என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்(வயது 26). இவருடைய மனைவி தமிழரசி(23). குடும்ப பிரச்சனை காரணமாக கோபாலகிருஷ்ணன் கத்தியால் தமிழரசியின் காலில் வெட்டினார்.
இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள தனது கணவரை பார்க்க தமிழரசி தனது 2 குழந்தைகளுடன் கிளை சிறைக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சிறை கண்காணிப்பாளர் பூவராகமூர்த்தி தமிழரசியிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழரசி சிதம்பரம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று, மாஜிஸ்திரேட்டு பார்த்தீபனிடம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு பார்த்தீபன், கிளை சிறை கண்காணிப்பாளர் பூவராகமூர்த்தியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு எச்சரித்தார்.
மேலும் தமிழரசியின் புகார் குறித்து விசாரணை நடத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #Tamilnews
விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ராமராஜ்ய ரதயாத்திரை பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கேரளா வந்தது. பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக தமிழகத்திற்கு இன்று வந்தது.
இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்தும், ரதயாத்திரை தமிழகத்துக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கடலூர்-புதுவை சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை திரண்டனர். அவர்கள் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலுக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பழனிவேல், செந்தில், ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த கடலூர் போலீசார் அங்கு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேரை கைது செய்தனர். அவர்களை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேப்போல் நெல்லிகுப்பத்தில் திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. கடலூர்- நெல்லிகுப்பம் சாலையில் ம.தி.மு.க. மாவட்ட செலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் முஜிக்கூர் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ராஜரகிமுல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சினர் கலந்து கொண்டனர். சாலை மறியல் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலூர் நான்கு முனை ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்தனர். வடலூர் செயலாளர்கள் கண்ணன்,ஜோதிமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மறியல் செய்தவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று மதியம் 12 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மத்திய-மாநில அரசை கண்டித்தும், திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
விருத்தாசலம்:
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. விருத்தாசலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது தொடங்கி உள்ள பொதுத்தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கும், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர்.
அதன்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி மாணவிக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஊர்நல அலுவலர்கள் கீதா, விஜயா ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசினர்.
18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறி திருமணத்தை நடத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், அவர்கள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயராமன் வேப்பூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் வேப்பூரிலும், சில நாட்கள் ரெட்டாகுறிச்சியிலும் தங்கி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜெயராமன் வேப்பூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ரெட்டாக்குறிச்சிக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் ஜெயராமன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை வேப்பூரில் உள்ள வீட்டுக்கு சென்ற ஜெயராமன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. உடனே பீரோ இருந்த அறைக்கு ஜெயராமன் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இது குறித்து ஜெயராமன் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
பண்ருட்டி:
கடலூர் அருகே உள்ள புதுப்பேட்டை கள்ளான் குட்டை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி, இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 82).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்து விட்டார். சின்னப் பொண்ணு அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் அருகில் பெட்டிக்கடைக்கு சென்று வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு மர்ம மனிதர்கள் சின்னப் பொண்ணு வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்பு அவர்கள் சின்னப் பொண்ணுவின் கை, கால்களை கயிற்றால் கட்டினர். பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை திணித்தனர். அதன் பின்பு அவரை அடித்து கொலை செய்துவிட்டு அவர் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகளையும், ரூ.1½ லட்சம் பணத்தையும் மொத்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர்.
இன்று காலை சின்னப் பொண்ணு வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சின்னப்பொண்ணு கைகள் கயிற்றால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தகவல் அறிந்ததும் அதே பகுதியில் உள்ள சின்னபொண்ணுவின் உறவினர் சிவக்குமார் அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பிணமாக கிடந்த சின்னபொண்ணு உடலை பார்வையிட்டார்.
அதன்பின்பு அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் சவ்வாது உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டுக்குள் பிணமாக கிடந்த சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த கொலையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து வெளியே சென்று ஓடி நின்றது.
அதேபோல் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர்பாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன்காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.
இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லை. ஏரிக்கு நீர் வரத்தும் இல்லை. வெயில் சுட்டெரிப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே சென்னைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இதையடுத்து 54,44,37,27 கன அடி என்று படிப்படியாக தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. நேற்று 18 கனஅடி தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டது.
நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.10 அடியாக இருந்தது. இன்று அது 39.5 அடியாக குறைந்து விட்டது.
எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து விட்டது.
எனவே ஏரியில் இருந்து சென்னைக்கு இன்று அல்லது நாளைக்குள் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என்று கூறினார். #Tamilnews
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வடக்கு பாளையாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வின்சென்ட் (வயது 37) . இவர் சம்பவதன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள தேவாலாயத்துக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த டி.வி., டி.வி.டி. பிளேயர், லேப்-டாப், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தேவாலயத்துக்கு சென்ற ராபர்ட் வின்சென்ட் சிறிது நேரத்தில் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து ராபர்ட் வின்சென்ட் சோழதரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரியஜோசப் ஆரோக்கியதாஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சோழதரம் அருகே உள்ள மா.மங்களம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டார்.
உடனே போலீசார் வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர் மா.காடு வெட்டி பகுதியை சேர்ந்த சேகர் (வயது 32) என்பதும், அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் செல்வமணி (34) என்பவரும் சேர்ந்து ராபர்ட் வின்சென்ட் வீட்டில்பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சேகர், செல்வமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிசென்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையில் போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சோதனை செய்தனர். அப்போது கடலூர் முதுநகர் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் 250 லிட்டர் சாராயம் கடத்தி சென்றது. தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சிறைச் சாலையில் அடைத்தனர்.
இவர் மீது கடலூர் மதுவிலக்கு, சிதம்பரம் மதுவிலக்கு மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் குற்ற செயலை கட்டுபடுத்துவதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை கலெக்டர் தண்டபாணி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையொட்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு அபிநயா(வயது 12) என்ற மகள் இருந்தாள். இவர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலையில் அபிநயா தனது தோழிகளுடன் கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தாமதமாக வந்தார். ஏன் தாமதமாக வந்தாய் என அபிநயாவை அவரது தாய் சுமதி கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அபிநயா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பண்ருட்டி அருகே காமாட்சிபேட்டையில் உள்ள அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு பாலபாஸ்கர் (வயது 21) என்பவர் பொதுப்பணித்துறை சார்பில் மணல் ஏற்றி செல்வதற்கு அனுமதி சீட்டு கொடுக்கும் பணி செய்து வருகிறார்.
நேற்று மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்ற வந்தவர்களுக்கு பாலபாஸ்கர் அனுமதி சீட்டு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மணல் குவாரிக்கு பெரியஎலந்தம்பட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அப்பர் வந்தார். ஏன் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் பணம் வசூல் செய்கிறீர்கள் என பாலபாஸ்கரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அப்பர் ஆத்திரம் அடைந்து பாலபாஸ்கரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசில் பாலபாஸ்கர் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் அக்பர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews






