என் மலர்
அரியலூர்
அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் செயலை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஆட்டோ மற்றும் டாக்சி தொழிலை நசுக்க அக்ரிகேட் முறை, வருடம் ஒருமுறை வாகனத்திற்கு எப்சி எடுக்கும் முறை, கார்ப்ரேட் கம்பெனிகளிடம் ஓட்டுனர் உரிமை வழங்கும் உரிமை ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு வழிகாட்டுதல் படி அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்கு அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளர் குழந்தைவேல், துணை தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினர்.ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் தண்டபாணி,சி.ஐ.டி.ï.சி. சிற்றம்பலம் ஆகியோர் துவக்க உரையாற்றினர். மாவட்ட தலைவர் ஜவகர் மத்திய அரசின் தொழில் விரோத சட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்த்தில் கால் டாக்சி உரிமையாளர் சங்க தலைவர் பால சுப்பிரமணியம், மினிலோடு ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் தாமஸ் ஏசுதாஸ், ஆட்டோ உரிமையாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், மினிபஸ் உரிமையாளர் சங்கம், மினிபஸ் ஓட்டுனர் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை முத்து நகரை சேர்ந்த அழகுதுரை மனைவி பழனியம்மாள்(47) இவர் நேற்று மதியம் இரண்டு மணியளவில் அருகிலுள்ள இலங்கச்சேரியில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக செந்துறை- இலங்கச்சேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் இந்த வழி இரும்புலி குறிச்சி போகுமா எனக் கேட்டுள்ளார் அப்போது போகாது என பழனியம்மாள் பதிலளித்த போதே அந்த இளைஞர் பழனியம்மாளின் முகத்தில் மிளகாய் வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத பழனியம்மாள் கூச்சலிட்டார்.
உடனே மர்ம நபர் பழனியம்மாள் கழுத்திலிருந்த 3 பவுன் செயின் மற்றும் 2 பவுன் செயினை பறித்து கொண்டு பழனியம்மாளை கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் பழனியம்மாள் மீது தண்ணீர் ஊற்றிய பின் நடந்தவற்றை கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை போலீஸ் தனி பிரிவு தலைமை காவலர் சஞ்சீவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு அறுந்து கிடந்த 2 பவுன் செயினை மீட்டு பழனியம்மாளிடம் கொடுத்தனர். இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களை தற்பொழுது நிலவேம்பு கசாயமும், பப்பாளியும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு போதிய அளவு செய்ய வில்லை. வருமுன் காப்பதற்கான நிகழ்ச்சியை நடத்தவில்லை.
டெங்கு மட்டும் அல்லாமல் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றை ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அனைத்து கட்சிகளுடன் இணைந்து ஆங்காங்கே குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . அந்த மனப்பான்மை தமிழக அரசிடம் இல்லாதது வருத்தமாக உள்ளது.
தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றார்கள். அதற்காக திராவிடர் கழகம் சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு நடவடிக்கை ஏதும் இல்லாத பட்சத்தில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவிப்போம்.
தீபாவளிப்பண்டிகையை ஒரு பண்பாட்டு திருவிழாவாக கொண்டாட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அது இந்த ஆண்டு முதல் நடைபெறும். நீட் தேர்வு சட்ட விரோதமானது. அதற்கான போதிய ஆதாரங்களை திரட்டி பிரபல சட்ட வல்லுநர்களுடன் ஆலோசணை நடத்தி வழக்கு தொடர்வோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையானது மத்தியில் காவி, மாநிலத்தில் ஆவி, ஆனால் மக்கள் நலன் காலி.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்து நடப்பதால் அதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.
அப்போது அதிக வேகம், அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, லோடு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, லாரிகளில் அதிக உயரம் பாரம்ஏற்றி சென்றது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது,
ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டியது, பைக்கில் மூன்று பேர் சென்றது, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல வகையான சாலை விதிகளை மீறிய 323 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 40.ஆயிரம் அபராதம் வசூலிக்கபட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்தவர்கள் உள்பட வாகன விதிமுறைகளை மீறிய 522 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வாகன விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் அவர்களிடம் எடுத்து கூறினர். மேலும் தொடர்ச்சியாக வாகன விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் லட்சுமி பிரியா, வெளியிட, வருவாய் கோட்டாட்சியர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149. அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதின் அடிப்படையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,24,924 ஆண் வாக்காளர்களும், 1,25,160 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,50,089 வாக்காளர்கள் உள்ளனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,26,412 ஆண் வாக்காளர்களும், 1,28,557 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,54,970 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் 2,51,336 ஆண் வாக்காளர்களும், 2,53,717 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,05,059 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்த காலமான 1.1.2018 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 3.10.2017 முதல் 31.10.2017 வரை அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்களால் பெறப்படும்.
மேலும், 7.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய இருதினங்கள் கிராம சபா அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும். 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றை கண்டறிந்து தெரிவிக்கலாம்.
எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 3.10.2017 முதல் 31.10.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர்கள் கூறுகின்ற அரசாங்க கருத்துக்கள், அரசோட கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். அமைச்சரோ, என்னை போன்ற மாவட்ட செயலாளர்களோ சொல்லும் கருத்துக்கள் அவர்களது உள்மனதில் உள்ள சொந்தக்கருத்து. கட்சி கருத்தாக கருதக்கூடாது.
தினகரனையும், சசிகலாவையும் ஏற்று கொண்டால் ஆட்சியாளர்கள் நல்லவர்கள், ஆட்சி தொடர வேண்டும். ஏற்று கொள்ளவில்லை எனில் இது கெட்ட ஆட்சி. தினகரனையும், சசிகலாவையும் எதிர்த்தால் ஆட்சி கலைய வேண்டுமா? என தினகரனிடம் நானே கேட்கிறேன். தினகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த அ.தி.மு.க.,விலிருந்து விலகி வெகுநாட்கள் ஆகிவிட்டது.
ஜெயலலிதா தலைமையில் கட்சியை நடத்திய பொறுப்பாளர்கள் எல்லாம் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, தினகரன் ஜெயலலிதா அறிவித்த பொறுப்பாளர்களை நீக்கியதிலிருந்து தெரியவருகிறது.
எனவே தினகரன் தனிக்கட்சி தொடங்க ஆயத்த பணியை ஆரம்பித்து விட்டார். சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் யார் செயல்பட்டாலும் காவல் துறையும், அரசும் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யும்.
விருத்தாச்சலம் மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் அணியில் இருக்கிறார்களே தவிர, ஆளுநரை பார்த்து முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஏன் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உங்களது கணவரை வெட்டி விட்டனர் என்று எனக்கு போன் வந்தது. திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் எனது கணவரை சேர்த்தனர்.
அங்கு எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சையளிக்க வசதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இப்போது சேர்த்துள்ளோம்.
இங்கு டாக்டர்கள், எனது கணவரின் காலில் ரத்தம் அதிகமாக போய் உள்ளது. எனவே காலை எடுக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்திலேயே கேரள அரசு டாக்டர்கள், எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளித்து இருந்தால் இப்போது காலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. எனது கணவர் தமிழன் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து அலைக்கழித்துள்ளனர். எனவே அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (42). இவர் நேற்று காலை தத்தனூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது உடையார் பாளையம் சந்தையில் இருந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற மினி லாரி சாலையில் நடந்து சென்ற தங்கமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து உடையார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குபதிவு செய்து மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் கணவாய் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன்(27) என்பரை கைது செய்தார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 1-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம். எல்.ஏ.க்களுடன் இன்று மாணவி அனிதா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்தார்.
இதற்காக அவர் நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். நேற்று இரவு புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தனது சொகுசு பங்களாவிற்கு சென்றார். இரவு அங்கு ஓய்வெடுத்தார்.
இன்று காலை தினகரன் காரில் ஆரோவில்லில் இருந்து அரியலூருக்கு புறப்பட்டார். மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் சென்றனர்.
பின்னர் தினகரனும், 21 எம்.எல்.ஏ.க்களும் இன்று மதியம் காரில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம்.
நாங்கள் தேர்தல் ஆணையத்தோடு வெற்றி பெற்றாலும் அவர்கள் நீதிமன்றத்துக்கு முறையீட்டிற்கு போவார்கள். ஆகையால் இது முடிகிற கதை அல்ல. ஆனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம். அதைத்தொடர்ந்து எந்த எதிர்ப்பு வந்தாலும் அதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து மாணவி அனிதாவின் வீட்டிற்கு காரில் சென்று ஆறுதல் கூறினார்.
தினகரன் அனிதா வீட்டிற்கு செல்வதையொட்டி திருமாவளவன் அவசரமாக சென்றதாக தெரிகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே விழுப்பணங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் அருகே உள்ள உப்பிலியம்மன் கோவில் அருகில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் விழுப்பணங்குறிச்சி காலனித்தெரு, சுள்ளங்குடி காலனித்தெரு, ஒத்தத்தெரு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றி பழுதானதால் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதுகுறித்து மின்சார அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஏலாக் குறிச்சி-தஞ்சாவூர் சாலையில் மின்மாற்றியை பழுதுநீக்கி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே குறைவாக மின்சாரம் கிடைப்பதால் மின்சாத பொருட்களை இயக்குவதில் பெரும் சிரமம் உள்ளது. தற்போது கடந்த 3 நாட்களாக மின்சாரம் முழுவதும் தடைபட்டதால் மிகவும் அவதியடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஏலாக்குறிச்சி மின்சார வாரிய அலுவலக உதவி செயற் பொறியாளர் சேகர், வருவாய் அலுவலர் அய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் திருமானூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றி பழுது நீக்கப்படும் எனவும், அதுவரை மாற்று மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஏலாக் குறிச்சி-தஞ்சாவூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரவி, செருப்பு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது 42). இவர்களுக்கு கீர்த்தனா (26), சினேகா (15) என்ற 2 மகள்களும், கதிர்செல்வன் (13), கலைச்செல்வன் (6) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடையார்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். இருப்பினும் அவர் முற்றிலும் குணமாகவில்லை. நேற்றிரவு முதல் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை ரவி, சாந்தியை அழைத்து கொண்டு உடையார்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை. பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தார். அவரிடம் டாக்டர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து தான் வருவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ரவி, தனது மனைவியை மடியில் படுக்க வைத்தவாறு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து, டாக்டர்கள் வருகைக்காக காத்திருந்தார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு வந்த டாக்டர், சாந்தியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இது ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்த ரவியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், டாக்டர்கள் இல்லாததே சாந்தியின் உயிரிழப்புக்கு காரணம். டாக்டர்கள் இருந்திருந்தால் சாந்திக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கலாம். எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.






