என் மலர்
கடலூர்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவளநகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(வயது54). உதவி சப்-இன்ஸ்பெக்டரான இவர் புதுவை கவர்னர் கிரண்பேடியின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை புதுவையில் இருந்து கடலூர் புறப்பட்டார்.
செம்மண்டலம் அருகே சென்ற போது, அவர் மீது அந்த வழியாக வந்த வேன் திடீரென மோதியது. இதில் கிருஷ்ணராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
கடலூர் பெருநகராட்சி சார்பில் இரவு நேர துப்புரவு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பூக்கடை வீதி, லாரன்ஸ் ரோடு, வணிக வளாக பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற இரவு பணிகள் தொடர்ச்சியாக அனைத்து பிரதான சாலைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்கான இரு வகையான குப்பைத்தொட்டிகள் வைத்து அதில் தாங்களாகவே தங்கள் குப்பைகளை போட்டுச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் பெருநகராட்சி ஆணையர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் எழில்மதனா, நகர அமைப்பு அலுவலர் அன்பு, நகராட்சி மேலாளர் பழனி, உதவி பொறியாளர் தங்கதுரை, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் தங்கமணி, வருவாய் அலுவலர் முத்துசெல்வம் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வடகரை. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு அங்குள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் சீரான முறையில் வடகரை கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், மனுக்களும் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று மதியம் 12 மணியளவில் வடகரை கிராம பெண்கள் சிலர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் வடகரை- பெண்ணாடம் சாலை ஓரத்தில் காலிக்குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (வயது 46).
இவர் நேற்று மாலை அதேப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். அங்கு பணம் கட்டிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். 21-வது வட்டத்தில் உள்ள சாலையில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென சிவகாமி சுந்தரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்கைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சிவகாமி சுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 60) அதே பகுதியில் கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் விறகு ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு சென்றார்.
அறிவழகனை தொடர்ந்து பின்னால் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கார்த்தி (30) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் ஹாரன் அடித்தார். ஆனால் அறிவழகன் வழிவிடவில்லை. இதையடுத்து கார்த்தி வேகமாக முன்னால் சென்று அறிவழகனை மறித்தார்.
அப்போது ஹாரன் அடித்தும் ஏன் வழிவிடவில்லை என கூறி அறிவழகனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் கார்த்தி ஆத்திரமடைந்து விறகு கட்டையால் அறிவழகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அறிவழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தார். #Tamilnews
பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(வயது 82).
கடந்த 16-ந் தேதி காலையில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்த நிலையில் சின்னப்பொண்ணு வீட்டில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு அவரது கழுத்து, மூக்கு, காதில் அணிந்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் கல்லாங்குட்டை தெருவில் விசாரணை நடத்தினர்.
அப்போது கல்லாங்குட்டை தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சத்யா(37) என்பவர், கடந்த 16-ந் தேதி முதல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் சத்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சின்னப்பொண்ணுவை கொலை செய்து விட்டு, ஓசூரில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஓசூருக்கு சென்று, சத்யாவையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.
சத்யா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், கணேசனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஓராண்டுக்கு பிறகு கணேசன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து நான், செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றேன்.
அப்போது அங்கு வேலைக்கு வந்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த செல்வம்(44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். மேலும் செல்வம், எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஒருநாள் செல்வம், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டால் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் கூறினார்.
உடனே எனக்கு சின்னப்பொண்ணுவின் ஞாபகம் வந்தது. ஏனெனில் அவர் எப்போதும் கழுத்து, காது, மூக்கில் நகை அணிந்திருப்பார். மேலும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். பலருக்கு வட்டிக்கும் பணம் கொடுத்திருந்தார்.
எனவே அவரிடம் நகை மற்றும் பணம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். அவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று செல்வத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
அதன்படி கடந்த 15-ந் தேதி இரவு நானும், செல்வமும் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் கை, கால்களை கயிற்றால் கட்டினோம். அப்போது அவர் சத்தம்போட முயன்றதால் சின்னப்பொண்ணுவின் வாயில் துணியை வைத்து திணித்தோம்.
மேலும் தலையணையால் அவரது மூக்கில் அழுத்தினோம். அதில் அவர் இறந்தார். இதையடுத்து சின்னப்பொண்ணு காது, மூக்கு, கழுத்தில் அணிந்திருந்த நகை, வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஓசூருக்கு சென்று விட்டோம்.
இவ்வாறு அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து 3 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த புதுப்பேட்டை போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார். #Tamilnews
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புது விளாங்குளத்தை சேர்ந்தவர் வீரசெல்வன் (வயது 21), ஐ.டி.ஐ. படித்து முடித்திருந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த சசிகலா (20) வும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சசிகலா விஜயமாநகரம் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசில் சசிகலாவின் தந்தை புகார் செய்தார். அதில் சசிகலாவின் தற்கொலைக்கு வீரசெல்வன்தான் காரனம் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரசெல்வத்தை கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீரசெல்வன் ஜாமீனில் வெளியே வந்தார். தனது காதலி தற்கொலை செய்து கொண்ட இடமான விஜயமாநகரத்துக்கு இன்று காலை சென்றார். அப்போது அந்த வழியாக ரெயில் வந்தது. தன் காதலியைபோல் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உடல் துண்டாகி பிணமாக கிடந்த வீரசெல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒருவர் மருத்துவபடிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், விருத்தாசலம் வள்ளலார் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவக்குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சங்கர், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnews
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கி.பாளையம் புது தெரு பகுதியை சேர்ந்தவர் தரணி சிங்(வயது42). கூலி தொழிலாளி
இவரது மனைவி சுமதி(வயது35). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஷோபனா(11), ஜெகதீஸ்வரி(9),என்ற 2 மகள்களும் சஞ்சய்(5) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தரணி சிங்குக்கு அவரது மனைவி சுமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தரணி சிங்கும் அவரது மனைவி சுமதியும் கி.பாளையம் ஏரிக்கரை அருகே உள்ள வயல் பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றனர்.
அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தரணிசிங் தனது மனைவி சுமதியை சரமாரியாக தாக்கினார். அங்கு வேலை செய்து கொண்டவர்கள் கணவன்- மனைவி இருவரையும் சமதானம் செய்தனர். அதன் பின்னர் வேலை முடிந்து மாலையில் தரணி சிங், சுமதி ஆகிய இருவரும் வீடு திரும்பினர்.
வீட்டிற்கு வந்த பின்னரும் ஆத்திரம் தணியாமல் இருந்த தரணி சிங் தனது மனைவி சுமதியை தாக்கினார். பின்னர் சுமதி கட்டி இருந்த சேலையால் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தரணி சிங்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொளத்தகுறிச்சியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது31). இவரது மனைவி செல்வராணி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.
தற்போது ரவிச்சந்திரன் வெளிநாட்டில் கூலி வேலைப்பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராணி வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் ரவிச்சந்திரன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும்.
உடனே ஊருக்கு வாருங்கள் என கூறினார். ஆனால் ரவிச்சந்திரன் தற்போது அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை எனக் கூறி ஊருக்கு வர மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த செல்வராணி நேற்று மாலை வீட்டில் உள்ள விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வ ராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே செல்வராணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்ய பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 6 வருடத்தில் செல்வராணி இறந்ததால் சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராஜேந்திரனும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன செல்வராணிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் 24-வது மாநில மாநாட்டு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கம்யூனிஸ்டு கட்சிகளையும், திராவிட இயக்கங்களையும் ஒழிக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதை முறியடித்து மதசார்பற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாடுபட்டு வருகிறோம். மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும். காவிரி தண்ணீர் மறுக்கப்படுகிறது. அதை பாதுகாத்து மீட்டெடுக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. கட்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளை முறியடிக்க நாம் வலுப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தமிழக மக்களின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும், மூடநம்பிக்கைகளை அகற்றுவதற்காகவும் பாடுபட்ட பெரியாரின் சிலை உடைக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலைக்கு பூட்டுப்போடப்படுகிறது. பூட்டுபோடப்படாத சிலையே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உள்ளது.
ராமராஜ்ய ரத யாத்திரையை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமருக்கு கோவில் அமைப்போம், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறி சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அமைதியை குலைக்க வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி வருகிற 30-ந் தேதிக்குள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகளும், நலன்களும் பறிக்கப்படுவதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கைப்பார்க்கிறது. மத்திய, மாநில அரசுகளை அகற்றும் யுத்தத்துக்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம், பொருளாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மீனவர் தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 30). இவர் சைக்கிளில் சென்று டீ விற்கும் தொழில் செய்து வருகிறார். அப்பாஸ் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கி நின்றது. இது தொடர்பாக அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தமிழரசன் மற்றும் அவரது உறவினர்கள் அப்பாசை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை விருத்தாசலம்- திட்டக்குடி சாலையோரம் தேரடி தெருவில் உள்ள மளிகை கடையில் அப்பாஸ் டீ கப்புகள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் அப்பாசை மீண்டும் தாக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பாஸ் கையில் மண்எண்ணை கேனுடன் அதே பகுதியில் 200 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார்.
பின்னர் அவர் கையில் வைத்திருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றினார். பின்னர் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பாசிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் தன்னை தாக்கிய தமிழரசன், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முதலில் நீங்கள் கீழே இறங்கி வாருங்கள். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனை ஏற்காத அப்பாஸ் கீழே இறங்கி வர மறுத்தார்.
இதைத்தொடர்ந்து அப்பாசின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களும் அப்பாசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
1 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்பாஸ் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
உடனே அப்பாசை பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அப்பாஸ் அந்த பகுதியில் நின்ற பஸ்சின் கீழே படுத்துக் கொண்டார்.
பின்னர் அப்பாசை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






