search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில்தான் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    X

    தமிழ்நாட்டில்தான் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    தேசிய நோய் கட்டுப்பாடு திட்டத்தினர் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் தமிழ்நாட்டில்தான் டெங்கு உயிரிழப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.

    ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் கடுமையான மூட்டு வலி, தசைவலி, தலைவலி ஏற்படும்.

    பெண்கள் மற்றும் இளம் வயதினரைத்தான் டெங்கு அதிக அளவில் பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 14 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதையடுத்து டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் கழிவுப் பொருட்கள் தேக்கத்திலும், தண்ணீர் தேக்கத்திலும் மிக எளிதாக உற்பத்தியாகி விடும். ஒரு ஏ.டி.எஸ். கொசு ஒரே தடவையில் 1500 முட்டைகள் வரை இடும். இதனால் டெங்கு பரப்பும் கொசுக்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் பெருகி விட்டது.

    இதையடுத்து டெங்கு கொசுக்கள் அதிகரிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொசு பரப்பும் வகையில் பொருட்களை சுகாதாரமற்ற முறையில் குவித்து வைத்திருந்த கடைகள், அலுவலகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேருக்கு ரூ.20 கோடிக்கு மேல் அபராதம் போடப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே டெங்கு ஒழிப்பு சிறப்புப் பணிக்காக சுமார் 1500 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.


    தமிழக அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது மதுரை, திருச்சி ஆகிய இரு மாவட்டங்களில் மட்டுமே டெங்கு கொசு வீரியம் குறையாமல் உள்ளது.

    இன்னும் சில தினங்களில் அந்த மாவட்டங்களிலும் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதன்பிறகு மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தேசிய நோய் கட்டுப்பாடு திட்டத்தினர் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் தமிழ்நாட்டில்தான் டெங்கு உயிரிழப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 40 பேர் டெங்குக்கு உயிரிழந்து விட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை விட கேரளாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அம்மாநிலத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு உயிரிழப்பு 35 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து மத்திய அரசு சமீபத்தில் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஆய்வு நடத்தி தமிழக சுகாதாரத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

    மேலும் மத்திய அரசிடம் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×