search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாந்தி மயக்கம்"

    • வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
    • சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தாமரை செல்வி(30). இவர்களது குழந்தை தக்ஷினி(4). உறவினர் சிவகாமி (30). இந்த நிலையில் நேற்று மதியம் தாமரைசெல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி உடன் ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைசெல்வி, சிவகாமி, தக்ஷினி ஆகிய 3 பேருக்கும் வயிற்றுவலி, வாந்தி பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இன்று காலை சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டதோடு மறுஅனுமதி வரும் வரை வேறு எந்த உணவு பொருட்களையும் தயாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    • தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர்.
    • மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர். இதற்காக தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து அவர்கள் உணவு தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு சமைத்த உணவை அவர்கள் சாப்பிட்டனர். இதில் மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம், கொவ்வாடா அக்ரகாரத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுமார் 2,000 பேருக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.

    சில மணி நேரத்தில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அங்குள்ள பதிரேகா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக துளாறு போகபுலா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். ஆஸ்பத்திரி முன்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

    போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கல்யாண விருந்து சாப்பிட்ட 600 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகர் பகுதியில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தட்சிண கன்னடா மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்குவதற்காக கல்லூரியில் விடுதி உள்ளது.

    இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இரவு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் மாணவிகள் கூச்சலிட்டு கதறினர். இதை பார்த்த கல்லூரி மற்றும் விடுதி நிர்வாக அதிகாரிகள் அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள வெவ்வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 137 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவர்களில் ஏ.ஜே. மருத்துவமனையில் 52 பேரும், கேஎம்சி ஜோதி மருத்துவமனையில் 18 பேரும், யூனிட்டி மருத்துவமனையில் 14 பேரும், சிட்டி மருத்துவமனையில் 8 பேரும், மங்களா மருத்துவமனையில் 3 பேரும், பாதர் முல்லர் மருத்துவமனையில் 42 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், மத்திய சப்-டிவிஷன் உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திர குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். விடுதிக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    உணவு விஷமாக மாறியதே காரணம் என்று கூறப்படுகிறது.மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மங்களூரு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிட்டி மருத்துவமனை முன்பு திரண்டனர். மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

    • 3 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை முகாம் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று காலை நடந்தது.
    • லைசன்ஸ் இல்லாமல் உணவு விடுதி நடத்தியது தெரிய வந்ததால் அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அரசுமேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை முகாம் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று காலை நடந்தது.

    முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. அதனை தூய்மை பணி முடிந்ததும் கொட்டாரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளியில் வைத்து சாப்பிட்டனர்.

    இதில் 43 மாணவ-மாணவிகளுக்கு திடீர் என்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாணவ-மாணவிகள் சிகிச்சைக்காக கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆயிஷா தலைமையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதில் 13 மாணவ-மாணவிகள் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, மேயர் மகேஷ், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் அய்யப்பன் மற்றும் பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளை பார்த்தனர். அவர்களது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இன்று காலை அமைச்சர் மனோ தங்க ராஜ், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர், சிகிச்சையில் உள்ள மாணவ-மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன் மேயர் மகேஷ் மற்றும் பலர் சென்றிருந்தனர்.

    இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொட்டாரம் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை நடத்தினர். மாணவர்களுக்கு உணவு பொட்டலம் தயாரித்து வழங்கிய கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் லைசன்ஸ் இல்லாமல் உணவு விடுதி நடத்தியது தெரிய வந்ததால் அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    மாணவ-மாணவிகள் சாப்பிட்ட இட்லி, வடை, சாம்பார், சட்னி, மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரி கள் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில உள்ள நுண்ணறிவு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தவிர கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் குடிப்பதற்காகபயன்படுத்தி வந்த தண்ணீரையும் கைப்பற்றி பரிசோதனைக் காக அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் அந்த தனியார் உணவு விடுதியில் இருந்த 6 சமையல் எரிவாயு கலன்களையும் வருவாய் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

    • சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் 2-வது நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும். அந்த வகையில் நேற்று காலை தொழிலாளர்களுக்கு இட்லி, பூரி, தயிர் சாதம், வடை வழங்கப்பட்டது. இதை சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.

    இதனால் பதறிய அந்த ஊழியர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அங்கிருந்த சக தொழிலாளர்கள் 21 தொழிலாளர்களையும் மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 மணியளவில் பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இவர் பனங்கிழங்கு விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார். ஊமத்தங்காய் கள் அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று சந்தானம் திட்டமிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்த போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா, இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து பனைமரங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 பேர் வாந்தி, மயக்கத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர்.
    • இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகரில் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துவிட்டு வழக்கம் போல விடுதிக்கு வந்தனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர். இதனை சாப்பிட்டு தங்களது அறைக்கு படுக்க சென்றனர்.

    அப்போது ஒவ்வொரு மாணவியாக வெளியில் ஓடி வந்து வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்த விடுதி காப்பாளர் வாந்தி எடுத்த, மயங்கி விழுந்த மாணவிகளை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவே அனுமதித்தார். அங்கு நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும், 15 பேரும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.
    • ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார்.

    புதுச்சேரி :

    காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர்கள் ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதிகள். ஸ்டெல்லா மேரி வரிச்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது 14) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி சலேத் நிதிக்சனா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஏன் வாந்தி எடுத்தாய் என, சிறுமியிடம் தாய் கேட்டபோது, ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனே தாய் ஸ்டெல்லா மேரி சிறுமி சலேத் நிதிக்சனாவை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுமி சலேத் நிதிக்சனா சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இது குறித்து, கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர்.
    • விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர். சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து 50 மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து வகுப்பறையிலேயே மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் மாணவிகளை ஏற்றி சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் சாப்பிட்ட மற்ற மாணவிகளின் உடல்நிலையையும் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • உணவில் ஏதாவது கலக்கபட்டதா என்று போலீசார் விசாரணை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பத்மாபுரத்தை சேர்ந்தவர் ஹிமன். இவருக்கும் கங்காதரநல்லூர் முத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் சித்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    மாலையில் சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது.

    விருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயங்கி விழுந்தவர்களை பள்ளி பஸ், டிராக்டர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர், திருப்பதி, நகரி, சீல பள்ளி, பள்ளிப்பட்டு ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீ ஹரி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உணவில் ஏதாவது கலக்கபட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×