என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கார் மின் கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 35). இவர் சென்னையில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை வருவதையொட்டி தனது சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். இதற்காக காரில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார். காரை டிரைவர் முத்துராஜா என்பவர் ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் கார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. மீன்சுருட் டியை அடுத்த காடுவெட்டி அறந்தாங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறு மாறாக ஓடி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் அருகில் இருந்த மற்றொரு மின்கம்பத்தின் வயர் அறுந்து விழுந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலியபெருமாள் மகன் முத்துராமலிங்கம் (வயது 37) என்பவர் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
அப்போது அறுந்து கிடந்த வயரில் மிதித்தார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். பலியான முத்து ராமலிங்கத்திற்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் முத்துராமலிங்கம் பலியானது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே காரில் வந்தவர்கள் அதிக குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் மதுபாட்டில்கள் கிடந்ததை பொதுமக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






