என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டத்தில் ஜி.எஸ்.டி.வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க கோரி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வாரியங்காவல்:

    கைத்தறி துணிகள் மீதான ஜி.எஸ்.டி.வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள தள்ளுபடி மானிய தொகை முழுவதையும் உடன் வழங்கிட வேண்டும், கட்டிய ஜி.எஸ்.டி. வரியை திருப்பி வழங்கிட வேண்டும், நலவாரிய பணப்பயன்களை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனே வழங்கிட வேண்டும். ஜி.எஸ்.டி.வரியை கண்டித்து நவம்பர் 9, 10, 11-ந் தேதிகளில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்திபூங்கா சிலை அருகே வந்தடைந்தது. அங்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கைத்தறி நெசவு தொழிற்சங்க தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினார். சக்தி விநாயகர் கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ஜெயச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த துரைராஜ், மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணபிரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக கொடுக்கூர் ராமலிங்கம் வரவேற்றார்.

    முடிவில் தங்கராசு நன்றி கூறினார்.
    செந்துறை அருகே ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சுகுணா (வயது 26). அன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    சுகுணாவிற்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவரை செந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை சுகுணா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் பெண்ணை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூழாட்டுகுப்பத்தை சேர்ந்தவர் மரியபாக்கியம். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த தம்பதிக்கு நெல்சன் ஜோயல் (வயது 7) என்று மகனும், மெலிண்டா ஜாக்சி (2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மரிய பாக்கியத்தின் தாய் சபரி அம்மாளும் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மரியபாக்கியம் நேற்று இரவு பணிக்காக கும்பகோணம் சென்று விட்டார். வீட்டில் ஜான்சி ராணி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் தனியாக இருந்தார். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கினர்.

    நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜான்சி ராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜான்சி ராணி அவர்களை பிடிக்க முயன்றதோடு கூச்சல் போட்டார். மேலும் நகையை காப்பாற்ற அவர்களுடன் போராடினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கத்தியால் ஜான்சி ராணியின் தலையில் குத்தினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதற்குள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் கண் விழித்தனர். உடனே மர்ம நபர்கள் கத்தி முனையில் அவர்களை சத்தம் போட்டால் குத்தி விடுவதாக மிரட்டினர். இதனால் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அமர்ந்தனர்.

    பின்னர் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 ஜோடி கொலுசு, 1 பவுன் கம்மல், ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து வெளியே சென்றனர்.

    இதற்கிடையே மயக்கம் அடைந்த ஜான்சி ராணி கண் விழித்தார். பின்னர் திருடன், திருடன் என கூறி கொண்டு மர்ம நபர்களை விரட்டி சென்றார். அக்கம் பக்கத்தினரும் மர்ம நபர்களை விரட்டி சென்றனர். அதற்குள் 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் விரைந்து சென்று கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஜான்சி ராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மரிய பாக்கியம் இரவு பணிக்கு சென்று விட்டதை அறிந்து மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பத்தை நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் ஆய்வுக்கூடத்திற்கு நோயாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்“ மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களை தூய்மையாக வைத்து கொள்ளவும், டெங்கு கொசு பரவும் விதம் குறித்து எடுத்துரைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைமை நிலைய துணை செயலாளர் மணி உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், இருக்கை மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை ஏற்படுத்தி அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.

    மேலும் கூடுதலாக ஆய்வக நுட்புனர்களை பணியமர்த்த வேண்டும். தற்போது மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்த ஆய்வகத்தில் போதிய ஆள் இல்லாததால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் குவிந்துவிடுகின்றனர்.

    இதனால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. மேலும் மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு நோயாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இதில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    மீன்சுருட்டி அருகே நடந்து சென்ற பெண் வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள வளவனேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தேவகி(60). இவர் தினசரி கும்பகோணம் சென்று பூ வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பதன்று மீன்சுருட்டி வீரசோழபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவகி பலியானார்.

    இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மீன்சுருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குலோத்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயியான இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், நேற்று குடிபோதையில் விஷம் குடித்துள்ளார்.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.

    இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
    அரியலூர்:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால் நாளை 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலா ஜாநகரம், கல்லங்குறிச்சி, தாமரைக்குளம், பொய்யா தநல்லூர், ஓட்டக்கோயில், ஓ.கூத்தூர், அமினாபாத், மகாலிங்கபுரம், கோவிந் தபுரம், மங்கலம், காட்டுப் பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய் குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கச முத்திரம், மண்ணுழி ஆகிய ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அரியலூர் உதவி செயற் பொறியாளர் சாமிதுரை தெரிவித்துள்ளார்.       
    பெண்ணாடம் அருகே மகளுக்கு தீபாவளி சீர்வரிசை கொடுத்துவிட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.
    விருத்தாசலம்:

    மகளுக்கு தீபாவளி சீர்வரிசை பொருட்கள் கொடுத்துவிட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் கணவன் மனைவி உயிர் இழந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம் முல்லையூரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 44), விவசாயி. இவருடைய மனைவி சுமதி (39). இவர்களது மகள் விஜி(23). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, வீரமுத்து தனது மகளுக்கு பலகாரங்கள், பட்டாசு, புத்தாடைகள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்க முடிவு செய்திருந்தார்.

    அதன்படி, சம்பவத்தன்று வீரமுத்து தனது மனைவி சுமதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மகள் வீட்டிற்கு வந்தார். அங்கு மகள், மருமகனுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சீர்வரிசையை கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் முல்லையூர் நோக்கி அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    பெண்ணாடம் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார் வீரமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகளுக்கு தீபாவளி சீர்வரிசை பொருட்கள் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய போது கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் டெங்கு குறித்த சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ‘டெங்கு’ குறித்த சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர். ‘டெங்கு’ பரவுவதை தடுக்க, அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இடையக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் ராவணன் உறுதிமொழியை வாசிக்க, பொதுமக்கள் தொடர்ந்து வாசித்தனர்.

    என் வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ, டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப் போன்றவற்றை போட மாட்டேன்.வீணான பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அகற்றி விடுவேன். அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.இவ்வாறு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இடையக்குறிச்சி கிராமத்தில் மருத்துவ அலுவலர் ராவணன் தலைமையிலான குழு வீடு வீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை விதிகளை மீறிய 294 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தற்போது வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு போலீசார் வாகன தணக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுவது, போதையில் வானம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது, லோடு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, லாரிகளில் அதிக உயரம் ஏற்றி பாரம் சென்றது.

    லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது,ஹெல்மெட் அணியால் இருசக்கரவாகனம் ஓட்டியது, பைக்கில் மூன்றுபேர் சென்றது, இன்சூரன்ஸ் இல்லாமல் வானம் ஓட்டியது உள்ளிட்ட பல வகையான சாலை விதிகளை மீறியவர்கள் 294 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முறையை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சுகாதாரப்பணிகளை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி மற்றும் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கழிவுநீர் வாய்க்காலில் தூய்மை பணி மேற்கொண்டது, கொசு ஒழிப்பு பணி ஆகியவை  குறித்து கேட்டறிந்தனர். மேலும், வீடுகளில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், குடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவைகளை பார்வையிட்டனர். அப்போது டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏ.டி.எஸ். கொசுக்களை ஒழிக்கும் முறைகளை பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என சுகாதாரப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவை பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்கள். மருத்துவர்களிடம் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்து பொருட்கள், நிலவேம்பு கசாயம் ஆகியவை போதுமான அளவு இருப்பு உள்ளதா என அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திரரெட்டி கேட்டறிந்தார்.

    பின்னர், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், டெங்கு குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் தினந் தோறும் மேற்கொள்ளும் தூய்மைப்பணிகளை துரிதமாக செயல்படுத்திடவும் அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சங்கர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி, வட்டாட்சியர் வேல்முருகன், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான “பொது மக்கள் குறைதீர் கூட்டம்” அரியலூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் இலந்தைக்கூடம் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் உல்லியக்குடி கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் தளவாய் (தெற்கு) கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

    அரியலூர் வட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), உடையார்பாளையம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், செந்துறை வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், ஆண்டிமடம் வட்டத்திற்கு பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
    ×