என் மலர்
கடலூர்
பண்ருட்டியில் இருந்து இன்று மதியம் சேமக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து சின்ன சேமக்கோட்டை அருகே சென்றபோது பஸ்சின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டெப்னி டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து, டயர் உள்ளே விழுந்துள்ளது.

இதில் 13 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த டயர் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25) டிப்ளமோ படித்துள்ளார். இவர் அருப்புகோட்டை தேவாங்கர் கலைகல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் சிலரை தொடர்புபடுத்தி அவதூறான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இது குறித்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்தோஷின் பேஸ்புக் பதிவை பார்த்ததில் அவர் தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்தை வெளியிட்டு வந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பீர்பாட்ஷா தலைமையில் போலீசார் பண்ருட்டி அடுத்த கீழ்இருப்பு கிராமத்துக்கு வந்தனர். அங்குள்ள சந்தோசின் வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த சந்தோசை கைது செய்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் சந்தோஷ் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தோசை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
எதற்காக பேஸ்புக்கில் அவதூறான கருத்தை வெளியிட்டார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று பல்வேறு கோணங்களில் சந்தோசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் சுற்றி வளைத்து வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி:
சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நேற்று நெய்வேலி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மண் காக்கும், வீர தமிழர் பேரமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விழிப்புணர்வு பேரணி தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அந்த பேரணி வருகிற 3-ந் தேதி நெய்வேலிக்கு வருகிறது.
என்.எல்.சி. நிறுவன தலைவரை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு மின்சாரம் தரக்கூடாது என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இந்த பேரணியில் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
எனது கணவர் சட்டத்தை மீறி சந்தனக்கடத்தலில் ஈடுபட்டார் என்று காரணம் காட்டி அரசு அவரை கொன்றது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது. இந்த அரசை யார் தண்டிப்பது? அரசியல் சட்டத்தை மீறியது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
எனது கணவர் உயிரோடு இருந்தபோது கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றும் போராடினார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வந்திருக்கும்.
சத்தியத்திற்கும், பொதுமக்களின் நலனுக்காகவுமே என் கணவர் வாழ்ந்தார். ஆனால் இன்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கும் நிகழ்வு. அரசியல் வாதிகள், அரசியல் ஆதாயத்துக்காக சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது கண்டனத்திற்குரியது. காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கிறோம். எனவே பெண்களுக்கு தனிச்சட்டம் இயற்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்.எல்.சி.யில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு, தமிழ் நாட்டில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தி பராமரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடும் வகையில் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue #cauverymanagementboard
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான பணப்பாக்கத்துக்கு வந்தனர்.
இன்று காலை சுபாஷ் தனது நண்பர் மணிகண்டன் மற்றும் உறவினர் ரோசன் (8) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து பணப்பாக்கத்துக்கு புறப்பட்டார்.
பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே சென்னை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் மாட்டு வண்டி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி மீது மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சுபாஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மணிகண்டன், ரோஷன் மற்றும் மாட்டு வண்டியில் வந்த எல்.என்.புரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து திருநாவலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
குடும்பியான்குப்பம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெய்வேலி:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை அனுமதிக்க கூடாது.
தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ளாமல், வரம்பு மீறி நடந்து கொள்ளுகிறார். இவ்வாறு வரம்பு மீறி நடந்து பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகி இருக்கிறார். கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலை கெடுக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவர்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அறவழி போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழக மக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #velmurugan #cauveryissue #ChennaiMarina
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது 35). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜான்சி(28). இவர்களது மகள்கள் பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3).
இந்நிலையில் சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கணேசமூர்த்தி, ஜான்சி ஆகியோர் தங்களது இளைய மகள் ஹரினியுடன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீர்காழிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.
சிதம்பரத்தில் கடலூர் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ்சுக்கு வழிவிடுவதற்காக கணேசமூர்த்தி சாலையோரமாக மோட்டார் சைக்கிளை ஒதுக்கினார். அப்போது அவர் நிலைதடுமாறியதால், பின்னால் அமர்ந்திருந்த ஜான்சி தான் கையில் வைத்திருந்த குழந்தை ஹரினியுடன் சாலையில் விழுந்தார். அவர்கள் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் அவர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கணேசமூர்த்தி சாலையோரமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததால், அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த நிலையில் விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பொதுமக்கள் அரசு பஸ்சை அடித்து நொறுக்கியதால், சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள் அனைத்தும் மீண்டும் சிதம்பரம் பஸ் நிலையத்துக்கே திருப்பி விட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பஸ்கள் அந்த வழியாக மீண்டும் இயக்கப்பட்டது. #tamilnews
கடலூர்:
தென்தமிழக கடல் பகுதியில் கடல்சீற்றம்- ராட்சத அலைகள் எழும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குமரி முதல் தென்தமிழக கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடல்சீற்றம் காணப்பட்டது.
10 அடி முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. அதுபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், ராசாப் பேட்டை போன்ற கடற்கரை பகுதிகளிலும் கடந்த 21-ந் தேதி அன்று கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டது. அலைகளும் எழுந்தன.
கடல்சீற்றம் காரணமாக ஆழ்கடல் பகுதியில் வசித்து வந்த டால்பின் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. ராசாப்பேட்டை, தாழங்குடா பகுதிகளில் டால்பின் மீன்கள் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கடந்த 22-ந் தேதி அன்று சுமார் 5 அடி முதல் 10 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியது. கடல் பகுதியில் தொடர்ந்து உள்வாங்கி வருவதால் கடற்கரையோரம் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட அதிகஅளவு கடல் உள்வாங்கி இருந்தது.
சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் கடல் உள்வாங்கியிருப்பதை பார்த்து அச்சமடைந்தனர். அவர்கள் வெகு தூரத்தில் நின்று கடல் அலைகளை பார்த்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). இவரது மனைவி அம்பிகா(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வேல்முருகன் அங்குள்ள ஆவின் பாலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் ஓட்டலை மூடிவிட்டு அம்பிகா வீட்டுக்கு சென்றார். இரவில் வேல்முருகன், அம்பிகா மகன்களுடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை ஒரு கார் அம்பிகா வீட்டு முன்பு 3.30 மணி அளவில் வந்து நின்றது. அதில் இருந்த வாலிபர் ஒருவர் இறங்கி வெளியே வந்தார். ஒருவர் காரில் இருந்தார். வெளியே வந்த வாலிபர் அம்பிகா வீட்டின் இரும்பு கேட்டை தாண்டி உள்ளே சென்றார்.
பின்பு அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அம்பிகா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்த கொண்டு ஓடினார். உடனே திடுக்கிட்டு எழுந்து அம்பிகா திருடன்.. திருடன்... என்று கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வேல்முருகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து தப்பியோடிய வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வீட்டு முன்பு நின்ற காரில் குடிபோதையில் மயங்கி கிடந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் மங்களூர் அருகே உள்ள மா.புடையூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பதும், நகையை பறித்து கொண்டு ஓடிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரையும், காரையும் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். நகையை பறித்து சென்று ஓடிய கூட்டாளி செங்கோட்டையனை தேடி வருகின்றனர். #tamilnews
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த இளமங்கலம் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கபோவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும், இதனால் விவசாயம் பாதிக்கப்படும் எனக்கூறி அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களும் இந்த பகுதியில் குவாரி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இளமங்கலம் பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை மணல் குவாரி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மணல் குவாரியை திறக்கக்கூடாது என்று கூறி திட்டக்குடி வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை திட்டக்குடி பகுதியில் உள்ள 700 கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திட்டக்குடி வணிகர் சங்க மாநில இணை செய லாளர் தங்கராசு தலைமையில் சங்க நிர்வாகிகள் சண்முகம், அண்ணாதுரை, சுரேஷ், சீனிவாசன், செல்வம், வணிகர்கள் சிவசங்கரன், கோபால், ஷாகுல் மற்றும் நிர்வாகிகள் பலர் இன்று காலை திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.
பின்னர் அவர்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அதன் பேரில் மங்களூர் ஒன்றிய செயலாளர் ரெங்கசுரேந்தர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சென்னை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.
மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 4 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். அவர்கள் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூருக்கு காரில் வருவதுபோல் தெரிகிறது எனக் கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
ரெயில்வே போலீசார் மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அந்த எண் சுவிட் ஆப் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று இரவு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
வடலூர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று இரவு 10 மணி முதல் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வடலுர் 4 முனை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக கார் எதுவும் வருகிறதா என்று கண்காணித்தனர். ஆனால் கார் எதுவும் சிக்கவில்லை.தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சந்தேகப்படும் படும்படியாக யாரும் சுற்றி திரிகின்றனரா? என்று போலீசார் சாதாரண உடையில் கண் காணித்து வருகின்றனர்.
மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடலூர் மாவட்டத்தில் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28) தனியார் பஸ் டிரைவர். விழுப்புரம் மாவட்டம் தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (36). இவர் மற்றொரு தனியார் பஸ் டிரைவர். இவர்கள் 2 பேரும் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை குறுக்கே நிறுத்தி விட்டு ஒருவரை ஒருவர் தகாதவார்த்தைகளால் திட்டினர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பலமுறை எச்சரித்தனர். அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.






