என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
    • நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை.

    எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.

    நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.

    எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது"

    -அனைத்துலக பெண்கள் தினத்தில் 1992 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் விடுத்த அறிக்கையிலிருந்து…

    பெண்கள் விடுதலை குறித்து மேதகு பிரபாகரன் பார்வை தனித்துவமானது. அதனால் தான் பெண்கள் படையணியை 1985 ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் மேதகு பிரபாகரன். ஆனால் சீமான் நேற்று (28.2.2025)மட்டும் கொடுத்த பேட்டிகளை பார்த்தால் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது வெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.

    தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு Normalize பண்ணுகிறார். அருவருப்பான உடல் மொழியோடும் அநாகரீகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள் மற்றும் #meetoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை.

    மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.

    நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    அதிலும் விசாரணைக்கு மேதகு பிரபாகரன் படத்தோடு வந்திருப்பது எத்தனை கொடுமையான அயோக்கியத்தனம்?

    தமிழ்த்தேசியத்தின் அரசியல் இது தானா?

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

    வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதி.

    இன்று தமிழ்த்தேசியத்தின் பெயரில் அதுவும் மேதகு பிரபாகரன் பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம். அமைதி காப்பது அதனினும் உச்சம் என்று கூறியுள்ளார். 



    • கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
    • 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.

    கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சு கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளினிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த நர்சு கலைமணி, சேலத்தை சேர்ந்த நர்சு அம்பிகா, ஆத்தூர் பகுதியை சேர்ந்த நர்சுகள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மா ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள ஒரு கிளினிக் ஆகிய 3 இடங்களிலும் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அந்த மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை எடுத்து சென்று அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். அதில் இதுவரை எத்தனை பெண்களுக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்தபோது 3 ஆஸ்பத்திரிகளிலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் டவுன் மேட்டுத்தெரு மற்றும் பொன்னம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளை மூடவும், பெரிய புதூரில் உள்ள கிளினிக் அனுமதியில்லாமல் செயல்பட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாத ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்து சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

    தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிந்தனர்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம்செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப்பயன்படுத்தி 37,56,385 பயணிகள் (Online QR 1,52,615; Paper QR 18,34,474; Static QR 2,68,084; Whatsapp - 6,14,516; Paytm 4,18,839; PhonePe – 3,40,151; ONDC – 1,27,706),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20%கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்புநல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
    • 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் 18-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில்,

    * வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்.

    * நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.

    * பயிர்க்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

    * வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி ஒதுக்கப்படும்.

    * ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

    * 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

    * பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க சிறப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    • மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.

    ராமேசுவரம்:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

    இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதியளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக தொடரும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, தாசில்தார் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரை சந்திக்க வருமாறு அழைத்தனர். ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சிமடம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.

    இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் குடும்பத்தார் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    அப்போது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார்.



    அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மு.பெ.சாமிநாதன், கணேசன், ஆவடி நாசர், வாரிய தலைவர் ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழச்சி தங்கபாண்டின், புழல் நாராயணன், சேப்பாக்கம் மதன்மோகன், சென்னை மேயர் பிரியா, படப்பை மனோகரன், கலாநிதி வீராசாமி, கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு. ரஞ்சன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் வண்ண வண்ண பூக்கள் அலங்காரத்துடன் மக்கள் முதலமைச்சரின் மனித நேய நாள் என்று வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    இதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.



    பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் அங்கிருந்து கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி உடன் இருந்தார்.

    அதன் பிறகு 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர்.

    அதன் பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரமாண்ட 'கேக்' கொண்டு வரப்பட்டது. அப்போது தலைமை கழக முன்னணி நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டினார்.

    அதை பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

    அதன் பிறகு கலைஞர் அரங்கம் சென்றார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் விண்ணதிர பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்தார். அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    * தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.

    * தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்.

    * தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இதுதான் ஒரே இலக்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாலைகள், புத்தகங்கள், வீரவாள்கள், பழங்கள், பூக்கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    • கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.
    • கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் பசுமையாக மாறியது.

    ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள், வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.


    தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது. ஆனாலும் ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசிவருவதால் அதை அனுபவிக்க விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து உள்ளனர். மேலும் ஏராளமானபேர் நேற்று மாலையே ஏற்காட்டிற்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல்ம ழை பெய்தது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சாரல்மழையில் நனைந்த ப்படி பனிமூட்டத்தை ரசித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது. சமவெளி பகுதிகளில் அனல்காற்று வீசிவரும் நிலையில் ஏற்காட்டில் நிலவிவரும் இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகிறார்கள். பனிமூட்டம் காரணமாக ஏற்காட்டுற்கு வந்து சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வந்து சென்றது.

    • பிரசாந்த் கிஷோர் இது குறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது.
    • விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    வேலூர்:

    த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வும் தனக்கு எதிரிகள் என்று விஜய் அறிவித்துள்ளார்.

    மேலும் தனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

    அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக்கழக 2-ம் ஆண்டு விழாவில் விஜயை சந்தித்தார். அவர் விஜய்க்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் விஜய் தனது அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

    விஜயை சந்தித்தபோது. நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தி.மு.க. வெற்றியை தடுக்க முடியும் என்று பிரசாந்த் கிஷோர் விஜயிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

    பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது. தற்போது அ.தி.மு.க.வுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகள் உள்ளன.

    த.வெ.க. அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளையும் சேர்த்தால் மொத்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக மாறும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், நடிகர் பவன் கல்யாணும் தங்கள் கூட்டணியால் வெற்றி பெற்றனர்.

    அங்கு சந்திரபாபு நாயுடு முதல் முதல்-மந்திரியாகவும், நடிகர் பவன் கல்யாண் துணை முதல் முதல்-மந்திரியாகவும் உள்ளனர்.

    அதே பாணியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், விஜய் துணை முதலமைச்சராகவும் உடன்பாடு ஏற்படுத்த பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்தக் கொள்கையை ஏற்க விஜய் இன்னும் தயங்குவதாகத் தெரிகிறது.

    இருப்பினும் கூட்டணி இப்போதே உருவாக்கப்பட்டு விட்டதைப் போல த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    இதுகுறித்து சில த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

    சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல அரசியல் வியூக வல்லுநர்களுடன் விவாதித்து வருகின்றனர்.

    கூட்டணியின் பொறுப்பு பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    அவர்களின் ஆலோசனைகளை நிச்சயமாக ஏற்றுக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.

    2026-ம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டாலும் அடுத்த தேர்தலில் தனது சொந்த ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவைப் பெறுவேன் என்று விஜய் தெரிவித்தார்.

    அதன் ஒரு பகுதியாக தேர்தல் நெருங்கும்போது பொது எதிரியை தோற்கடிக்க சில சமரசங்களை செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது.
    • நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ராமகிருஷ்ணபதி ஊராட்சியில் ஒரு புதிய சிவன் கோவில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுமானத்தின் போது, அங்கு இருந்த பழைய கற்கால சிவலிங்கம் அருகிலுள்ள ஒரு கூரை கொட்டாயில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரு விந்தையான நிகழ்வு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தினந்தோறும் மதியம் 12 மணிக்கு, ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. இந்த நிகழ்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. சேவலின் இந்த தெய்வீக தரிசனம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், இன்பத்தையும், ஆன்மீக உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்வு, கோவில் கட்டுமானம் முடிந்து கருவறை உருவாகும் வரை தொடரும் என்று மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கருவறை வெளியில் இருக்கும் இந்த கற்கால சிவலிங்கத்தை நோக்கி ஒரு பறவை இனமான சேவல் தினசரி வந்து தரிசனம் செய்வது, அதன் உண்மையான ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

    இந்த விந்தையான நிகழ்வு ராமகிருஷ்ணபதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதை ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதி, கோவில் கட்டுமானம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இந்த நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பணிகளை புறக்கணித்து அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தொடங்கினர். இரவு தொடர்ந்த போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக பிரிவில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகள் ஆன ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக கோடைகாலத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ×