என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் படுகாயம்
    X

    அரியலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் படுகாயம்

    அரியலூர் அருகே லாரி மீது மோதாமல் இருக்க திருப்பியபோது வேன் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள புதுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகளுக்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதையடுத்து ரேவதியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள பூலாம்பாடியில் இருந்து அவரது உறவினர்கள் 32 பேர் நீராட்டுதல் நிகழ்ச்சிக்கு ஒரு வேனில் வந்தனர். வேனை அதேபகுதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

    வெண்மணி கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க சாலையோரம் வேனை டிரைவர் திருப்பினார். அப்போது வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியும் அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. இதனால் லாரியில் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்து அய்யோ... அம்மா... என்று அபயக்குரல் எழுப்பினர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த 32 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் வேன் டிரைவர் பச்சையப்பன், லாரி டிரைவர் செல்வா (30) ஆகியோரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், கோட்டாட்சி தலைவர் மோகனராஜன், தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×