search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student anitha"

    நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். #veeramani #neet

    செந்துறை:

    நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாததால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகளான மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது நினைவாக குழுமூரில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழா, அனிதா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய் யத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா, திரைப்பட இயக்குனர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, சாதி ஒழிப்பு போராளி கவுசல்யா, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி,

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரங்கசாமி உள்பட ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்ட அனிதாவை இழந்துள்ளோமே தவிர அவரது உணர்ச்சிகளை நாம் இன்னும் இழந்து விட வில்லை. நீட் தேர்வினால் அனிதா மட்டுமல்ல. மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயர் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியும் உச்ச நீதிமன்றம் அவற்றை புறக்கணிக்கிறது . நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும். நீட்தேர்வுக்கு எதிராக அறப்போரை மாணவர்களுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஆட்சியாளர்கள் நீட் தேர்வில் விலக்கு பெறுவோமென நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். ஆனால் அனிதாவை இழந்து விட்டோம் என்றார்.

    அனிதா சிலையை திறந்து வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    அனிதா வெற்றி பெற்றிருந்தால் மிகச்சிறந்த தொண்டுள்ளம் கொண்டவராக இருந்திருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? ஏதேனும் ஒரு படிப்பு என்று அவர் நினைத்திருந்தால் மருத்துவம் கிடைக்காமால் வேறு பாடத்துக்கு மாறியிருப்பார்.

    ஆனால் தொண்டாற்ற வேண்டும் என்றகனவே அவரை மருத்துவ படிப்பை படிக்க தூண்டியிருக்கிறது. அனிதாவை போன்று மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீட் தேர்வு முறையை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றார். 

    ×