search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து 300 லிட்டர் சாராயம் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது
    X

    சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து 300 லிட்டர் சாராயம் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

    சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து 300 லிட்டர் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடலூர்-சிதம்பரம் சாலையில் வாகன சோதனை நடத்துமாறு, கடலூர் முதுநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் சிவானந்தபுரத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்தது.

    போலீசார் வாகன சோதனை செய்ததை கண்டதும், அதனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக நடுரோட்டிலேயே சரக்கு வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவரும், அவருடன் வந்த வாலிபரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், 2 பேரையும் துரத்திச்சென்றனர். சிறிது தூரம் வரை ஓடிச்சென்ற அவர்களை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    இதற்கிடையில் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அதில் பொருட்கள் எதுவும் இல்லை. அப்படியானால் போலீசாரை கண்டதும் எதற்காக 2 பேரும் தப்பி ஓடினார்கள் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து இருந்ததை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் 6 மூட்டைகளில் பாக்கெட் சாராயம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது 300 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் பூரணங்குப்பத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் டிரைவர் சக்தி(வயது 28), சேகர் மகன் ரவிக்குமார்(24) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    சாராயம் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் பிரத்யேகமாக ரகசிய அறை அமைத்ததும், இந்த ரகசிய அறை திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும், இந்த அறையை பயன்படுத்தி புதுச்சேரியில் இருந்து பல முறை சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த சாராயத்தை யாரிடம் கொடுப்பீர்கள் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி கொண்டு கடலூருக்கு வருவோம். எங்களது வாகனம் குறிப்பிட்ட சாராய வியாபாரிகளுக்கு தெரியும். எங்களது வாகனத்தை கண்டதும், அவர்கள் எங்களை செல்போனில் தொடர்பு கொள்வார்கள். உடனே நாங்கள் அவர்கள் கூறும், முட்புதரில் சாராய மூட்டைகளை வைத்துச்செல்வோம். அதன்பிறகு அதை யார் எடுத்துச்செல்வார்கள் என்பது தெரியாது என்று கூறினர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம், மற்றும் அதை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×