search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செய்யாறு பஸ்சில் வாலிபர் கொலையில் 5 பேர் கைது

    செய்யாறு பஸ்சில் வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டு நெசவுத் தொழிலாளி முருகன் காளத்தி. இவர்களது 3-வது மகன் சதீஷ்குமார் (வயது 28). கெமிக்கல் என்ஜீனியரிங் படித்து இருந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் செய்யாறில் குடியேறினர்.

    கடந்த 28-ந்தேதி சதீஷ் குமார் செய்யாறு பஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் சதீஷ்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டினர். பஸ்சில் ஏறி தப்ப முயன்ற சதீஷ்குமாரை கும்பல் பஸ்சுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது.இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.

    இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செய்யாறு ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சுந்தரம், தங்க ராமன், குணசேகரன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் காஞ்சிபுரம் ரவுடி கும்பலுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் செய்யாறு- ஆற்காடு சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தேவன் (24), பத்மநாபன் (24), சிகாமணி (25), ரமேஷ் (24), நந்தகோபால் (24) என்பது தெரியவந்தது.

    போலீசாரின் தீவிர விசாரணையில் இவர்கள் சதீஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புகொண்டனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான தேவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் கொலையுண்ட சதீஷ்குமாரும் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தோம். ஸ்ரீதர் இறந்த பிறகு நாங்கள் இரு கோஷ்டியாக பிரிந்ததால் போட்டி நிலவியது.

    கடந்த ஏப்ரல் மாதம் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் என்னை கத்தியால் வெட்டினர். இதில் நான் உயிர் தப்பினேன் சதீஷ்குமார் உயிருடன் இருந்தால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    கடந்த 28-ந்தேதி செய்யாறுக்கு வந்தோம் சதீஷ்குமார் டீ கடையில் இருப்பதை பார்த்தவுடன் அரிவாளுடன் இறங்கி ஓடினோம் எங்களை பார்த்ததும் அவர் தப்பி ஓடி பஸ்சில் ஏறினார்.

    நாங்கள் விரட்டி சென்று அவரை பஸ்சுக்குள் வைத்து வெட்டி சாய்த்துவிட்டு காரில் தப்பி சென்றோம் என்றார்.

    கைது செய்யப்பட்ட தேவன் உள்பட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ரவுடி கும்பலை சேர்ந்த மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×