என் மலர்
செய்திகள்

அனிதா தற்கொலை: கிராமத்து மாணவர்கள் டாக்டராக கூடாது என்பதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சி- கி.வீரமணி
செந்துறை:
நீட் தேர்வால் தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு தமிழர் தேசிய பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நீட் தேர்வை எதிர்த்து அறைகூவல் விடுத்து சென்றுள்ளார் அனிதா. அவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடத்திற்கு நீட் தேர்வை விலக்கி வைத்திருந்தால் அனிதாவின் மரம் நிகழ்ந்திருக்காது. அவரது இறுதி ஊர்வலத்தில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மக்கள் அதிகாரம், புரட்சி கர மாணவர் இயக்கம், மே 17 இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பிலும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, நீட் தேர்வு கிராமத்து மாணவர்கள் மருத்துவர்களாக வரக் கூடாது என்பதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை. எத்தகைய மனவேதனைக்கு ஆளாகியிருந்தால் அனிதா தற்கொலை செய்திருப்பார். நீட்தேர்வால் தமிழகத்திற்கு வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு பதவியை காப்பாற்றுவதற்காக மாநில கல்வி கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளது. அதில் அனிதா பலியாகிவிட்டார். நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும், இல்லை யென்றால் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு மாவளவன் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.






