search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    அணையை கட்டுவோம் என்று கூறிய ராகுல்காந்திக்கு, காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? முதலமைச்சர் ஆவேசம்

    மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிய ராகுல்காந்திக்கு, காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று குடிநீர் பிரச்சினை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார்.

    அப்போது அவர் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாகவும், ஏரி, குளங்கள், கால்வாய்கள் சரிவர தூர் வாரப்படவில்லை. ஆனால் அரசு இதனை முறையாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    கடல் நீரை குடிநீராக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டில் தமிழ்நாட்டில் தண்ணீரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.

    அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் உறுப்பினர் இங்கு குற்றச்சாட்டுகளையே கூறிக்கொண்டுள்ளார். அவருக்கு நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரின் பதில் என்ன? என்று நான் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கு பதில் இல்லை.

    இப்போது உங்களிடம் கேட்கிறேன். உங்கள் தலைவர் பேசியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். இப்போதே நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் சித்தராமையா முதல்-அமைச்சராக இருந்தபோது நமக்கு தர வேண்டிய 24 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு தாருங்கள் என்று கேட்டேன்.

    இது தொடர்பாக கடிதமும் எழுதினேன். நான் நேரில் வந்து சந்திப்பதாக கூறினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    கர்நாடகாவில் உங்கள் கட்சியை சேர்ந்த கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. எனவே தயவு செய்து எவ்வளவோ பேசுகிற நீங்கள், தண்ணீரை திறந்துவிட ஏற்பாடு செய்தால், காவிரி தண்ணீர் மேட்டூருக்கு வந்து, அதன் மூலம் வீராணத்துக்கு வந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இதுமட்டுமல்ல நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் பிரச்சினையில் இருந்து கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பையும் தந்துள்ளது. 50 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் வாயிலாக தீர்ப்பையும் பெற்றுள்ளோம்.

    அதன் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனை உங்கள் கட்சி தலைவர் (ராகுல்காந்தி) கலைப்பதாக கூறுகிறார். மேகதாது அணையும் கட்டப்படும் என்கிறார். இதற்கு நீங்கள் குரல் கொடுத்தீர்களா?

    இப்போது இந்த அரசை பற்றி இவ்வளவு விமர்சனம் செய்கிறீர்களே? நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டு நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஆனாலும் நமக்கு மாதம் தோறும் கிடைக்க வேண்டி தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை திறந்துவிடவில்லை.

    இதற்கும் ஏதாவது குரல் கொடுத்தீர்களா? ஆனால், இந்த அரசை குறை கூறுகிறீர்கள்.

    அரசை பொறுத்தவரைக்கும் இயற்கை பொய்த்துவிட்டது. மனசாட்சி படி பேசுங்கள். தண்ணீரை வைத்துக்கொண்டா நாங்கள் கொடுக்க மறுக்கிறோம். தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது. எந்த ஏரியிலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லை.

    எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) கூட, இன்று அணைகளில் குறைந்த அளவுதான் தண்ணீர் உள்ளது. சில அணைகள் வறண்டு போய்விட்டன என்று சொன்னார். அப்படி இருந்தும்கூட அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கி வருகிறது.

    அம்மா இருந்தபோது, 7,415 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கினார். இப்போது 7,508 மில்லியன் லிட்டர் குடிநீரை இன்றைக்கு வழங்கிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கூட 4,945 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்பட்டது.

    இப்போது நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. மக்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த தண்ணீர் கிடைக்காத காரணத்தாலேயே குடிநீரை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அரசை பொறுத்தவரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீரை இப்போதும் வழங்கிக்கொண்டுதான் உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×