என் மலர்tooltip icon

    கடலூர்

    காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பஸ்சை மறித்து கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் உழவர்சந்தை அருகே இன்று காலை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், நகர செயலாளர் ராமசாமி, மணிமாறன், சேகர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டனர். பின்பு அவர்கள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மஞ்சக்குப்பத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் நாடளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். பின்பு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சை மறித்து அதன்மேல் ஏறி கோ‌ஷம் எழுப்பினர்.

    இதில் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சி.ஐ.டி.யூ. சார்பில் மஞ்சக்குப்பம் தபால்நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அருகே உள்ள மேல் பட்டாம்பாக்கத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் கூட்டணி கட்சியினர் திரண்டனர். பின்பு அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் மாட்டம் சிதம்பரம் அருகே உள்ள நீதிக்குடி ரெயில்வே கேட் அருகில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் இன்று ஏராளமானோர் திரண்டனர்.

    அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அந்த ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி எனது தலைமையில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    அதன்பின்பு ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் விவசாய சங்கங்களுடன் இணைந்து நடைபெறும் போராட்டம் ஆகும்.

    மேலும் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் மக்களுக்காக போராடி வருகிறது. இதே போல் ஆளும்கட்சியும் போராட்டம் நடத்தி வருகிறது.

    ஆனால் ஆளுங்கட்சி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தை மத்திய அரசும், கர்நாடகா அரசும் அர்த்தம் புரியவில்லை என தெரிவித்துள்ளது.

    ஆனால் நான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைவரும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்க தமிழக அரசை வலியுறுத்தினோம். ஆனால் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.


    தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆட்சி தொடர்வதற்கான காரணம் மத்திய அரசு தான் என அவர்களே கூறியுள்ளனர். அதனால் தான் மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது.

    மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது.

    தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த சலுகையும் வழங்காமல் குழி தோண்டி புதைக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த எம்.பி.தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும்.

    திருச்சி விமான நிலையத்தில் நடந்த முற்றுகை போராட்டத்தை நாங்கள் அறிவிக்கவில்லை. விவசாயிகள் கூட்டமைப்பினர் எங்களுக்கு அழைப்பு விடுத்ததால் நான் கலந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சி எத்தனை நாட்கள் தொடரும் என கேட்டனர்.

    அப்போது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி நீடிக்குமா என்பது குறித்து தெரிந்துவிடும் என்றார். #Tamilnews
    சேத்தியாத்தோப்பு அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை தீர்த்துகட்டியதாக கைதான காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி(வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி காலை வழக்கம்போல் வைத்தீஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்டு புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அன்று அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில், பரதூர் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பரதூருக்கு செல்லும் சாலையோரம் முட்புதரில் நேற்று அதிகாலை வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரியின் பெற்றோர் ஒரத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில் எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

    இதையொட்டி புவனகிரிக்கு சென்று வைத்தீஸ்வரி வேலை செய்து வந்த ஜவுளிக்கடைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் வைத்தீஸ்வரியும் பரதூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 26) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பாலியல் பலாத்கார முயற்சியில் வைத்தீஸ்வரியை கொன்றதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், வைத்தீஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். 3 முறை ஜவுளிக்கடைக்கு சென்று அவளை பார்த்து பேசியுள்ளேன். உறவினர் ஒருவரின் போன் மூலம் அவளிடம் பேசி வந்தேன். சம்பவத்தன்று பரதூர் சாவடியில் வைத்தீஸ்வரியும், நானும் பஸ் நிலையத்தில் இருந்து பேசிக்கொண்டே நடந்து வந்தோம்.

    பின்னர் அவளை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஆசைவார்த்தை கூறி வைத்தீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள்.

    தொடர்ந்து நான் அவளை பலாத்காரம் செய்ய முயன்று, அவளை அடித்தேன். அதில் அவள் மயங்கி விழுந்தாள்.

    உடனே நான் அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வந்து பார்த்தேன், அங்கு வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தாள். இதில் எனக்கு பயம் வந்தது. இதையடுத்து அவளது உடலை முட்புதருக்குள் மறைத்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன். போலீஸ் விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். #Tamilnews
    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராசுமதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மணிமாறனின் மூத்த மகள் வைத்தீஸ்வரி (வயது 16). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புவனகிரியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தினமும் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாவடி வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் வேலைக்கு சென்றார்.

    கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வைத்தீஸ்வரியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பரதூர் அருகே முட்புதரில் வைத்தீஸ்வரி பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வைத்தீஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் ஜவகர்லால், சுந்தரவடிவேல், ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வைத்தீஸ்வரியின் உடலை பார்வையிட்டனர். அவரது முகம் மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது.

    இதையடுத்து வைத்தீஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வைத்தீஸ்வரியின் தந்தை மணிமாறன் ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    பிணமாக கிடந்த வைத்தீஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக பரதூர் பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Tamilnews
    சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி ஒரு கார் புறப்பட்டது. அந்த காரில் 2 பேர் இருந்தனர். இன்று 11 மணி அளவில் அந்த கார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புறவழி சாலையில் தண்டேஸ்வரநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம் பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த 2 பேரும் புதுவையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லிகுப்பம் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த தொழிலாளி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லிகுப்பம்:

    நெல்லிகுப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45) தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அதே பகுதியில் இருக்கும் தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார். அங்கு மின்சார கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காத ஏகாம்பரம் எதிர்பாராதவிதமாக அதை மிதித்து விட்டார். மின்சாரம் தாக்கி அவர் தூக்கிவீசப்பட்டார். இதில் ஏகாம்பரம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த நெல்லிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏகாம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நெல்லிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே பெண்ணை அடித்து கொன்று வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கணபதிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 75). இவரது மனைவி ராசாத்தி (67). இவர்களது மகன் தேவேந்திரன் (40).

    ராஜமாணிக்கத்தின் உறவினர் ராமசாமி (62). இவரது மகன் பச்சையப்பன் (25). இவர் விருத்தாசலத்தில் மளிகை கடையில் வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜாமாணிக்கத்துக்கும், ராமசாமிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று மாலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

    நேற்று இரவு ராஜ மாணிக்கம், அவரது மனைவி ராசாத்தி, மகன் தேவேந்திரன், அவரது மனைவி தேவி (35), மகள் தேஷா (16) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது ராமசாமியின் மகன் பச்சையப்பன் திடீரென்று ராஜமாணிக்கத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த அனைவரையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் ராஜமாணிக்கம், ராஜாத்தி, தேவேந்திரன், தேவி, தேஷா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். வீடு முழுவதும் ரத்தக்கரையாக காணப்பட்டது.

    பின்னர் பச்சையப்பன் ஆத்திரம் அடைந்து ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த 5 பேரும் கூச்சல் போட்டு அலறினர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டுக்குள் படுகாயம் அடைந்து கிடந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    செல்லும் வழியில் ராசாத்தி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பச்சையப்பனை வலைவீசி தேடிவருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே பெண்ணை அடித்து கொன்று வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நெய்வேலியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் மணிகண்டன் (வயது 22).

    இவர் பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள மணிகண்டன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை மணிகண்டன் தனது நண்பர்கள் சிலருடன் நெய்வேலி அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள சாம்பல் ஏரிக்கு குளிக்க சென்றார்.

    மணிகண்டன் மட்டும் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் ஏரி கரையில் அமர்ந்திருந்தனர். ஏரியில் ஆழமான பகுதிக்கு மணிகண்டன் சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அவர் தத்தளித்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

    இதை பார்த்த நண்பர்கள் அலறியடித்து தண்ணீருக்குள் இறங்கி மணி கண்டனை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் நெய்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டது

    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அடுத்த செம்பேறி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி 2 லாரிகளில் அதன் டிரைவர்கள் மணல் அள்ளினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். தகவல் அறிந்த வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து அந்த லாரிகளை விரட்டி சென்றனர்.

    பெண்ணாடம் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது 2 லாரிகளையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து அவர்கள் திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து பெண்ணாடம் போலீசார் லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணத்தில் உடல் நலக்குறைவால் இருந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 83) ஒய்வு பெற்ற ஆசிரியர். எல்.ஐ.சி. முகவராகவும் இருந்தார். இவர் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். பக்கிரிசாமியின் உடலுக்கு ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக சங்கத்தினர், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், கட்டிட தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் ஸ்ரீமுஷ்ணம் மயானத்தில் பக்கிரிசாமியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த பக்கிரிசாமிக்கு வசந்தா என்ற மனைவியும் 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 

    குமாராட்சி அருகே மணல் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்தாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் குமாராட்சி அருகே சி.அரசூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசுமணல் குவாரிசெயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

    சேலம்மாவட்டம் உக்காரபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் (வயது52) என்பவர் மணல் அள்ள லாரியை கொள்ளிடம் ஆற்றுக்கு கொண்டு வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (33), கருணாகரன் (27), பாபு (40), காமராஜ் (35) ஆகியோர் லாரி டிரைவர் லோகநாதனிடம் இங்கு மணல் அள்ள வேண்டும் என்றால் எங்களுக்கு மாமூல்பணம் தரவேண்டும் என கேட்டனர்.

    லோகநாதன் பணம்கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் லோகநாதனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர் சட்டைபையில் வைத்திருந்த ரூ.500 பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த லோகநாதன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து லோகநாதன்குமாராட்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷியாம்சுந்தர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த கண்ணன், கருணாகரன், பாபு, காமராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். #tamilnews

    ×