என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தர்ராஜன் (24). இவர் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளதாக இவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, டிஎஸ்பி கென்னடி, எஸ்பி அபினவ்குமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா சுந்தர்ராஜனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.

    செந்துறையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    செந்துறை:

    செந்துறையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செந்துறை வடக்கு பகுதி ஒன்றிய செயலாளர் வீரவளவன், மாநில நிர்வாகி கடம்பன் , தெற்கு ஒன்றிய செயலாளர் தலித் வெற்றி, மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை, புத்தகம், நோட்டு- பேனா மற்றும் பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்ததில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை ஜெயலலிதா போல் காப்பாற்றியவர் யாரும் இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதை தற்போதைய அரசு தவறவிட்டுள்ளது. நீட் தேர்வு பிரச்சனையிலும் இதே நிலைதான் உள்ளது.

    தற்போது தமிழகத்தின் அனைத்து உமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரியலூர் அருகே ஏரியில் மண் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூரை அடுத்த கை.களத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் கிராமத்தின் அருகில் உள்ள பொன்னப்பன் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறனிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம், பொன்னப்பன் ஏரியில் முருகன் தரப்பினர் வண்டல் மண் எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு, அருகே உள்ள மேலூர் கிராம மக்கள் வந்து, எங்களுக்கு சொந்தமான ஏரியில் நீங்கள் எப்படி வண்டல் மண் எடுக்கலாம்? என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த இரு கிராமங்களை சேர்ந்தவர்களில் சிலர், தகாத வார்த்தைகளில் பேசியதால் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு கிராம மக்களும் கைகலப்பில் இறங்கினர். இதில் பொக்லைன் எந்திரத்தில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிவிரைவு போலீசார் விரைந்து சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இரு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் கை.களத்தெருவை சேர்ந்த தேவேந்திரன்(47), மகாராஜன்(45), சின்னப்பா(54), சுந்தரேசன்(59) உள்பட 11 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முருகன் தரப்பை சேர்ந்த முருகன், தேவேந்திரன், மருதகாசி, சங்கர், சிவக்குமார் ஆகிய 5 பேரையும், ராஜேஷ் தரப்பில் ராஜேஷ், சின்னப்பா, நடராஜன், இளவரசன், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் என மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை, அனுமதி இன்றி மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை, அனுமதி இன்றி மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

    கீழமாளிகை மணிகண்டன் (வயது 24), அயன்தத்தனூர் மணிவண்ணன் (28), அரியலூர் நவநீதகிருஷ்ணன் (27), புதுப்பாளையம் ராஜா (21), புதுப்பாளையம் கருப்பையா (25), அயன்தத்தனூர் வெற்றி செல்வன் (24), கீழமாளிகை திருமுருகன் (24), ஒகளுர் பிரபு, முல்லையூர் கமலகாசன் 33), ஆதிக்குடிக்காடு ராஜா (25), ஆதிக்குடிக்காடு தமிழரசன் (25),

    காரைபாக்கம் அஜித் குமார் (19), மீன்சுருட்டி ராஜசேகர், பொன்பரப்பி பிரசாத் (25), காங்கேயன்குறிச்சி நீலமேகம் (45), செம்பியகுடி கருப்பையன் (62), இடையார் கண்ணன், சொக்கலிங்கபுரம் விமல் (27), இருங்கலாங்குறிச்சி தெய்வசிகாமணி, அதே ஊரைச் சேர்ந்த குண்டு என்ற சக்திவேல் ஆகிய 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், மணல் கனிமவளம் கடத்துவோர் மீதும், கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான குழந்தையின் உடலை இன்று காலை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    திருச்சி மாவட்டம் தாராநல்லூரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். இதில் 3-வது குழந்தை ஜெனிகாசினி (2½).

    இந்நிலையில் அலெக்ஸ் தனது மனைவி சந்தியா, மகள் ஜெனிகாசினி ஆகியோருடன் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் வாரியங்காவலில் உள்ள சந்தியாவின் தாயார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக வி.கைகாட்டியை அடுத்த நெறிஞ்சிகோரை அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தின் மேல் பகுதியிலும் வெள்ளம் சென்று கொண்டிருந்தது.

    அந்த பாலம் வழியாக அலெக்ஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது அங்குள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில், அதில் இருந்த 3 பேரும் கீழே விழுந்தனர். குழந்தை ஜெனிகாசினி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள்.

    அலெக்ஸ் மற்றும் சந்தியா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பாலம் வழியாக சென்ற லாரியில் இருந்த கயிறு மூலம் 2 பேரையும் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை ஜெனிகாசினியை தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அரியலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு அரியலூர் எஸ்.பி. அபினவ்குமார் தலைமையிலான போலீசாரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு தேடியும் குழந்தையை மீட்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஜெனிகாசினி பிணமாக கிடந்தாள். உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை உடலை மீட்டு வந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தி.மு.க. தூண்டுதலின் பேரில் கமல் செல்வாக்கை இழந்து வருகிறார். சில லட்டர் பேடு கட்சிகள் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றன என்று ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. கே.என். ராமஜெயலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    நடிகர் கமலுக்கு எங்களை குறை கூற எந்த தகுதியும் கிடையாது. அவர் சொந்த வாழ்க்கையில் சினிமா துறையில் பல ஊழல்கள் செய்துள்ளார். சினிமா துறையில் ஒரு படம் நடிக்க ரூ.2 கோடி வாங்கினால் அரசுக்குரூ.10, 15 லட்சம் என்று கணக்கு காட்டுகிறார். நடிகை கவுதமியை எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் வைத்து விட்டு தற்போது அவரை கழற்றி விட்டுள்ளார். சுயநலம் இல்லாத, தூய்மை இல்லாத ஒரு நடிகர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ய தகுதி இல்லை.


    டிவிட்டர், பேஸ்புக்கில் விமர்சனம் செய்வதை விட்டு நேரிடையாக தெருவில் நின்று போராடட்டும். ஊழல் என்று சொல்பவர் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு போட வேண்டியதுதானே. தி.மு.க. தூண்டுதலின் பேரில் அவர் செல்வாக்கை இழந்து வருகிறார். சில லட்டர் பேடு கட்சிகள் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அதை வைத்து அவர் ஆட்டம் போடுகிறார்.

    விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது நாட்டை விட்டே வெளியேறுவேன் என்றார் கமல். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டு படத்தை வெளியிட செய்தார். அதை நினைத்து பார்க்காமல் இப்போது கமல் அ.தி.மு.க. ஆட்சியை குறை கூறி வருவது இழிவான செயலாகும்.

    கமலின் கருத்துக்கு எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும். அமைச்சர்கள் பதில் சொல்வதற்கு அவர் ஒன்றும் பெரிய ஆளில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள தேளூர் கிராமத்தில் சுயம்பு தேவிகருமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வருடம் தோறும் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து தேளூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    அதைதொடர்ந்து தேவிகருமாரி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் தேவிகருமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தேளூர், ஓரத்தூர், விளாங்குடி, மண்ணுழி, ரெட்டிபாளையம், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் தேளூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அரியலூர் மின் நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து சந்தை பேட்டை, ஜெயங்கொண்டம் சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் அரியலூர் நகரில் உள்ள முருகன், விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி அருகில் இருந்த மற்றொரு மின்கம்பத்தின் வயர் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 35). இவர் சென்னையில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை வருவதையொட்டி தனது சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். இதற்காக காரில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார். காரை டிரைவர் முத்துராஜா என்பவர் ஓட்டிவந்தார்.

    இந்த நிலையில் கார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. மீன்சுருட் டியை அடுத்த காடுவெட்டி அறந்தாங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறு மாறாக ஓடி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் அருகில் இருந்த மற்றொரு மின்கம்பத்தின் வயர் அறுந்து விழுந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலியபெருமாள் மகன் முத்துராமலிங்கம் (வயது 37) என்பவர் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

    அப்போது அறுந்து கிடந்த வயரில் மிதித்தார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். பலியான முத்து ராமலிங்கத்திற்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் மகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் முத்துராமலிங்கம் பலியானது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதற்கிடையே காரில் வந்தவர்கள் அதிக குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் மதுபாட்டில்கள் கிடந்ததை பொதுமக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    செந்துறை அருகே வயலை பார்த்துவிட்டு வந்த பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கீழமசூதித் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மனைவி தங்கபொண்ணு(55). இவர் நேற்று தங்களுக்கு சொந்தமான வயலை பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திட்டகுடிக்கு செல்லும் சாலை எது என கேட்டுள்ளார். அதற்கு தங்கபொண்ணு பதில் கொடுக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்து கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அருகே வறுமையின் காரணமாக இறந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய பணமின்றி அரசு மருத்துவமனையில் மனைவி, குழந்தைகள் பரிதவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). இவர் கூலி வேலைக்கு சென்ற போது வேற்று ஜாதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் துரைராஜ் (50) என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் இரண்டு தரப்பினரின் உறவினர்களும் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். துரை ராஜ், ராணி இருவரும் சிந்தாமணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

    இவர்களுக்கு தமிழரசன், (13) என்ற மகனும், தமிழரசி (12), தமிழ்ச்செல்வி (9) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் அதே பகுதியில் தா.பழூர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துரைராஜூக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் துரைராஜை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று மாலை இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய வசதி இல்லாத ராணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் உடலை வைத்துக்கொண்டு அழுதனர். நல்லடக்கம் செய்ய பணம் இல்லாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே பரிதவித்தனர்.

    சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இவர்களின் நிலைகளை கண்டு மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்களால் இயன்ற பணத்தினை நான்கு பேருக்கும் இரவு உணவிற்காக கொடுத்து உதவினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன் மற்றும் வி.ஏ.ஓ. பொய்யாமொழி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்து போன துரைராஜ் உடலை பார்வையிட்டு நாளை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
    அரியலூரில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனைவரும் கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் செந்தமிழ் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலா ளர்கள் கவியரசன், தெய்வா, திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் குமாரதேவன், செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ் வரவேற்றார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனைவரும் கொண்டாட வேண்டும், அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகள், நகரம், பேரூர் வார்டுகளில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சின்னபாண்டு, முன்னாள் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளர் ஜோசப் சத்திய மூர்த்தி, முன்னாள் பொதுக்குழு குழு உறுப்பினர்கள் தங்க ஜெயபாலன், செந்தில், உடையார்பாளையம் பேரூராட்சி செயலாளர் முனியசாமி, மாவட்ட கேப்டன் மன்ற நிர்வாகிகள் சேகர், புயல் செல்வம், முத்து, மாணவரணி சதீஸ்,

    மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, கணேசன், ராமச்சந்திரன், பழனிவேல், மாவட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் வேலுமணி, பாண்டியன், சகாதேவன் மற்றும் அரியலூர் நகர நிர்வாகிகள் மதி, ராஜா, சேகர், ரமேஷ், அலுமினிய ரமேஷ், பூங்காவனம், கண்ணன், செல்வகுமார், சக்திவேல், முருகன், மருதை, நமச்சி வாயம், அரியலூர் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில், சசி குமார், ராஜீவ்காந்தி, மகேஷ்வரி, செல்வராணி, ஜெய்சங்கர், பழனிச்சாமி, அய்யா துரை, பாலு உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் அரியலூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ×