என் மலர்
அரியலூர்

அரியலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் மாணவ- மாணவிகளுக்கு குடிப்பதற்கு கூட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அடிப்படை வசதிகளான பராமரிப்பற்ற கழிவறை, குடிநீர் வசதிகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும். இலவச பஸ் பயண அட்டை மாணவ - மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் கல்லூரியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து மாணவ-மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிற்றரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் கல்லூரிக்கு இரண்டு நாட்கள் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.
அரியலூர் அருகே உள்ள புதுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகளுக்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதையடுத்து ரேவதியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள பூலாம்பாடியில் இருந்து அவரது உறவினர்கள் 32 பேர் நீராட்டுதல் நிகழ்ச்சிக்கு ஒரு வேனில் வந்தனர். வேனை அதேபகுதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 50) என்பவர் ஓட்டினார்.
வெண்மணி கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க சாலையோரம் வேனை டிரைவர் திருப்பினார். அப்போது வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியும் அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. இதனால் லாரியில் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்து அய்யோ... அம்மா... என்று அபயக்குரல் எழுப்பினர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த 32 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் வேன் டிரைவர் பச்சையப்பன், லாரி டிரைவர் செல்வா (30) ஆகியோரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், கோட்டாட்சி தலைவர் மோகனராஜன், தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை, நீட் தேர்வு பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன் வரவேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் நேற்று ஒரு முதலமைச்சர், இன்று ஒரு முதலமைச்சர், நாளை யார் முதலமைச்சர் என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியை கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியை கொண்டு வரவேண்டும். பின்னர் முறையாக சட்டமன்ற தேர்தலை நடத்தவேண்டும்.
தே.மு.தி.க. தமிழகத்தில் வலுவான இயக்கமாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். நாஞ்சில் சம்பத் ஓர் அரசியல் வியாபாரி, அவரது பேச்சை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அரியலூர் மாவட்டத்தில் ஓர் அரசு சிமெண்ட் ஆலை, 6 தனியார் சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. அளவுக்கு அதிகமாக சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதால் விவசாயம் செய்ய முடியாமலும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் இதனை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுக்கும் மேல் ஆகிவிட் டது. திட்டம் செயல்படுத்தப் படவில்லை, இழப்பீடு தொகையும் வழங்கவில்லை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீன்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் டி.கே.எஸ். நகரில் கோவிந்தன் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் இரண்டாவது தளம் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக தற்காலிக ‘லிப்ட்‘ வசதி செய்யப்பட்டு கான்கிரீட் கலவைகள் மேலே கொண்டு செல்லப்பட்டன. மாலையில் பணி முடிந்து தற்காலிக லிப்ட் அகற்றும் பணி நடந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் கம்பியில் ‘லிப்ட் ரோப்‘ (இரும்பு கயிறு) விழுந்தது.
இதனால், மின்கம்பி அறுந்து 4 வீடுகள் தள்ளி ‘செப்டிக் டேங்க்‘ அமைக்க பள்ளம் தோண்டி கொண்டிருந்த தொழிலாளி முருகேசன்(வயது 54) என்பவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருமானூர் போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை மகன் அய்யப்பன் (25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு கொடுக்கூரிலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குவாகம் ஆண்டாள் தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அய்யப்பனின் தலைமீது பஸ்சின் முன் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தப்பி ஓடிய நிலையில் அப்பகுதி மக்கள் அய்யப்பன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த உறவினர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அரியலூர் டி.எஸ்.பி, மோகன்தாஸ், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் பொதுமக்களிடம் பஸ் டிரைவர் மீது உரிய நடைவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் குவாகம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில், அ.தி.மு.க.(அம்மா) குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியில் சிறப்பாக பணியாற்றியதற்காக தன்னை பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் பதவியில் அமர்த்தியவர் ஜெயலலிதா. நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளார்.

21 எம்.எல்.ஏ.க்கள் எதற்காக புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்று கூவத்தூரில் தங்கினோம். ஆனால், இவர்கள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றவேண்டும் என்று புதுச்சேரியில் தங்கியுள்ளனர்.
தினகரன் எதற்காக சசிகலாவின் பெயரையும், படத்தையும் நீக்கிவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தார். கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் சசிகலாவை ஏற்கவில்லை என்பதற்கு தானே?. அதனால் தான், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவரும் இணைந்து சசிகலாவை நீக்க முடிவு செய்தோம். நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
தி.மு.க.வினர் அ.தி.மு.க. வை ஊழல் கட்சி என்று சொல்லவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போதே, கட்சி வேட்டியை கட்டிக்கொண்டு சில எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். இது வெட்ககேடான செயலாகும்.
சிலர் தங்களது சுயலாபத்திற்காக ஜெயலலிதா ஆட்சியை மிரட்டி வருகிறார்கள். எனவே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரிடமும் கெஞ்சாமல், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தைரியமாக ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளனர்.

சசிகலாவை பொதுச்செயலாளராக வேண்டும் என்று எண்ணும் 21 எம்.எல்.ஏ.க்களும், சசிகலாவின் பெயரையும், படத்தையும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கட்டும். அப்போது தெரியும் இவர்களது நிலைமை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “முதல்-அமைச்சரை மாற்றவேண்டும் என்றால், தலைமை கழகத்தில் அனைவரும் ஒன்றுகூடி தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து கவர்னரிடம் மனு கொடுப்பது தினகரன் தி.மு.க.விற்கு கொடுக்கும் சிக்னல். நாங்கள் மனு கொடுக்கிறோம், நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பதாகும். சாதி பாகுபாடு இல்லாமல் கட்டுக்கோப்பாக இருக்கும் அ.தி.மு.க.வில் தினகரனும், திவாகரனும் சாதிப்பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள்” என்றார்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெ.தீபா பேரவை செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செந்துறை குமார், ஆண்டிமடம் தர்மலிங்கம், ஜெயங்கொண்டம் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர் கோபி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவோடும், ஆலோசனையோடும் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை பற்றி தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையை மாற்றக்கூடிய ஒரே தலைவர் ஜெ.தீபா மட்டும் தான். விரைவில் தமிழகத்தில் தீபா தலைமையில் நல்ல ஆட்சி அமையும் என்றார். கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகமும் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக அரியலூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர். திருச்சி விமான நிலையத்தில் அவர்களுக்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய வரவேற்பு முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் நேராக அரியலூருக்கு புறப்பட்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அரியலூருக்கு சென்றார்.
விழா மேடை அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இதனை ஏராளமானவர்கள் பார்த்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.ஜி.ஆர். பற்றிய கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள், ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
நேற்று மாலை 4 மணி அளவில் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் - அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் முதலில் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். உருவ படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இந்த விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். 11,514 பயனாளிகளுக்கு ரூ.86 கோடியே 71 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார்.

விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மக்களுக்கு எதுவும் செய்யாமல் மக்கள் தலைவர் என்று சொல்பவர்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர்.வழியில் ஆட்சி அமைத்த ஜெயலலிதா தமிழகத்தை குடிசைகள் இல்லா மாநிலம் ஆக்க வேண்டும் என பாடுபட்டார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தார்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் மக்களின் பக்கம் நாம் இருக்கிறோம்.
நாம் எல்லோரும் ஒரே அணியில் நின்று இந்த ஆட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாசப்பிணைப்புடன் இருந்து அம்மா ஆசையை நிறைவேற்ற வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சிறிய கதையை கூறுகிறேன்.
ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அந்த சாமியார் ஒரு கிராமத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக சென்றார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஒவ்வொரு வரும் தனித்தனியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், விரோதிகள் போல் இருந்தார்கள். அதை கண்ட சாமியார் நீங்கள் இப்படி இருந்தால் இந்த ஊர் எப்படி முன்னேறும். இன்னும் ஒரு வாரம் கழித்து நான் இந்த கிராமத்திற்கு மீண்டும் வருவேன்.
அப்போது நீங்கள்அனைவரும் ஒற்றுமையோடு இருப்பதை நான் பார்க்க வேண்டும் என கூறி அவர்கள் ஒவ்வொருவரிடமும் கையில் கட்டிக்கொள்ளும் 3 கயிறுகளை கொடுத்தார். இந்த கயிறுகளை கொண்டு சென்று ஒவ்வொருவரும் உங்களுக்கு பிடித்தமான 3 பேரின் கையில் கட்டுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். அவர்களும் தங்களுக்கு பிடித்தமானவர்கள் கையில் அந்த கயிறுகளை கட்டினார்கள். மறுமுறை சாமியார் அந்த கிராமத்திற்கு சொற்பொழிவாற்ற வந்த போது அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தார்கள்.
இந்த கதை எதற்காக கூறினேன் என்றால் கட்சிக்கும். ஆட்சிக்கும் ஒற்றுமையுடன் இருந்து வலு சேர்க்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்காக பாடுபட வேண்டும்.
3 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் இருக்கும் வரை மக்கள் இதயத்தில் இருந்து இந்த அரசை ஒரு போதும் பிரிக்க முடியாது. நேற்று வரை நம்மோடு இருந்தவர்கள் இப்போது இந்த அரசு ஊழல் அரசு என்கிறார்கள். அதற்கான பதிலை அவர்களது மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமருவதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் போடப்பட்டுள்ளன. மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது.
விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா எஸ். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தினை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர்.
அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தனித்தனியாக நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கிய பின்னர் முதன் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பேச உள்ளதால் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழா தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை (23-ந்தேதி) அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.
விழாவுக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்குகிறார். மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பி துரை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா எஸ். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தினை திறந்து வைத்து, ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.
விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினர் செய்துள்ளனர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பொது மக்கள் பார்வையிடும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று விழா நடைபெறும் இடம் மற்றும் அரியலூர் நகரின் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்- தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வர்-துணை முதல்வர் வருகையையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதிகாரிகள் நிதி இல்லை என்றனர். மக்களிடம் கையேந்தி இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நிறைவேற்றினார். அவர் வழியில் அம்மா அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றினார். அவரின் 100-வது ஆண்டு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் திரண்டு வந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மருதமுத்து, குமரவேல், கல்யாணசுந்தரம், வரதராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.






