என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் சாத்தம்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 90). இவரது மகன் தங்கராசு (60). இருவரும் விவசாய தொழில் செய்து வந்தனர்.
இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக கத்தரிக்காய் தோட்டம் உள்ளது. நேற்று அந்த தோட்டத்திற்கு 2 பேரும் சென்றனர். பின்னர் தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு மாடுகளுக்கு புல் அறுத்து கட்டு கட்டினர்.
பின்னர் புல் கட்டை தோட்டத்தில் அங்கேயே வைத்து விட்டு வீடு திரும்பினர். இன்று அதிகாலை 6 மணிக்கு புல் கட்டை எடுக்க தோட்டத்திற்கு வேலாயுதமும் அவரது மகன் தங்கராசுவும் சென்றனர்.
அப்போது வேலாயுதம் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர் பாராதவிதமாக மிதித்து விட்டார். அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கராசு அங்கு ஓடி வந்து தந்தை வேலாயுதத்தை தொட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை- மகன் 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான வேலாயுதம், தங்கராசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் அரியலூர் அரசு கல்லூரியில் படிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று கல்லூரியில் இருந்து அரியலூர் பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்ற மாணவர்கள், அங்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு ஆகியதும் 30 மாணவர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் இருளப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்து தூங்கினர்.

இன்று காலை கல்லூரிக்கு வந்த மற்ற மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதனால் போராட்டம் தீவிரமாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் 5 நாட்கள் விடுதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அரியலூர்:
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவா ரணநிதியும், அவரது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து நிதியை வழங்குவதற்காக குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உள்பட அதிகாரிகள் சென்றனர். அங்கிருந்த அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர்கள் மணிரத்னம், சதீஷ்குமார், பாண்டியன், அருண்குமார் ஆகியோரிடம் அரசு சார்பில் அனிதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
பின்னர் அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர். ஆனால் அதனை அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் வாங்க மறுத்து விட்டனர்.
இது குறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறியதாவது:-
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவ கனவு தகர்ந்ததை எண்ணி தான் எனது தங்கை உயிரை மாய்த்து இருக்கிறார். நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய இரு அரசுகள் தான் ஒரு வகையில் காரணமாய் இருக்கின்றன. எனவே இந்த தொகையை நாங்கள் வாங்கினால் அது தங்கை அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தும் படியாக மாறிவிடும்.
நீட் தேர்வினை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் இந்த நிதியை பெற்று கொள்கிறோம் என உருக்கமாக கூறினார்.
எனினும் நிதியை வாங்கி கொள்ளுமாறு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் நிதியை வாங்காமல் இருப்பது தொடர்பான தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் உள்ளிட்டோர் நிதியை வழங்காமல் திரும்பி சென்றனர்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இந்த தொகைக்கான வரைவோலையுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா இன்று அனிதாவின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு அவரது குடும்பத்தினரிடம், அரசு அறிவித்துள்ள 7 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான வரைவோலையை கொடுத்தார். ஆனால், மகளை இறந்த வேதனையில் இருந்த குடும்பத்தினர் அந்த வரைவோலையை வாங்க மறுத்துவிட்டனர்.
அனிதாவின் உறவினர்களிடம் இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், நிதியுதவி பெற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
நீட் விவகாரத்தில் அரசு சாதகமாக முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அரசு நல்ல முடிவை அறிவித்த பின்னர் இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்வதாகவும் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறினார். மேலும், தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை பிற மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தற்கொலை செய்த அனிதாவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தந்தை சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று இரவு இறுதிச்சடங்கு முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குழுமூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து முழக்கமிடும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக முதலமைச்சர் உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக கூறினர். இதேபோல் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று 10 மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
குழுமூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செந்துறை:
நீட் தேர்வால் தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு தமிழர் தேசிய பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நீட் தேர்வை எதிர்த்து அறைகூவல் விடுத்து சென்றுள்ளார் அனிதா. அவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடத்திற்கு நீட் தேர்வை விலக்கி வைத்திருந்தால் அனிதாவின் மரம் நிகழ்ந்திருக்காது. அவரது இறுதி ஊர்வலத்தில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மக்கள் அதிகாரம், புரட்சி கர மாணவர் இயக்கம், மே 17 இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பிலும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, நீட் தேர்வு கிராமத்து மாணவர்கள் மருத்துவர்களாக வரக் கூடாது என்பதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை. எத்தகைய மனவேதனைக்கு ஆளாகியிருந்தால் அனிதா தற்கொலை செய்திருப்பார். நீட்தேர்வால் தமிழகத்திற்கு வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு பதவியை காப்பாற்றுவதற்காக மாநில கல்வி கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளது. அதில் அனிதா பலியாகிவிட்டார். நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும், இல்லை யென்றால் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு மாவளவன் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இன்று குழுமூருக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஊரின் எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பிற்பகலில் மாணவி அனிதாவுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு உடல் தகனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் ஒரு கூலித்தொழிலாளியின் மகளாக பிறந்த அனிதா எப்படியாவது மருத்துவர் ஆகவேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்தார்.
மருத்துவ படிப்புக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் எமனாக வந்த நீட் தேர்வால் நேற்று தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழில் செய்து வந்தாலும் மனம் தளராத அனிதாவின் தந்தை சண்முகம், தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் தனது பிள்ளைகள் படக்கூடாது என்ற எண்ணத்தில் மகள் உள்பட 5 பிள்ளைகளையும் கடின உழைப்பால் படிக்க வைத்தார்.
சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற அனிதாவின் கனவை நிறைவேற்றவேண்டும் என்று அவர் அளித்த ஊக்கம் தான் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெறவைத்தது.
அனைத்து வீணாகி போன நிலையில் ஸ்டெத்தஸ்கோப்பு மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி உயிரை மாய்த்துக்கொண்ட மகளின் உடலை பார்த்து தந்தை சண்முகம் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.
கண்ணீருடன் அனிதாவின் தந்தை சண்முகம் கூறியதாவது:-
சிறு வயதிலேயே தாயை இழந்த அனிதா எனது குறைந்த வருமானத்தை கருத்தில் கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருங்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்தார். வீட்டுக்கு அவர் ஒரே பெண் குழந்தை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்ட போதிலும் தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றபோது நிச்சயமாக மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அந்த அனிதாவின் கனவு சிதைந்து அவரது உயிரையே பறித்து விட்டது.
மருத்துவராக பார்க்க வேண்டிய மகளை மரண கோலத்தில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நானும், எனது மகன்களும் பல்வேறு கூலி வேலைக்கு சென்று அனிதாவை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கேற்றவாறு அவரும் கடினமாக படித்தார்.
இந்த ஊரிலேயே நன்றாக படிக்கும் பெண் என்ற பெயரும் வாங்கினார். நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நேரம் அவருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்திருக்கும். அதனை கெடுத்து விட்டார்கள்.
இந்த நாட்டில் கூலித் தொழிலாளர்களின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் டாக்டராக கூடாதா? நீட் தேர்வால்தான் எனது மகளை நான் இழந்து தவிக்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். அனிதாவுக்கு கால் நடை மருத்துவம் படிக்க கிடைத்த வாய்ப்பை அவர் விரும்பவில்லை. இதுபற்றி எதுவும் எங்களிடம் பேசாமல் விரக்தியிலேயே இருந்தாள்.
தான் விரும்பியபடி டாக்டராக முடியவில்லையே என்று மனதிற்குள் புழுங்கி தவித்த அனிதா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள். உச்சநீதிமன்றம் வரை என் மகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனி மேல் இது போன்று எந்த ஒரு குடும்பத்திலும் நடக்க கூடாது.
எனது மகள் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்து சென்ற போலீசார் அடக்குமுறையை கையாண்டனர். அதற்காக எங்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனிதாவின் பெரியம்மா மகன் அறிவுநீதி கூறும் போது, ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்திருக்க மாட்டார். அனிதாவும் இறந்திருக்க மாட்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு அதற்கென படித்த என் தங்கை அனிதாவும் மருத்துவர் ஆகியிருப்பார்.

ஆனால் ஜெயலலிதா இல்லாததால் தமிழ்நாட்டில் நீட் தேர்வும் நடந்து, அதன் காரணமாக இப்போது என் தங்கையையும் நாங்கள் இழந்து நிற்கிறோம்.
அனிதாவின் சாவுக்கு இப்போதுள்ள அரசுதான் முழுக்க முழுக்க காரணம். யார் என்ன ஆறுதல் கூறினாலும் இனி என் தங்கை எங்களுக்கு கிடைக்கமாட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் கூறும் போது, மாணவி அனிதாவின் தற்கொலை மத்திய அரசின் திட்டமிட்ட கொலை. அனிதாவை ஓராண்டு நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் தந்தை அனிதா படித்ததும் போதும், நீட் வகுப்பு எல்லாம் வேண்டாம் என குடும்ப சூழல் காரணமாக விரக்தியுடன் கூறினார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்த அனிதாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த இழப்பை கடந்து செல்ல முடியவில்லை. மத்திய அரசு மாநில பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் பல அனிதாக்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அனிதாவின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என்றார்.
அனிதா படித்த பள்ளியின் தலைமையாசிரியர் நவநீத கிருஷ்ணன் கூறும் போது, பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளில் கூட சாதாரணமாக படிக்காமல் அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து தேர்வு எழுதுவார். நீட் தேர்வு முடிவால் அனிதா டாக்டராக முடியவில்லை. இது மிகவும் துயரமானது என்றார்.
‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் இறந்து விட்டார். சிறு வயது முதலே அனிதாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.
தந்தையின் குறைந்த வருமானத்தில் தனியார் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கட்-ஆப் 196.75 என்பதால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் ‘நீட்’ தேர்வில் அவருக்கு 700-க்கு 86 மார்க் மட்டுமே கிடைத்தது. இதனால் அவரது டாக்டர் கனவு தகர்ந்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியும் ஆசை நிறைவேறாமல் போனது.
டாக்டருக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றாலும், வேளாண் படிப்பு படித்து விவசாயம் செழிக்க பாடுபடுவேன் என்று கூறி மனதை தேற்றி வந்தார். ஆனாலும் உள்மனதில் டாக்டர் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியா, போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் அனிதா உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அனிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து தந்தை சண்முகத்திடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது சண்முகம் மற்றும் அனிதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
நீட் தேர்வுக்கு ஒரு முடிவு வரவேண்டும், தமிழக அரசு பொறுப்பு ஏற்று நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் கட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்களும் அனிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதனால் நேற்றிரவு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு அனிதாவின் உடலை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பெற்று கொண்டு சொந்த ஊரான குழுமூருக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அனிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குழுமூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்த குழுமூர் விரைந்துள்ளனர்.
இன்று மதியம் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்பிறகு அனிதாவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
உணர்வுப்பூர்வமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் சிறு கடைகள் கூட திறக்கப்படவில்லை. வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
நீட்தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல, மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார். அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலியிட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவ சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வர வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு போதும் முயற்சித்தல் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனித்தெருவை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப்படிப்பு கனவு நிறைவேறாத வேதனையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனிதாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவரது உறவினர்கள், உடலை எடுக்கவிடாமல் தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வால் தன்னால் டாக்டராக முடியாது என்ற மனவேதனையில் தான் அனிதா இறந்தார். இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நிகழாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிதாவின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
அப்போது இதுபற்றி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் லட்சுமிபிரியா தெரிவித்தார். அதன் பின்னர் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குழுமூர் கிராம மக்களுடன் சேர்ந்து குழுமூர்-செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். மேலும் பிளஸ்-2 தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செந்துறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அரியலூரில் நாளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 5-ம் தேதி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.






