search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யார் தவறு செய்தாலும் நடவடிக்கை நிச்சயம்- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    யார் தவறு செய்தாலும் நடவடிக்கை நிச்சயம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    அ.தி.மு.க.வில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #ADMK #SellurRaju
    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 76-வது வார்டான பழங்காநத்தத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், ஆழ்துளை கிணறுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிரிகள் வலுவாக இருந்தால் தான் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வசதியாக இருக்கும். அந்த வகையில் கருணாநிதி வலுவான தலைவர் என்பதால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்கள்.

    ஆனால் இன்றைக்கு உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலுவான தலைவராக எங்களுக்கு தெரியவில்லை. அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


    ஆனால் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும், எம்.பி.யாகவும் உள்ள கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லை. வாரிசு அரசியலை தி.மு.க தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பிரியாணி கடை, அழகு நிலையம் போன்ற இடங்களில் தி.மு.க.வினர் ரவுடித்தனத்தை காட்டி வருகின்றனர். இது போன்ற அராஜகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். மதுரை ஆவின் நிறுவனத்தில் வெளியான புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க.வினர் புடம் போட்ட தங்கம் போன்றவர்கள். ஆனால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் இருக்காது.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்தார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அனுமதியோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டதால் நானும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.

    அதே நாளில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் தொடர்பாக வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதில் எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை. மற்ற வி‌ஷயங்களை வெளியே பேச முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அ.தி.மு.க. அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #SellurRaju
    Next Story
    ×