என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனம் சார்பாக ஊதியம் கேட்டு மனு அளித்தனர்.

    ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலையை புறக்கணித்தனர்.

    அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் எதிரே ஒன்று திரண்டனர். பின்னர் பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சிதம்பரம் அருகே முன்விரோதத்தில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் இரட்டை குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மரத்தான் தோப்பை சேர்ந்தவர் தயாநிதி (வயது 24), டிரைவர். இவரது மனைவி காவேரி (22). இவர்கள் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது காவேரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் காவேரி, அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர்.

    அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காவேரி மற்றும் லட்சுமி ஆகியோர் சுரேசை தடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கர்ப்பிணி பெண் காவேரியை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வலியால் துடிதுடித்து காவேரி கீழே விழுந்து அலறினார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கர்ப்பிணி பெண் காவேரியை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காவேரி மற்றும் குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காவேரியை மட்டும்தான் டாக்டர்களால் காப்பாற்ற முடிந்தது. வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் இறந்தே பிறந்ததால் காப்பாற்ற முடியவில்லை.

    இதையறிந்த தாய் காவேரி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் இருந்தது.

    இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் இரட்டை குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோடுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளனர். #CauveryIssue #CentralGovt #seeman #BharathiRaja
    கடலூர்:

    கடலூரில் இன்று இயக்குனர் பாரதிராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரிமேலாண்மை வாரியத்தை தாமதப்படுத்தாமல் உடனே அமைக்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியத்தில் ஸ்கீம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, பா.ஜ.க. ஸ்கீமாக தான் தெரிகிறது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் அதற்கு அனுமதி இல்லை.

    ஆனால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகா சட்டசபை தேர்தலில்தான் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலுக்காகத்தான் காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுகிறார்கள். ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அதனை புறக்கணித்துவிட்டு கர்நாடகா தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. இதனை பார்க்கும்போது, தமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஒரு இயக்குனராக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ் குடிமகனாகத் தான் இதை தெரிவிக்கிறேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளுக்கு நாள் போராட்டம் நடைபெறும். இதனை மத்திய அரசு எப்படி எதிர்கொள்கிறது என பார்ப்போம்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது கர்நாடகா தேர்தலுக்காத்தான். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவு திட்டம் வகுக்கப்படும். அந்த திட்டத்தில் எந்த அரசு உயர் அதிகாரியும் நியமிக்கப்படமாட்டார்கள். இதனை பார்க்கும்போது தமிழகத்தை திட்டவட்டமாக மத்திய அரசு வஞ்சித்து புறக்கணித்து வருகிறது. முதல்- அமைச்சரும் புறக்கணித்து வருகிறார். பிரதமருக்கும் கவலை இல்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை புறக்கணித்து வரும் கட்சிகள் வருகிற தேர்தலில் கண்டிப்பாக புறக்கணித்து நிராகரிக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைக்காக தினந்தோறும் கத்திக் கொண்டு இருக்கமுடியுமா? இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றத் தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது என்பது முன்பே தெரிந்தவி‌ஷயமாகும்.

    இதற்கு காரணம் பிரதமரும், அமைச்சர்களும், கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கர்நாடக தேர்தலை காரணம் காட்டக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு அதை பற்றி கவலையில்லை.

    இதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அப்போது நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

    மேலும் அங்கு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் காவிரி தண்ணீரை திறந்துவிடமாட்டார்கள். ஏன் என்றால் ஒரு சொட்டு காவிரிநீர் திறந்து விட்டாலும் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்காது. காவிரி நீர் திறக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம். இது தேசத்துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, கடலூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் தமிழக மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி நடத்த ஆர்ப்பாட்டமாகும். இதனால் தான் தமிழன் என்கிற முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளேன். நீர் ஆதாரம் இல்லாமல் பயிர் முதல் மனிதர்கள்வரை யாரும் உயிர் வாழமுடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வுகாண வேண்டும். இது தொடர்பாக மக்களை சந்திக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.  #CauveryIssue #CentralGovt #seeman
    சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான குழாய் பதித்துள்ள இடத்தை முற்றுகையிட்டு இயக்குனர் கவுதமன், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் பகுதிக்குட்பட்ட கிளியனூரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பின்னர் அங்கு குழாய் பதிக்கப்பட்டது. இதையறிந்த திரைப்பட இயக்குனர் கவுதமன், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட விவசாயிகள், இளைஞர்கள் உள்பட பலர் சம்பந்தபட்ட இடத்தை பார்வையிட்டு கிராம மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் அனைவரும் குழாய் பதித்துள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கதிராமங்கலத்தில் அமைத்துள்ள குழாய்களைவிட இங்கு அமைக்கப்பட்ட குழாய் பெரியது. இந்த இடத்தில் குழாய் அமைக்கும்போது இப்பகுதியில் உள்ள மக்களை 6 மாதம் வரை இப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    குழாய் அமைக்க அடிப்படை வேலைகள் நடந்தபோது அதில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை குடித்த அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    இந்தபகுதி பொதுமக்கள் பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்து கடலூர் மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதை மக்களுக்கு ஏற்படுத்துவோம். ராணுவமே வந்தாலும் எதிர்கொள்வோம்.

    எங்களுக்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம் நீர் தான் வேண்டும் என மத்திய அரசை கண்டித்து உணர்வுப்பூர்வமாக மக்கள் போராடி வருகிறார்கள்.

    தமிழக அரசு சுற்றுச்சூழலை கெடுக்கும் திட்டங்களை வரவேற்று கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஒரத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தை பாலைவனமாக்கும் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    சிதம்பரம் அருகே பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி அபிராமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா (வயது 43). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவரை பல்கலைக்கழக நிர்வாகம் பரமக் குடி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்தது.

    இதையடுத்து ராஜா பரமக்குடி அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பொறுப்பேற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது சி.கொத்தங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜா தனது குடும்பத்துடன் சி.கொத்தங்குடியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் பதறிய அவர், உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்த போது, அதில் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சமாகும்.

    இது குறித்து ராஜா சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மர்மநபர்களின் ரேகைகளை சேகரித்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் உருவபொம்மையை திமுகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூரறாக பேசியதாக கூறப்படுகிறது.

    கடலூர் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு இன்று காலை நகர செயலாளர் ராஜா தலைமையில் தி.மு.க. வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலினை அவதூராக பேசிய சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை எடுத்து சென்றனர். கடலூர் பாரதிசாலையில் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், சண்முகம், ராஜா, அகஸ்டீன் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் விரைந்து சென்று உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அமைச்சர் சி.வி.சண்முகம் உருவபொம்மையை தி.மு.க.வினர் தீவைத்து எரித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென்று வாந்தி- பேதியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக சித்திரை மாத திருவிழா நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடந்தது. இதை காண விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வெகுநேரமாகி விட்டதால் சில பக்தர்கள் கோவிலிலேயே தங்கினர்.

    இந்த நிலையில் அன்னதானம் சாப்பிட்டு விட்டு கோவிலில் தங்கிருந்த பக்தர்கள் 20 பேருக்கு நள்ளிரவில் திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களை தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 180 பேருக்கும் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் வாகனங்களில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் சிகிச்சை சம்பந்தமாக விளக்கம் கேட்டறிந்தனர்.


    சம்பவம் நடந்த கோவிலுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலில் சமையல் செய்த இடம், பாத்திரங்கள் மற்றும் அன்னதானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும், அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் சாப்பிட்ட உணவில் பல்லி ஏதும் விழுந்து இருக்கலாமோ என்றும் விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவில் திருவிழா நடந்து வரும் கிராமத்தில் கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசி தலைமையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தண்டபாணி, சுகாதார நலப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் விரைந்தனர்.

    அவர்கள் திருவிழா நடந்த கோவில் மற்றும் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை பார்வையிட்டு விசாரித்தனர்.
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AnnamalaiUniversity

    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார். அங்குள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார்.

    இன்று காலை 10 மணி அளவில் அவர் விடுதியில் இருந்து மாணவி லாவண்யா வெளியேவந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அங்கு நின்றவர்கள் அவரை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யா ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மற்ற மாணவிகள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லாரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #AnnamalaiUniversity #StudentThroatSlit

    விருத்தாசலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல மேலும் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பண்ருட்டி அருகே கடும் வெயில் காரணமான, பஸ்சின் மேற்கூரையில் இருந்த டயர் வெடித்தது. இதில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    புதுப்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு கிராமத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று வந்தது. இந்த பஸ்சை வீரன் என்பவர் ஓட்டி வந்தார். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் பஸ்சின் மேற்கூரையின் மீது மாற்று டயர் ஒன்றை வைத்திருந்தனர்.

    பஸ் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள சின்ன சேமக்கோட்டை மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேற்கூரையில் இருந்த மாற்று டயர், கடும் வெயில் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் விபத்து நேர்ந்து விட்டதோ என்று அதிர்ச்சியடைந்தனர். உடன் டிரைவர் வீரன் பஸ்சை நிறுத்தினார். இந்த நிலையில் டயர் வெடித்த அதிர்வில் பஸ்சின் மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து பஸ்சுக்குள் இருந்த பயணிகளின் தலையின் மீது விழுந்தது.

    இதில் விழுப்புரம் கல்லமேடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா (வயது 23), காமாட்சிப்பேட்டை ஆனந்தாய் (50), மலர்கொடி, திருவாமூர் அனிதா (30), கீதா (39), கஸ்தூரி (50), இந்துமதி (35), குறிஞ்சிப்பாடி நடராஜன் மனைவி விமலா (28), மகள் ஓவியா (3), சமத்துவபுரம் லட்சுமி(49), விமலாதேவி (40), விசூர் உஷாராணி (25) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜவுளி கடையில் ரூ.3½ மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வரத்தனூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வீகன் (வயது 45).

    இவர் வேப்பூர் கூட்ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை என்பதால் அந்த பகுதியில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. அதேபோல் இவரது கடையிலும் வியாபாரம் நன்றாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கடையில் வசூலான பணம் மற்றும் அவருக்கு சொந்தமான 10 பவுன் நகை ஆகியவற்றை கல்லாப் பெட்டியில் வைத்து பூட்டினார். அதன் பின்னர் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை வழக்கம்போல் கடைக்கு வந்த தெய்வீகன் கடையை திறந்து பார்த்தார். அப்போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் தெய்வீகன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்று சிதம்பரத்தில் தினகரன் பேசினார்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 13 ஆயிரம் பேர், நமது கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை நான் வரவேற்கிறேன். கட்சியில் இணைந்த அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

    தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், மீனவர்கள் ஆகியோர் நலம்காக்க தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

    கடலூர் மேற்கு மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் வரும்போது, இந்த 4 தொகுதிகளுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அந்த வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்யாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக நீங்கள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×