என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தில் செந்துறை அ.தி.மு.க. பிரமுகர் கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்போவதாக கிடைத்த தகவலை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மதுப்பெட்டிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனராம். இதையறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்து மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். மீண்டும் கடை திறக்க முயற்சித்தால் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கைச்சேரி பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் வடபுறம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். காலங்காலமாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு இதுநாள் வரை சாலை வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாய் இந்த சாலை உருக்குலைந்து விடுகிறது. மேலும், இங்கு உள்ள மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் சாலை வசதி கேட்டு பல முறை அரசிடம் மனு கொடுத்தும், போராடியும் இதுவரை சாலை வசதி செய்யவில்லை.
இந்நிலையில் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விழுப்பணங்குறிச்சியில் வசிக்கும் அந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் சாலை வசதி கேட்டு அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயலெட்சுமி, வளர்மதி, கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் உலகநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணைச்செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பரிசுத்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீபுரந்தான் பகுதியில் வேலை நடைபெற்று வந்தது. இந்த ஊரில் பொதுமக்களுக்கு 100 நாள் வேலையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு தரப்பினருக்கு வேலை அதிகமாகவும், மற்றொரு தரப்பினருக்கு வேலை குறைவாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை குறைவாக வழங்கப்பட்ட ஒரு தரப்பினர் ஸ்ரீபுரந்தான்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், விக்கிரமங்கலம் போலீசார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இனி இதுபோல் தவறு நடக்காமல் முறையாக வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் ஸ்ரீபுரந்தான்- அரியலூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது வீட்டுக்கு நேற்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா நேரில் சென்றார். அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்து இருந்திருக்காது.
அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.கல்வியை மாநில உரிமை பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். வருங்கால மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழக ஆட்சியாளர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடிய பட்சத்தில் 234 தொகுதியிலும் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கட்சி போட்டியிடும் என்றார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஒட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (வயது 14). இவர் சுண்டக்குடி அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறையை அடுத்து நேற்று அவர் சக நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் விளையாடியுள்ளார். பின்னர் நண்பர்களிடம் ஆடு மேய்ப்பதற்காக செல்கிறேன் எனக்கூறி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் அறிவழகனின் தாய் பாப்பாத்தி விவசாய வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்ற போது, வீட்டிற்குள் அறிவழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தூத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அறிவழகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அறிவழகன் உடலில் கீரல்களுடன், வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அறிவழகன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ஏதாவது பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது புளூவேல் விளை யாட்டில் சிக்கியதால் இறந் தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறு களத்தூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஸ்வநாதன். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக களத்தூர் பகுதி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனை அணுகினார். அப்போது அவர் விஸ்வநாதனிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விஸ்வநாதன், இது குறித்து விஸ்வநாதன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து சீனிவாசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் 3.9.2017 முதல் 7.9.2017 வரை நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக இராம.ஜெயவேல், மாவட்ட தலைவராக ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளராக கவியரசன், மாவட்ட துணை செயலாளர்களாக தெய்வ சிகாமணி, எழிலரசன், ஜெயபாலன், தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக குமார், ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர்களாக ஜேக்கப் ஜெராமியஸ், கலியமூர்த்தி, ராஜா, செந்தில்குமார், ஜெயவேல் ஆகியோர்களை மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் பரிந்துரையின் பேரில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வராசு வரவேற்று பேசினார்.
அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் தங்க.பிச்சமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தலைமை கழக பேச்சாளர்கள் நூர்ஜகான், பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், இலக்கிய அணி செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் தான் மாணவர்களை ஏமாற்றி விட்டன. அதன் விளைவு தான் மாணவி அனிதாவின் துயர முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் மாநில அரசின் கல்வி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட கூடாது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலக நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிற்றம்பலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்துகட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்துகட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை அனுமதிக்க கோரியும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட குழுமூர் மாணவி அனிதாவின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்தும் பலர் பேசினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் தேவராஜன், நகர செயலாளர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சி சார்பில் தேனூர் கிருஷ்ணன், சையது பதோதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 80), விவசாயி. தனக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்தில் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெகதாம்பாள். அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களும் மதம் மாறி கடலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். ஜெகதாம்பாளும் கலியபெருமாளை பிரிந்து சென்று பல வருடங்கள் ஆகிறது. பிள்ளைகள் யாரும் தொடர்பில் இல்லை.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்பவரை கலியபெருமாள் இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு 8 மகள்களும், அண்ணாதுரை என்ற ஒரு மகனும் உள்ளனர். அனைத்து மகள்களுக்கும் திருமணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். 2-வது மனைவி சரோஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
கலியபெருமாள் நகை, பணத்துடன் சற்று வசதியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய கலியபெருமாள் சாப்பிட்டு விட்டு மாடி அறையில் தூங்க சென்றார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கலியபெருமாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கலியபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. அபிநவ் குமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏராளமான நகை மற்றும் பணம் வைத்திருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அதனை கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து கலியபெருமாளை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி நடைபயண பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பிரசாரம் கள்ளூரில் தொடங்கி, வெற்றியூர், சாத்தமங்கலம், கீழப்பழுவூர், வண்ணம்புத்தூர், தட்டாண்சாவடி, கீழகாவட்டாங்குறிச்சி, சேனாபதி வழியாக முடிகொண்டானில் வந்து நிறைவடைந்தது.
பிரசாரத்தில், மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மக்களுக்காக செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மாணவி அனிதாவின் சாவில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் நேரடியாகவோ, மறைமுகமாவோ சம்பந்தப்பட்டு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டார்.
மேலும் அனிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். மேலும் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து மனு கொடுத்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் சகோதரர் மணி ரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு உதவி செய்த தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு மீது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார். அவருடைய குற்றச்சாட்டு உண்மையல்ல. எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பதை கிருஷ்ணசாமி நேரடியாக பார்த்தது கிடையாது. அது பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் தெரிந்தது போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
தயவு செய்து அவ்வாறு அவர் பேசக்கூடாது. காவிக்கு பின்னால் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர் பேசி கொண்டிருக்கிறார். எங்களை பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் தெரியாமல் அவர் பேசக்கூடாது. எங்களுக்கு உதவியவர்களை அவதூறாக பேசக்கூடாது. ஏற்கனவே நாங்கள் கஷ்டத்தில் உள்ளோம். இதுபோல் பேசுவதால் மேலும் கஷ்டமாக உள்ளது. உண்மையான நிலவரம் தெரியாமல் ஆதாரம் இல்லாமல் தன்னிச்சையாக டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.
அவரை பற்றி தனிப்பட்ட முறையில் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு காலத்தில் அவரை அண்ணனாக நினைத்துள்ளேன். எனவே எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது போல் அவர் நடந்து கொள்ளக்கூடாது.
அனிதாவின் இறப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் இணைந்து போராடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






