என் மலர்
செய்திகள்

லட்டர் பேடு கட்சிகள் ஆதரவுடன் கமல் ஆட்டம் போடுகிறார்: ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. பேட்டி
ஜெயங்கொண்டம்:
தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. கே.என். ராமஜெயலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
நடிகர் கமலுக்கு எங்களை குறை கூற எந்த தகுதியும் கிடையாது. அவர் சொந்த வாழ்க்கையில் சினிமா துறையில் பல ஊழல்கள் செய்துள்ளார். சினிமா துறையில் ஒரு படம் நடிக்க ரூ.2 கோடி வாங்கினால் அரசுக்குரூ.10, 15 லட்சம் என்று கணக்கு காட்டுகிறார். நடிகை கவுதமியை எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் வைத்து விட்டு தற்போது அவரை கழற்றி விட்டுள்ளார். சுயநலம் இல்லாத, தூய்மை இல்லாத ஒரு நடிகர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ய தகுதி இல்லை.

டிவிட்டர், பேஸ்புக்கில் விமர்சனம் செய்வதை விட்டு நேரிடையாக தெருவில் நின்று போராடட்டும். ஊழல் என்று சொல்பவர் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு போட வேண்டியதுதானே. தி.மு.க. தூண்டுதலின் பேரில் அவர் செல்வாக்கை இழந்து வருகிறார். சில லட்டர் பேடு கட்சிகள் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அதை வைத்து அவர் ஆட்டம் போடுகிறார்.
விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது நாட்டை விட்டே வெளியேறுவேன் என்றார் கமல். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டு படத்தை வெளியிட செய்தார். அதை நினைத்து பார்க்காமல் இப்போது கமல் அ.தி.மு.க. ஆட்சியை குறை கூறி வருவது இழிவான செயலாகும்.
கமலின் கருத்துக்கு எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும். அமைச்சர்கள் பதில் சொல்வதற்கு அவர் ஒன்றும் பெரிய ஆளில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






