search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் சோதனை"

    • சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
    • தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர்காரர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிகளுக்கு தொடர்பில்லாத வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தேர்தல் பிரசாரத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியவர்கள் பிரசாரம் முடிவடைந்த பிறகும் லாட்ஜ்-களில் தங்கியுள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் லாட்ஜ்-கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலையில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்றும் சோதனை தொடர்கிறது. போலீசார் நடத்தும் இந்த சோதனையின் போது லாட்ஜ்-களில் தங்கியுள்ளவர்களின் முகவரி மற்றும் அவர்களது அடையாள அட்டை ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இந்த சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.

    தேர்தல் நாளில் தேவையில்லாத வெளியூர் நபர்கள் உள்ளூர்களில் தங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டே இந்த வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு, கோயம்பேடு உள்பட அனைத்து பகுதிகளிலுமே லாட்ஜ்-களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனை இன்று பகலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரவிலும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
    • பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பழனி கோவிலுக்கு ரெயிலில் வருகை தந்தார். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பழனி ரெயில்நிலையம் வந்தபோது கேரளாவை சேர்ந்த 3 பேர் பழனி ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்துள்ளனர். அவர்களை ஏற்கனவே கேரளாவில் பார்த்திருந்த முருகேசன் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற அவர் கேரள மாநில டி.ஜி.பி.க்கு பழனி ரெயில் நிலையத்தில் நடந்த விபரங்கள்குறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் அங்கிருந்து தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுனில்குமார், பழனி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சேர்ந்து வெடிகுண்டு உள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பை தொட்டி, கடைகள், ரெயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்துவரும் 3 நாட்களுக்கும் தொடர் சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறுகையில்,

    பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே ஒரு நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாக அந்த நபர் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர்.
    • பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு நடைபெற்ற அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

    இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சுந்தர் தயாள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருகிறார். கவர்னர் பல்கலைக்கழகத்திற்கு வரும் நேரத்தில் போலீசார் ஒருபுறம் சோதனை நடத்தி வருவதும், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருவதாலும் பல்கலைக் கழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கவர்னர் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது.
    • வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற போலீசார் அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து போலீசார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை
    • வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் ரூ 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் நிரந்தரமாக எத்தனை பேர் வசிக்கின்றனர் புதிதாக யாராவது தங்கி உள்ளார்களா எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    இதேபோல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் குடியிருப்புகள் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

    குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டர் முதல் அனைத்து இடங்களும் பலத்த சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்.

    இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி. ஐ. ஜி. முத்துசாமி உள்ளிட்டோர் பொது க்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வருகிறது.
    • போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பெரும் கோர விபத்தில் 7 பேர் பலியாகியும், 88 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் பூண்டியாங்குப்பம் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியும் விபத்து ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே தொடர் விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம், பொதுமக்கள் நலன் கருதி மிக பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

    குடி போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதனை இரு சக்கரம், கார் மற்றும் கனரக வாகன டிரைவர்களை போலீசார் சோதனை செய்வது வழக்கம். ஆனால் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை சோதனை செய்வது இல்லை.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்களை நிறுத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயணிகளை ஏற்றி வந்த அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி பஸ் டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டுகிறார்களா? என்பதனை மெஷின் மூலம் சோதனை செய்தனர்.

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்களை நிறுத்தி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் டிரைவர்களிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் இரவில் மது அருந்தி விட்டு காலையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

    மேலும் டிரைவர்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. உடல் உபாதைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பஸ்களை ஓட்டுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பஸ் டிரைவர்களை போலீசார் அதிரடியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஏனென்றால் அனைத்து வாகன டிரைவர்களையும் சோதனை செய்யும் நிலையில் பஸ் டிரைவர்களை இதுபோன்ற சோதனை செய்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் தவிர்த்து வந்த நிலையில் தொடர் விபத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் இன்றுடன் இந்த சோதனையை நிறுத்தாமல் தொடர் நடவடிக்கையாக இதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர மற்றும் போலீசார் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மாநில எல்லைகளான கர்நாடக மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனைச்சாவடி மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.
    • வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் பனங்காடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தேடி கண்டுபிடிக்கும் டிடெக்டர் கருவி மூலம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 1 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர்.

    இதுபற்றி தகவல் வெளியானதும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதன் காரணமாக நேற்று மாலை 3 மணியுடன் போலீசார் தங்கள் சோதனைகளை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இன்று 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்திய இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கையில் இருந்து ராமேசுவரம் வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் பாம்பன் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் வசித்த வீட்டின் அருகில் இருந்து ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி அந்த பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் கடத்தல் காரர்கள் போதை பொருட்களும் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • போரூர், மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    போரூர்:

    குற்ற வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு நபர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவர்களது முகத்தை ஸ்கேன் செய்யும் செயலியை ஏற்கனவே போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இந்த செயலியில் ஒருவரது முகத்தை ஸ்கேன் செய்யும்போது அவர்களது பழைய குற்ற விபரம் மற்றும் தேடப்படும் குற்றவாளியா? என்பது தெரியவரும். இந்த செயலி மூலம் போரூரில் தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    போரூர், மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குற்றவாளிகளை கண்டறியும் செயலி (எப்.ஆர்.எஸ் ஆப்) மூலம் ஆய்வு (சோதனை) செய்தனர்.

    அப்போது அவன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற கர்லிங் கார்த்திக் (வயது27) என்பது தெரிந்தது. ரவுடியான அவன் மீது ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு இருப்பதும் 2 வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து கர்லிங் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை வைத்தீஸ்வரன் கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    • ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதுவை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.

    இதற்கிடையே புதுவை மாநிலத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் புதுவையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் வந்தது.

    மேலும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகளும் அவரவர் வீடுகளில் பதுங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுபற்றி புதுவை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசாரின் அதிரடி சோதனையால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.

    ×