என் மலர்

  செய்திகள்

  ஓ.பன்னீர்செல்வம்
  X
  ஓ.பன்னீர்செல்வம்

  தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க. பின்வாங்குவதா?- ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
  சென்னை:

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

  மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனை என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.

  அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

  முதல்-அமைச்சர்
  மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் (ஜி.எஸ்.டி.) கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  இதன் தொடர்ச்சியாக 4-4-2018 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலுக்கு முந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு.

  இந்த நிலைப்பாடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

  இந்தக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் நிதி அமைச்சர் எழுதிய கடிதத்தில், மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

  அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  இதன் விளைவாக, முதல்-அமைச்சர், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவை வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

  எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  இதுபோன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என்ற தி.மு.க.வின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


  Next Story
  ×