என் மலர்
கடலூர்
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. காலையில் சீற்றம் இல்லாமல் அலைகள் அமைதியாக இருந்து வருகிறது.
ஆனால் கடலூர் தாழங்குடா கடற்கரை ஓரத்தில் இன்று காலை ஆழ்கடல் பவளப்பாறையில் வசிக்கும் பாம்புகள் உயிருடன் கரையில் ஊர்ந்து சென்றன.
இதனை காலையில் கடற்கரையோரமாக நடந்து சென்ற மீனவர்கள் பார்த்து செல்போனில் படம் எடுத்தனர். மேலும் இத்தகவல் மீனவர் பகுதி மக்களுக்கு தெரிந்தவுடன் அனைவரும் கடற்கரை பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் இந்த அரியவகை பாம்புகளை பிடித்து மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டாலும் அவை கரையை நோக்கியே வந்தது.

மேலும் தாழங்குடா பகுதியில் அழுகிய நிலையில் இன்று காலை ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த அரிய வகை பாம்புகள் மற்றும் இறந்த திமிங்கலம் கரைஒதுங்கி இருக்கலாம். இந்த அரியவகை பாம்புகள், நாங்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது ஏதோ ஒரு சில நாட்களில் பார்ப்போம்.
மற்ற நாட்களில் இந்த வகை பாம்புகளை பார்க்க முடியாது. பெரும்பாலும் இந்த வகை பாம்புகள் பவளபாறைகள் அருகில் இருந்து வரும். தற்போது கடற்கரையில் நாங்கள் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியம் கலந்து சந்தோஷமாக இருந்து உள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி என்கிற கண்மணிராஜா(வயது 32). தொழிலாளி. இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
இவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான ஜமுனாராணிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜமுனாராணி கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தையை கண்மணிராஜா திடீரென பறித்து தரையில் ஓங்கி அடித்தார்.
இதில் அந்த குழந்தை இறந்தது. பின்னர் அங்குள்ள குளத்தின் கரையோரத்தில் உள்ள வாழைமரத்தின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அந்த குழந்தையை கண்மணிராஜா புதைத்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜமுனாராணி கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கண்மணிராஜாவை போலீசார் கைது செய்தனர். போலீசார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பெண்குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து போலீசில் கண்மணி ராஜா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 7-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலிவேலைக்கு சென்றேன். எனக்கும், ஜமுனாராணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையில் 3-வதாக கர்ப்பமான எனது மனைவிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் ஜமுனா ராணியிடம் கூறினேன். ஆனால் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவு கோபம் வரும். குழந்தையை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி 19-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். உடனே எனக்கு சாப்பாடு போட்டு தருமாறு எனது மனைவியிடம் கூறினேன்.
அதற்கு என் மனைவி, குழந்தையை வைத்திருப்பதாகவும், சாப்பாட்டை நீயே போட்டு சாப்பிடு என்றும் கூறினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஜமுனாராணியை அடித்து, கழுத்தை நெரித்தேன். அந்த சமயத்தில் அந்த குழந்தை அழுதது. உடனே குழந்தையின் 2 கால்களையும் பிடித்து தூக்கி, தலைகீழாக தரையில் ஓங்கி அடித்தேன்.
உடனே அந்த குழந்தை இறந்து விட்டது. இதை பார்த்து எனது மனைவி கதறி அழுதார். உடனே நான் அவரிடம் கூச்சலிட்டால் உன்னையும், மற்ற 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று கூறினேன். பின்னர் அந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பள்ளம் தோண்டி புதைத்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பம் கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி வரலட்சுமி (வயது 30). நர்சாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு சேப்ளாநத்தத்தில் நோயாளி ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வருவதற்காக வடலூரில் இருந்து ஆம்புலன்சில் புறப்பட்டார். ஆம்புலன்சை கிளாங்காட்டை சேர்ந்த டிரைவர் சுதாகர் (32) ஓட்டி சென்றார். குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் சென்றபோது அங்கு நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பக்கம் சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்சின் இடிபாடுக்குள் சிக்கிய வரலட்சுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் சுதாகர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனவே நடுரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியை சேர்ந்தவர் சேகர் (வயது 49). கார் டிரைவர். இவர் தனக்கு சொந்தமான காரில் சேலத்துக்கு சென்றார்.
அங்கிருந்து புவனகிரியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 39), ஜெயந்தி (42), பாலாஜி (21), அருண்மொழி (21), குணசீலன் (25), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோருடன் காரில் புவனகிரிக்கு புறப்பட்டார். காரை சேகர் ஓட்டிவந்தார்.
நேற்று நள்ளிரவு சேலம்-கடலூர் சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சேகரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் காரை ஓட்டி வந்த சேகர் மற்றும் காரில் வந்த சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காரின் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயந்தி, பாலாஜி, வெங்கடேசன், அருண் மொழி, குணசீலன் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடல் தீபன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி இவரின் குற்ற செயல்களை கட்டுபடுத்தும் பொருட்டு கடல் தீபனை குண்டர்சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு பரிந்துரை செய்தார் .
இதையேற்று கடல்தீபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.
அதன்படி கடல்தீபன் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று குறைகேட்பு கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த தண்ணீர் கேனை வெளியே எடுத்தனர். அதில் இருந்த பெட்ரோலை தங்கப்பாண்டியன் உள்பட 16 பேரும் தங்களது உடலில் திடீரென்று ஊற்றி கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
பின்னர் அவர்கள் 16 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் இருந்த கேனை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தங்கப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தங்கப்பாண்டியன் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர்.
நான் எனது தாயுடன் நொச்சிக்காட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களைப் பார்த்து இந்த வழியாக நீங்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. வேறு வழியாக செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் என்னையும், எனது தாயையும் திட்டி தாக்கினார். இதேபோல் இதற்கு முன்பு பலமுறை எங்கள் மீது அந்த வாலிபர் எங்களுடன் இதே காரணத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் எந்த வழியில் நடந்து செல்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் எங்களை தாக்கிய அந்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தீக்குளிக்க முயன்றவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீக்குளித்து இறந்த சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போது கடலூர் கலெக்டர் அலுவலகத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நிறைவு பயண பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சோழமண்டலம் பஞ்சபிரதேசம் ஆகி விடும். அதன்பிறகு அதானி, அம்பானி கம்பெனிகள் எரிவாயு எடுக்க அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார்கள். இது தானே உங்களின் திட்டம்.
நீங்கள்(நரேந்திரமோடி) முதல்முறையாக 7½ கோடி தமிழர்களின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறீர்கள். இனி ஒருக்காலும் மோடி பிரதமராக வரமுடியாது, வர விடவும் மாட்டோம். அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் தி.மு.க. முக்கிய பங்காற்றும், மத்தியில் இனி பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, தமிழகத்தில் எடப்பாடி கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது, என் தம்பி மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்-அமைச்சர்.
இவ்வாறு வைகோ பேசினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமானால் தமிழ்நாட்டில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும் ஆட்சி மாற்றம் நிகழவேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். போராட்டத்தின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கோரிக்கையை நிறைவேற்றித்தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
தமிழர்களை காப்பாற்ற, மாநில உரிமைகளை காப்பாற்ற, அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற விழிப்புணர்வு போராட்டத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காக காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி, கடைசியாக எங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ள செயல்தலைவரை வரவேற்கிறோம். இந்த போராட்டம் அடுத்த போராட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
மோடியை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் கருப்பு சட்டை அணிந்திருக்கிறார்கள். தமிழ் இனத்தின் உணர்வு எரிமலை போன்றது. இது பெரியார் மண், நாம் தெளிவாக ஒன்று பட்டு இருக்கிறோம். இனிமேல் நமக்குள் பேதம் இல்லை. திராவிடம் வளர வேண்டும், காவிகள் அழிய வேண்டும், பெரியார் மண்ணில் எவனும் வாலாட்ட முடியாது. கவர்னர் மாளிகையோடு நாங்கள் நிற்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மு.க. ஸ்டாலின் 3 கட்ட போராட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அ.தி.மு.க.வை எதிர்த்து அல்ல. மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் துரோகம் செய்கிறது மத்திய அரசு.
இதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வேடிக்கை பார்க்கிறது. துணை நிற்கிறது. மத்திய அரசும், கர்நாடக அரசும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏமாற்றி வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு நரேந்திரமோடி அரசு துரோகம் செய்கிறது.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு மு.க.ஸ்டாலின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. அவரது வழியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 9 கட்சிகளும் மக்களை நம்பி தான் இணைந்து இருக்கிறோம். இந்த இயக்கங்கள் இன்றோடு நிறைவு பெற்றது, முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இதற்கு பிறகும் தொடர்ந்து செயல்படும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், காவிரி பிரச்சினைக்காக போராடி வரும் 8 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி ஏமாற்றி வருகிறார். அவர் ஒட்டு மொத்த தமிழர்களை மட்டும் கொச்சைப்படுத்த வில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே கொச்சைப்படுத்தி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது என்றார்.
இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப்பிறகு ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு எதிராக, எடப்பாடி ஆட்சி செய்கிற துரோகத்துக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கிறது. தமிழகத்தின் நலன்களை குழிதோண்டி புதைத்த மோடியால் தமிழகத்தில் தரைவழியாக பயணம் செய்ய முடியவில்லை. காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காத மோடிக்கு, தமிழ்மண்ணில் காலடி எடுத்து வைக்க அருகதையில்லை என்றார்.
கடவாச்சேரியில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம், ரெயில் மறியல், முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தினோம்.
காவிரி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறோம். 6-வது நாளாக இன்று காவிரி உரிமை மீட்பு பணயம் மேற்கொண்டுள்ளோம்.
மத்தியில் ஆளும் மோடிக்கு எதிராக டெல்டா பகுதி விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒட்டு மொத்த தமிழகமே மோடி மீது கோபத்தில் உள்ளது.
இன்று சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டோம். தமிழகம் முழுவதும் மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்டப்பட்டது. தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த போது தமிழகத்தில் கருப்பு கொடி காட்டினோம். அவர்களெல்லாம் அதை ஏற்றுக் கொண்டார்கள். பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்தோம். ஆனால் அவர் சாலையில் வராமல் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். மோடி ஆகாயத்தில் பறந்தாலும் தேர்தலின் போது மக்களை சந்திக்க கீழே இறங்கிதான் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே திரண்டனர். அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #Tamilnews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது.
இந்த பஸ்சை டிரைவர் பசவராஜ்(வயது 30) ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கடலூர் ஏ.எல்.சி. சர்ச் அருகே வந்தபோது நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் அக்கட்சியினர் பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தனர்.
அப்போது கட்சி தொண்டர் ஒருவர் திடீரென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கம்பால் அடித்தார். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கிஓடினார்கள்.
தகவல் அறிந்த புது நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து பஸ்சை மீட்டனர்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மாவட்ட தலைவர் சாமிரவி, நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராஜா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள மேற்கு ராமபுரத்தை சேர்ந்தவர் பரமமூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 39). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை ராமாபுரத்தில் இருந்து ஒதியடிகுப்பத்தை மொபைட்டில் சென்றனர்.
ஒதியடிகுப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பரமமூர்த்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பரமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கடந்த 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு சென்று சுங்கச்சாவடியை தடியால் அடித்து உடைத்து சூறையாடினார்கள். மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி தண்ணீர்தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல்மின் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் என்.எல்.சி. ஆஸ்பத்திரி அருகில் வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர்.
அங்கிருந்து அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இந்த பேரணி செவ்வாய்சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா, நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு உள்ள ஸ்க்யூ பாலத்தை சென்றடைந்தது.
அங்கு வேல் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தையொட்டி ஐ.ஜி. ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 500 போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் 200 பேர் உள்பட 1,500 போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.






