என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.
இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பல்வேறு காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வருகிறது.
இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் நாளை (17-ந் தேதி) மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை வரவேற்கிறோம்.
தமிழக அரசு தங்களது நியாயமான காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் பெறுவதற்கு அழுத்தம் தர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கொண்ட செயல் அலுவலகத்தை கர்நாடகாவில் அமைக்கக்கூடாது.
இதனால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழக அரசு உறுதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இந்த ஆணையம் அரசியலமைப்புக்கு மாறாக அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும்.
தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசுக்கு இணங்கி செயல்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
கடலூர்:
கடலூர் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் தனித்தனியாக பைபர் படகில் மீன்பிடித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை கடலில் மீன்பிடித்த போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கடப்பாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் பகுதிக்கு நடந்து சென்ற போது போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர்.
ஆனால் அதையும் மீறி தேவனாம்பட்டினம் மீனவர்களில் சில பேர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த ஏழாயி உள்பட 2 பெண்களை தடியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாண்டியன் உள்பட 3 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கந்தன், சதீஷ், தன்ராஜ் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 13 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 2 மீனவ பகுதி மக்களிடம் வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர், டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மோதல் சம்பவத்தால் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுக்க இன்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார்கள் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் மோதலால் இன்று கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
மீனவர்கள் மோதலில் பலியான பஞ்சநாதன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன் மற்றும் அ.தி.மு.க.வினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கொலை செய்தவர்களை கைது செய்தால் தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பஞ்சநாதனின் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். #fishermenmurder
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். முக்கனியில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும். மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம்.
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டிதான். செம்மண் பாங்கான பூமியில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். தற்போது பண்ருட்டியில் பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாதபோதிலும் பலா மரங்களில் அதிகளவு காய்கள் பிடித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீசன் தொடங்கிய நாள் முதல் சென்னை-கும்பகோணம் சாலையோரத்தில் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரை தற்காலிக கடைகள் முளைத்துள்ளதை காணமுடிகிறது. அதில் பலாப்பழமும், முந்திரியும் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழத்தின் அளவுக்கு தகுந்தார்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் சென்னை, சேலம், மதுரை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பலாப்பழ மரங்கள் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு மரத்திற்கு சிறப்பு இருக்கும் அல்லவா. ஆம் பண்ருட்டி பகுதியிலும் ஒரு பலாமரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பலா மரம் ஆயிரம் பிஞ்சு விடுகிறது. தானே புயல் தாக்கிய போதும் விழாமல் நிலைத்து நிற்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மா, பலா, முந்திரி, கொய்யா, புளி உள்ளிட்ட மரங்களை பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்தில் ஒரே ஒரு பலா மரம் மட்டும் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இது குறித்து ராமசாமி கூறுகையில், இந்த தோப்பு எங்களது பரம்பரை சொத்தாகும். எனது மூதாதையர்கள் நட்டு வைத்த ஒரே ஒரு பலா மரம் இன்றும் நிற்கிறது. அது நடப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் காய்பிடிக்க ஆரம்பித்ததாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆயிரம் பிஞ்சுகளை விடும். அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம். மற்றவைகளை துண்டித்து விடுவோம். ஏனெனில் எல்லா பிஞ்சுகளையும் விட்டால் பருமன் குறைந்து விடும். இந்த மரத்தில் காய்க்கும் பழத்தின் சுவை, மற்றவைகளை விட இரு மடங்கு அதிக சுவை உடையதாகும். ஒரு பழம் 10 கிலோ முதல் 80 கிலோ எடை வரை இருக்கும்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. அதில் பண்ருட்டி பகுதியில் பெரும்பாலான பலா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. 200 ஆண்டுகள் பழமையான இந்த பலா மரமும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்த இலைகளை இழந்து, மொட்டையாக காட்சி அளித்தது. வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி அந்த மரத்தை பராமரித்தேன். ஆனால் தானே புயலுக்கு பிறகு 3 ஆண்டுகள் அந்த மரம் காய்க்கவில்லை. அதன்பிறகு மீண்டும் அந்த மரம் காய்க்க தொடங்கியது. இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஞ்சு விட்டது. அதில் 350 பிஞ்சுகளை மட்டும் விட்டோம். மற்றவைகளை துண்டித்து விட்டோம். இதுவரை 120 பழங்களை அறுவடை செய்துள்ளோம் என்றார்.
ஆண்டுதோறும் ஆயிரம் பிஞ்சுகளை விடும் என்பதால், ‘ஆயிரம் காய்ச்சி மரம்’ என்று அழைக்கப்படுகிறது. தானே புயலை வென்ற பலாமரம் காய்த்து தொங்குவதை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கிறார்கள்.
பெரம்பலூரை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 40). இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். நேற்று இரவு பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்தியிருந்தார்.
பஸ்நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. பஸ் கிடைக்காததால் அங்கு நின்ற சிலர் வேனில் ஏறி சென்னை செல்ல முடிவு செய்தனர். சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அந்த வேனில் ஏறினர். அவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு நல்லுசாமி சென்னை புறப்பட்டார்.
அந்த வேன் 1 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே குளப்பாக்கம் பஸ்நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென்று சாலையை கடக்க முயன்றது. எதிர் பாராதவிதமாக வேன், மணல் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இதில் வேன் டிரைவர் நல்லுசாமி மற்றும் சென்னை ஆழ்வார் நகர் மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரிட்டோ மனைவி தேன்மொழி(வயது 40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் வேனில் இருந்த நிஜாமுதீன், விஜயா, முகமது இனியாஸ், ராஜேந்திரன், சாரதா, அனிதா, செல்வகுமாரி, ஜெனிதா உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம் பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
மேலும் மனைவி மாலதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மாலை மாலதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாலதியின் கழுத்தை அறுத்தார். மாலதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
பின்னர் வேல்முருகன் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்து, மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். 2 பேரும் வீட்டில் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகு மூலம் மட்டும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே பைபர் படகில் சென்று மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இதனால் அந்த 2 பகுதி மீனவர்களுக்கிடைய முன்விரோதம் இருந்து வருகிறது. இன்று காலை தேவனாம் பட்டினத்தை சேர்ந்த 150 மீனவர்கள் அரிவாள், கடப்பாறை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து சோனாங்குப்பத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லக் கூடாது என்றனர்.
இதனால் போலீசாருக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தேவனாம்பட்டினம் மீனவர்களில் 15 பேர் தடையை மீறி திடீரென சோனாங்குப்பத்துக்கு அரிவாளுடன் சென்றனர். அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), மற்றும் பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் பஞ்சநாதன், பாண்டியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பஞ்சநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து சோனாங்குப்பத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தேவனாம்பட்டினத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரிவாளால் வெட்டி விட்டு தப்பிஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து நடைபெற இருந்தது. இதற்காக 2 குடும்பத்தினரும் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.
நேற்று முன்தினம் விஜயகுமார் , ரம்யாவை வெளியே அழைத்து சென்றார். அதன்பின் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் விஜயகுமாரையும், ரம்யாவையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து ரம்யாவின் தந்தை கோதண்டபாணி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயகுமார் மற்றும் ரம்யாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் பிணமாக மிதந்தவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பண்ருட்டி ரம்யா என்பது தெரியவந்தது.
இதுபற்றி ரம்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை வெளியே அழைத்து சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை பிடித்தனர். அவருடன் அவரது நண்பர் நல்லூர் பாளையத்தை சேர்ந்த பாண்டியனும் சிக்கினார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
எனக்கும் ரம்யாவுக்கும் இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. எனக்கு ரம்யாவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. இதையடுத்து நாம் வெளியே செல்லலாம் என்று கூறி ஏமாற்றி ரம்யாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். என்னுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எனது நண்பர் பாண்டியனையும் உடன் அழைத்து சென்றேன்.
நாங்கள் 3 பேரும் திருநாவலூர் அருகே இருந்தையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் பேசி கொண்டிருந்தோம். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று ரம்யாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்தேன். பாண்டியனுடன் சேர்ந்து ஒரு துணியால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ரம்யாவின் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலைமறைவானோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை திண்டிவனத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது33) ஓட்டி சென்றார்.
அந்த பஸ் புவனகிரியை அடுத்த கீழ்புவனகிரி திருவள்ளுவர் நகர் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பஸ்சின் இடிப்பாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் டிரைவர் ராஜேஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 37 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவரின் கை துண்டானது. விபத்து குறித்து புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பலத்த காயமடைந்த 37 பேரையும் சிதம்பரம் மற்றும் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகள் ரோபனா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (22) அங்கு வந்தார். அவர் திடீரென ரோபனாவின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரோபனா அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். இது குறித்து வேல்முருகனின் தாயார் ஜெயாவிடம் கூறினார்.ஆனால் ஜெயா தனது மகனை கண்டிக்கவில்லை. அவர் வேல்முருகனுடன் சேர்ந்து கொண்டு, நடந்த விவரங்களை வெளியில் கூறினாள், உன்னை கொலை செய்து விடுவோம் என்று கூறி ரோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட ரோபனா வீட்டில் தனியாக இருக்கும்போது விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ம.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர் வள செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்போம்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss






