறினர்.
இதையடுத்து சிவா, வேலாயுதம் ஆகியோரை நுண்ணறிவு பிரிவு போலீசார் கையும்-களவுமாக பிடித்து வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த பழமையான ‘பெட்ரோமாஸ்’ விளக்கை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வேறு யாரிடமும் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 2 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.






