என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துலட்சுமி பேட்டியளித்தபோது எடுத்தபடம்.
    X
    முத்துலட்சுமி பேட்டியளித்தபோது எடுத்தபடம்.

    என் கணவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வந்து இருக்கும் - வீரப்பன் மனைவி

    என் கணவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வந்து இருக்கும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். #Cauveryissue #cauverymanagementboard

    நெய்வேலி:

    சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நேற்று நெய்வேலி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மண் காக்கும், வீர தமிழர் பேரமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விழிப்புணர்வு பேரணி தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அந்த பேரணி வருகிற 3-ந் தேதி நெய்வேலிக்கு வருகிறது.

    என்.எல்.சி. நிறுவன தலைவரை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு மின்சாரம் தரக்கூடாது என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இந்த பேரணியில் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    எனது கணவர் சட்டத்தை மீறி சந்தனக்கடத்தலில் ஈடுபட்டார் என்று காரணம் காட்டி அரசு அவரை கொன்றது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது. இந்த அரசை யார் தண்டிப்பது? அரசியல் சட்டத்தை மீறியது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

    எனது கணவர் உயிரோடு இருந்தபோது கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றும் போராடினார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வந்திருக்கும்.

    சத்தியத்திற்கும், பொதுமக்களின் நலனுக்காகவுமே என் கணவர் வாழ்ந்தார். ஆனால் இன்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கும் நிகழ்வு. அரசியல் வாதிகள், அரசியல் ஆதாயத்துக்காக சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது கண்டனத்திற்குரியது. காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கிறோம். எனவே பெண்களுக்கு தனிச்சட்டம் இயற்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்.எல்.சி.யில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு, தமிழ் நாட்டில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தி பராமரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடும் வகையில் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue #cauverymanagementboard

    Next Story
    ×