என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: போலீசார் நடவடிக்கை
    X

    சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: போலீசார் நடவடிக்கை

    திருப்பதியில் இன்று நடக்க இருந்த பெண்ணாடத்தை சேர்ந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-1 படித்து வந்தார். அந்த சிறுமிக்கும், அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று திருப்பதி கோவிலில் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அந்த சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது திருமணத்துக்கு திருப்பதிக்கு செல்ல சிறுமியின் குடும்பத்தினர் தயாராக இருந்தனர். இதையடுத்து சிறுமியின் தந்தையை அழைத்து உங்களது மகளுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. எனவே அவளை திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்று போலீசார் கூறினர்.

    இதையடுத்து சிறுமிக்கு இன்று திருப்பதியில் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. போலீசார் அந்த சிறுமியை மீட்டு விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
    Next Story
    ×