என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலத்தில் ரூ.3 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்த போது போலீசாரிடம் சிக்கிய சென்னை வாலிபர்கள், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்கலம் பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் இல்லை என கூறி முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பணம் இருந்தது. அந்த பணம் குறித்து விசாரித்தபோது அந்த வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தகாதவார்த்தைகளால் திட்டினர்.

    உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அந்த வாலிபர்கள் சென்னை துறைமுகம் ஆதன்தெருவைச் சேர்ந்த லுக்மோன்அகமது (வயது 24), என்பதும், மற்றொருவர் சென்னை மன்னடியைச் சேர்ந்த ஷேக் அப்துல்காதர் (28) என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 3 லட்சம் பணத்துக்கு அவர்களிடம் எந்தவித கணக்கும் இல்லை, உரிய ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? 3 லட்சம் பணத்தை யாருக்கு கொடுக்க கொண்டுச்சென்றனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதன் பேரில் லுக்மோன் அகமது, ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    காட்டுமன்னார்கோவிலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார். 

    இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்.எல்.சி. அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 69). ஓய்வு பெற்ற என்.எல்.சி. அதிகாரி.

    நேற்று இரவு 9 மணி அளவில் வேணுகோபால் அருகில் உள்ள கடைக்கு அரிசி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது பண்ருட்டியில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வேணுகோபால் கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் வேணுகோபாலின் மகள் விஜயகுமாரி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து 300 லிட்டர் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடலூர்-சிதம்பரம் சாலையில் வாகன சோதனை நடத்துமாறு, கடலூர் முதுநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் சிவானந்தபுரத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்தது.

    போலீசார் வாகன சோதனை செய்ததை கண்டதும், அதனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக நடுரோட்டிலேயே சரக்கு வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவரும், அவருடன் வந்த வாலிபரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், 2 பேரையும் துரத்திச்சென்றனர். சிறிது தூரம் வரை ஓடிச்சென்ற அவர்களை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    இதற்கிடையில் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அதில் பொருட்கள் எதுவும் இல்லை. அப்படியானால் போலீசாரை கண்டதும் எதற்காக 2 பேரும் தப்பி ஓடினார்கள் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து இருந்ததை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் 6 மூட்டைகளில் பாக்கெட் சாராயம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது 300 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் பூரணங்குப்பத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் டிரைவர் சக்தி(வயது 28), சேகர் மகன் ரவிக்குமார்(24) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    சாராயம் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் பிரத்யேகமாக ரகசிய அறை அமைத்ததும், இந்த ரகசிய அறை திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும், இந்த அறையை பயன்படுத்தி புதுச்சேரியில் இருந்து பல முறை சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த சாராயத்தை யாரிடம் கொடுப்பீர்கள் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி கொண்டு கடலூருக்கு வருவோம். எங்களது வாகனம் குறிப்பிட்ட சாராய வியாபாரிகளுக்கு தெரியும். எங்களது வாகனத்தை கண்டதும், அவர்கள் எங்களை செல்போனில் தொடர்பு கொள்வார்கள். உடனே நாங்கள் அவர்கள் கூறும், முட்புதரில் சாராய மூட்டைகளை வைத்துச்செல்வோம். அதன்பிறகு அதை யார் எடுத்துச்செல்வார்கள் என்பது தெரியாது என்று கூறினர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம், மற்றும் அதை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட எனது தந்தையை இழந்து விட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவி சுவாதி கண்ணீர் மல்க கூறியுள்ளார். #NeetExam

    தந்தை சீனிவாசன் இறந்தது குறித்து மாணவி சுவாதி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    நான் நீட் தேர்வு எழுத கல்லூரிக்குள் சென்றபோது எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களை அங்கே அமரக்கூடாது என்று கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இதனால் அவர்கள் வெளியே சென்றுள்ளனர்.

    பகல் 12 மணி அளவிலேயே எனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அதை தாங்கிக்கொண்டு தேர்வு முடியும் வரை காத்திருந்தார். தேர்வு எழுதி விட்டு நான் வெளியே வந்த பிறகு தான் விவரத்தை தெரிவித்தார். உடனே ஆட்டோவில் அவரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனால் அவர் இறந்து விட்டார்.

     


     

    எங்கள் சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டி அவசியம் இருந்து இருக்காது.

    எனது தந்தையும் இறந்து இருக்கமாட்டார். எனக்காக வந்து இருந்த அவருக்கு இந்த கதி ஏற்பட்டது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. என்னை டாக்டராக பார்க்க ஆசைப் பட்ட எனது தந்தையை இழந்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகள் சுவாதியை அழைத்து வந்தது குறித்து சீனிவாசனின் மனைவி அமுதா கூறியதாவது:-

    எங்களது மகள் சுவாதிக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக நான் என் கணவர் மற்றும் மகளுடன் வந்து இருந்தேன். மகள் சுவாதியை தேர்வு மையத்துக்குள் அனுப்பி விட்டு நானும், எனது கணவரும் அங்குள்ள மரத்தடியில் இருந்தோம். அப்போது அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை வெளியேற்றினர். இதனால் வேறுவழியின்றி ரோட்டின் ஓரத்தில் இருந்தபடி காத்து இருந்தோம். அப்போது திடீரென எனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும் மகள் தேர்வு எழுதிவிட்டு வரும் வரை காத்திருந்தோம்.

    பின்னர் மகள் சுவாதி வந்தவுடன், அவளிடம் விவரத்தை கூறினோம். பின்னர் எனது கணவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சீனிவாசன் இறந்தார். இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இவ்வாறு கதறியழுதபடி அவர் தெரிவித்தார்.#NeetExam

    காவிரி நீர் பிரச்சனை மற்றும் நீட் தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சிதம்பரம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். #CauveryIssue #NEETEXam #MDMK #Vaiko
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வு என்பது தமிழகத்தில் சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் ஒரு அநீதியாகும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழங்கிய மசோதாவை மத்திய அரசு குப்பையில் போட்டு விட்டது. அதற்கு எந்தவித போராட்டத்தை நடத்தினார்கள்? எந்த விதத்தில் அழுத்தம் கொடுத்தார்கள்?.

    வேறு மாநிலத்தில் நீட் தேர்வு என்றவுடனே கொதித்தெழுந்து அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் இல்லாத பள்ளிகளா ராஜஸ்தானிலும், கேரளாவிலும் இருக்கிறது.

    தமிழர்கள் என்ன சர்வதேச அகதிகளா? தங்க இடம் இல்லாமில்லாமல் உணவில்லாமல் ஒருவிதமான மன அழுத்தத்திலே தேர்வு எழுதி உள்ளார்கள் மாணவர்கள் அதில் எப்படி வெற்றி பெற முடியும்?.

    மாணவனின் தந்தை இறந்த செய்தி முதலில் கேள்விபட்டதும் நான் கேரள கவர்னர் சதாசிவம் மற்றும் அந்த மாவட்ட கலெக்டரிடம் பேசினேன். 3 லட்சம் பணம் தருகிறோம் வேலை தருகிறோம் என்றால் இறந்த உயிர் வந்து விடுமா?

    தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கும், ஒட்டு மொத்த நலன்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது. மத்திய அரசு காவிரி நீர் மற்றும் நீட் தேர்வு விவகாரங்களில் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராட வேண்டிய சூழல் உள்ளது.

    மதவாத சக்திகளின் பிரவேசத்தையும் தடுக்க வேண்டும், திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க.வோடு கரம் கோர்த்திருக்கிறோம். இரு தரப்பிலும் நல்ல புரிதல் உள்ளது. நேச உணர்வோடு இது தொடர்கிறது.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    கடலூரில் நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வு சமூகநீதியை அழிக்க கூடிய பெரும் கேடு. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் இந்தியில் வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்க நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.

    தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் மாணவ-மாணவிகளை வெளிமாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத வைத்தார்கள். சோதனை என்ற பெயரில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். இப்போது கேள்வித்தாள் தமிழில் வரவில்லை என்பது மன்னிக்க முடியாத அநீதியாகும்.

    காவிரி மேலாண்மை வாரியம், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #NEETEXam #MDMK #Vaiko
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விவசாயி நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மகள் கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி, மே.7-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவரது மகள் சுவாதி. இவர் புதுவையில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவருடன் சீனிவாசனும் சென்றிருந்தார்.

    தேர்வு முடிந்து வெளியே வந்த சுவாதி, தனது தந்தையிடம் தேர்வில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார். இதனால் சீனிவாசன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இன்று காலை சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீட் தேர்வினால் ஏற்கனவே 2 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 3-வதாக சீனிவாசன் பலியாகி உள்ளார்.

    பண்ருட்டி அருகே நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேகாகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது26) விவசாயி. இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தனது குடும்பத்தினருடன் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிலத்தின் வழியாக பாம்பு ஒன்று சென்றது. இதை பார்த்த கோபாலகிருஷ்ணன் அந்த பாம்பு எங்கு செல்கிறது என்று பார்ப்பதற்காக அதை பின்தொடர்ந்து சென்றார். கோபால கிருஷ்ணனின் நிலத்தின் அருகில் உள்ள ராஜி என்பவரது நிலத்தின் 100 அடி கிணற்றுக்குள் அந்த பாம்பு சென்றது.

    அந்த கிணற்றை கோபாலகிருஷ்ணன் எட்டிப்பார்த்தார் அப்போது அவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த கோபால கிருஷ்ணனை அவரது உறவினர்கள் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் கோபால கிருஷ்ணன் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்த பண்ருட்டி மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபாலகிருண்ணனின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் குமரய்யா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள தாளம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43), பலாப்பழ வியாபாரி. இவரது மகன் விஜய் (20). இன்று காலை பழனிச்சாமி தனது மகன் விஜயை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குள்ளஞ் சாவடிக்கு புறப்பட்டார்.

    பண்ருட்டி அருகே உள்ள வேகாகொல்லை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிரே டிப்பர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிச்சாமியும் அவரது மகன் விஜயும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காடாம் புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் குமராய்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூரில் குடும்ப தகராறில் வி‌ஷம் கலந்த உணவை 2 மகன்களுக்கு கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
    கடலூர்:

    கடலூர் புதுவண்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவானந்தம் (8), கீர்த்திவாசன் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இன்று காலையும் கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அவரது மனைவி ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வருகிறீர்கள்? என்று கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டது.

    அதன் பின்னர் அவரது மனைவி வெளியே சென்று விட்டார். தனது மனைவி திட்டியதால் கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் இருந்த உணவில் வி‌ஷத்தை கலந்து தனது மகன்கள் ஜீவானந்தம், கீர்த்திவாசன் ஆகியோருக்கு கொடுத்தார். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் கார்த்திகேயன் வி‌ஷத்தை குடித்து அவரும் மயங்கினார்.

    வெளியே சென்றிருந்த மனைவி வீட்டுக்கு வந்தபோது கணவர் மற்றும் 2 மகன்களும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மயங்கி கிடந்த 3 பேரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். ஜீவானந்தம், கீர்த்திவாசன் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், வெளி மாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுத மாட்டோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், வெளி மாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுத மாட்டோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாணவரணி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

    மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் , மாவட்ட தலைவர் சுரேந்தர் , நகர செயலாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். வேண்டாம்... வேண்டாம்... நீட் தேர்வு வேண்டாம், வேண்டும்... வேண்டும்... காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் நிர்வாகிகள் தண்டபாணி, சுரேஷ், சிலம்பு, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×