என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலியில் நள்ளிரவில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி தாண்டவன் குப்பம் எஸ்-பிளாக் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 26). ரவுடி.

    இவர் மீது நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு சசிகுமார் அவரது வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் 5 பேர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்பட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த சசிகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த சசிகுமாரின் நண்பர் வேல்முருகன் அங்கு ஓடி வந்தார். அவர் வருவதை பார்த்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டது. பின்னர் சசிகுமாரின் அருகே சென்று வேல்முருகன் பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் சசிகுமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வேல்முருகன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக சசிகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

    நள்ளிரவில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை, காடாம்புலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தாமரை (வயது 27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேமக்கோட்டை ஏரிக்கரையில் சாராயம் விற்று கொண்டிருந்த செம்மேடு பகுதியை சேர்ந்த சர்க்கரை (75) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் தீபன்நகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எஸ்.என்.சாவடி கெடிலம் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 25), ராஜா (28), செல்வராஜ் மகன் மணிவண்ணன் (27), செம்மண்டலம் கார்த்திக் (49) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுதியுள்ளார்.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கடலூருக்கு இன்று வந்தார். அவர் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் சாவடி கிராமத்தில் வைத்தீஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டர் தண்டபாணியிடம் மனு கொடுத்தார்.

    பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுமி வைத்தீஸ்வரி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக ஆதிதிராவிடர் இல்லாத 3 பேர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வந்தது. இந்த ஒருசில மணி நேரத்தில் ஆதிதிராவிடரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மட்டுமே போலீசார் கைது செய்தனர்.

    இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் புகாரையும் போலீசார் பெறவில்லை.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன், சம்பவத்தை செய்ததுபோல் படம் எடுத்து சமூக வளைதலங்களில் வெளியீடு செய்தது சட்டமீறலாகும். ஜனநாயகத்துக்கு எதிர்ப்பாகும். எனவே இந்த வழக்கு தொடர்பாக கலெக்டரை சந்தித்து இன்று புகார் மனு கொடுத்துள்ளோம். கலெக்டரும் புலன் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

    இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் இல்லாத சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபயணம் நடந்து வருகிறது. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நான் (திருமாவளவன்) உள்பட தோழமை கட்சி தலைவர்கள் அந்த நடைபயணத்தில் பங்கேற்க உள்ளோம்.

    வருகிற 12-ந் தேதி கடலூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு மறுநாள் 13-ந் தேதி கடலூரில் இருந்து அனைத்துக்கட்சி தலைவர்களும் சென்னைக்கு புறப்பட்டு சென்று தமிழக கவர்னரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக பேச உள்ளோம்.

    பிரதமர் மோடி சென்னைக்கு வரும் போது தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தது உள்நோக்கத்தின் செயல்பாடாகும். கவர்னர் இதைனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது திசை திருப்பும் நடவடிக்கையாகும். வன்கொடுமை தடுப்பு சட்டம் சம்பந்தமாக வருகிற 16-ந் தேதி தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை கிண்டல் செய்வது கண்டிக்கத்தக்கது. அவர்களும் தமிழர்கள்தான் என்பதை மறக்க வேண்டாம். நடிகர்கள் நடத்திய போராட்டத்தை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மண்டல தலைவர் திருமாறன், மாநில செயலாளர் திருமார்பன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சிதம்பரத்தில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டனர். இந்த நேரத்தில் மழை பெய்யதா என நினைத்தனர். 

    இந்த நிலையில் இன்று காலை சிதம்பரத்தில் திடீரென தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. இதேப்போல் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சிதம்பரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

    பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் இவருடைய அண்ணனான புவனகிரி கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கணேசன் மகன் குருதேவ் (வயது 29) மற்றும் இவரின் நண்பர் சீர்காழியை சேர்ந்த அபினேஷ் (28) ஆகிய 2 பேரும் நேற்று இரவு புவனகிரியில் இருந்து சாத்தாம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    சாத்தாம்பாடி தபால் நிலையம் தெருவில் சென்ற போது அவர்களை ராஜாவும், அவரின் மகன் கோபியும் கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் வழிமறித்து நிறுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் 2 பேரையும் தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் குருதேவ் மற்றும் அபினேஷ் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்தவுடன் ராஜா, கோபி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    இது குறித்து அந்த கிராம பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜா, கோபி ஆகியோரை வலைவீசி தேடிவந்தனர்.

    இனிமேலும் தலைமறைவாக இருந்தால் எப்படியும் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என அறிந்த ராஜா, கோபி ஆகியோர் நேற்று இரவே புவனகிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சொத்து தகராறு காரணமாக 2 வாலிபர்களும் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    தமிழர்களின் உணர்வை மதித்து அண்ணாபல்கலை கழகத்தின் துணைவேந்தரை கவர்னர் திரும்ப பெற வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறன் தெரிவித்தார்.
    சிதம்பரம்:

    அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேளையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை தமிழக கவர்னர் நியமித்தது தமிழர்களின் இதயத்திலும், தலையிலும் தடிகொண்டு அடித்தாற் போல் உள்ளது.

    தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் சூரப்பா தமிழர்களுக்காக கர்நாடகாவில் காவிரி தண்ணீர் கேட்பாரா? தமிழக மக்களின் உணர்வு சார்ந்த வி‌ஷயங்களுக்கு கவர்னர் மதிப்பு அளிக்க வேண்டும். துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை கவர்னர் திரும்பபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழர்கள் தங்களது ஆளுமைதிறன், மொழிப்புலமை நாகரீகத்தால் உலகத்தில் சிறந்து விளங்குகின்றனர். உலகெங்கும் பரந்து விரிந்துள்ள பல்வேறு நாடுகளில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் தமிழர்கள்.

    தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசியல் சான்றோர்கள் குறிப்பாக ஜனாதிபதி தொடங்கி, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் நான் உள்ளிட்ட இந்தியாவில் பலரை அறிவுசார்ந்து உருவாக்கிய பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த பல்கலைகழக துணைவேந்தர் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மற்ற மாநிலத்தவரை நியமிக்ககூடாது. தமிழரைத்தான் துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    எனவே தமிழர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி பெரியதல்ல. தமிழக மக்களின் உரிமைதான் முக்கியம் இந்த நோக்கில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலூரில் போராட்டம் நடத்த முயன்ற முகநூல் நண்பர்கள் குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அதுபோல் மாணவர்களும் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை முகநூல் நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்துள்ளோம். போராட்டம் முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து கலைந்து சென்று விடுவோம் என்றனர்.

    ஆனால், இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என போலீசார் திட்ட வட்டமாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் நாங்கள் போராட்டம் செய்து விட்டுதான் செல்வோம் என உறுதியாக கூறினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு முகநூல் நண்பர்கள் குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள கீழ்வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 20). இவர் தனது நண்பருடன் மோட்டார்சைக்கிளில் நெய்வேலி இந்திராநகர் எம்.ஆர்.கே.சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 4 பேர் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

    பின்னர் அவர்கள் துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கட்டையால் தாக்கி விட்டு சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த துரைராஜ் என்.எல்.சி.பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசை கண்டித்து நாளை கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    விழுப்புரம்

    விழுப்புரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளர் வெங்கடேசன் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி கண்காணிப்பு மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    இந்த ஆணையை ஏற்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கண்டித்து வருகின்றது.

    நாளை (7-ந் தேதி) காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள தபால் நிலையம் முன்பு விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும், தே.மு.தி.க.நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    கடலூர் துறைமுக பகுதியை நோக்கி பிரமாண்டமான மர்ம கப்பல் ஒன்று இன்று காலை வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர்-நாகப்பட்டினம் வரை உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கொண்டு வந்தால் கடலூர், நாகை மாவட்டம் பாலைவனமாக மாறும். கடல் வளம் முற்றிலும் அழியும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுக பகுதியை நோக்கி பிரமாண்டமான கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. பின்னர் அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து நீண்ட தூரத்தில் நின்றது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான பணிக்கு கப்பல் வந்திருக்கலாம் என்று நினைத்து பீதி அடைந்தனர்.

    இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, துறைமுக பகுதியில் நீண்ட தூரத்தில் கப்பல் காலையில் இருந்தே நின்று கொண்டிருக்கிறது. அந்த கப்பல் துறைமுகத்துக்கு வர வேண்டும் என்றால் முறைப்படி எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இதுவரை அனுமதி பெறவில்லை. மேலும் அந்த கப்பல் எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்கள்.

    கடலூர் துறைமுக பகுதியில் நின்று கொண்டிருக்கும் மர்ம கப்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  #Tamilnews
    வேப்பூர் அருகே மரத்தில் மினி லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). விவசாயி.

    இவரது உறவினர் வேப்பூர் அருகே உள்ள நிராமணி கிராமத்தில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சீனிவாசன், அவரது மகள் ஜீவா (19), மற்றும் உறவினர்கள் ஜெயராமனின் மனைவி அமுதா (40), கலியம்மாள் (55), தமிழரசன் (52) உள்பட 30 பேர் இன்று காலை ஒரு மினி லாரியில் நிராமணிக்கு புறப்பட்டனர்.

    மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவர் ஓட்டிச் சென்றார். சேலம்- விருத்தாசலம் சாலையில் வேப்பூர் கூட்ரோடு அருகே சென்றபோது மினி லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்னர் சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. மினி லாரியில் இருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர். இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

    மினி லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த அமுதா, ஜீவா, கலியம்மாள், தமிழரசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த ஜீவா சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Tamilnews
    ×