என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே பஸ்சின் மேற்கூரையில் இருந்த டயர் வெடித்து விபத்து: 20 பயணிகள் காயம்
    X

    பண்ருட்டி அருகே பஸ்சின் மேற்கூரையில் இருந்த டயர் வெடித்து விபத்து: 20 பயணிகள் காயம்

    பண்ருட்டி அருகே கடும் வெயில் காரணமான, பஸ்சின் மேற்கூரையில் இருந்த டயர் வெடித்தது. இதில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    புதுப்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு கிராமத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று வந்தது. இந்த பஸ்சை வீரன் என்பவர் ஓட்டி வந்தார். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் பஸ்சின் மேற்கூரையின் மீது மாற்று டயர் ஒன்றை வைத்திருந்தனர்.

    பஸ் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள சின்ன சேமக்கோட்டை மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேற்கூரையில் இருந்த மாற்று டயர், கடும் வெயில் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் விபத்து நேர்ந்து விட்டதோ என்று அதிர்ச்சியடைந்தனர். உடன் டிரைவர் வீரன் பஸ்சை நிறுத்தினார். இந்த நிலையில் டயர் வெடித்த அதிர்வில் பஸ்சின் மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து பஸ்சுக்குள் இருந்த பயணிகளின் தலையின் மீது விழுந்தது.

    இதில் விழுப்புரம் கல்லமேடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா (வயது 23), காமாட்சிப்பேட்டை ஆனந்தாய் (50), மலர்கொடி, திருவாமூர் அனிதா (30), கீதா (39), கஸ்தூரி (50), இந்துமதி (35), குறிஞ்சிப்பாடி நடராஜன் மனைவி விமலா (28), மகள் ஓவியா (3), சமத்துவபுரம் லட்சுமி(49), விமலாதேவி (40), விசூர் உஷாராணி (25) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×