என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபினேஷ்-குருதேவ்
    X
    அபினேஷ்-குருதேவ்

    புவனகிரி அருகே 2 வாலிபர்கள் கொலை: தந்தை-மகன் கைது

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் இவருடைய அண்ணனான புவனகிரி கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கணேசன் மகன் குருதேவ் (வயது 29) மற்றும் இவரின் நண்பர் சீர்காழியை சேர்ந்த அபினேஷ் (28) ஆகிய 2 பேரும் நேற்று இரவு புவனகிரியில் இருந்து சாத்தாம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    சாத்தாம்பாடி தபால் நிலையம் தெருவில் சென்ற போது அவர்களை ராஜாவும், அவரின் மகன் கோபியும் கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் வழிமறித்து நிறுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் 2 பேரையும் தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் குருதேவ் மற்றும் அபினேஷ் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்தவுடன் ராஜா, கோபி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    இது குறித்து அந்த கிராம பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜா, கோபி ஆகியோரை வலைவீசி தேடிவந்தனர்.

    இனிமேலும் தலைமறைவாக இருந்தால் எப்படியும் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என அறிந்த ராஜா, கோபி ஆகியோர் நேற்று இரவே புவனகிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சொத்து தகராறு காரணமாக 2 வாலிபர்களும் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×