என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
- செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.
ஈரோடு:
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.
மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.
பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
- விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு வேளாண்மைக்கு என ஆண்டுதோறும் தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கை வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் இடம் பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பான விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் 5-வது வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
- ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
- அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்றார்.
மேலும் அவர், "ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்" என்றார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகம் போடுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து ரகுபதி கூறுகையில், " அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், கூட்டத்தில் பங்கேற்று நாடகத்தை நடத்தியுள்ளது அதிமுக.
பாஜகவுடன் நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெறப் போவதில்லை" என்றார்.
- தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில்பாலாஜி உள்ள நிலையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும்.
- பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு கழக நிர்வாக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், பொது மேலாளர்கள் சைனி வில்சன், முத்துமாறன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இந்திய உணவுக் கழகத்தில் 30 சதவீத பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இது அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம் தான்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும். இந்த அரசாங்கம் பெண்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுபோன்று இருக்கும்போது பெண்கள் படித்து முடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றால் அது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று அப்போதே கேட்டவர் தந்தை பெரியார். அவரைப் போன்று பெண்களின் உரிமைக்காக விடுதலைக்காக இதுவரை எந்த தலைவரும் குரல் கொடுத்தது இல்லை.
டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் முதல்வராக தகுதியற்றவர் என்று பேசினார்கள்.
இத்தனை மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கேள்விகளும் எழவில்லை ஆனால் ஒரு பெண் தலைமையிடத்திற்கு வரும் பொழுது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. நம்மால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று சிந்திக்காமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல நினைத்தாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
- இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
- தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 முதல் 2014 வரை ரூபாய் 675.36 கோடி சமஸ்கிருதத்திற்கும், ரூபாய் 75.05 கோடி தமிழுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஆனால், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிற்கு ரூபாய் 643.84 கோடி மூன்றாண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு பா.ஜ.க. அரசு வழங்கியிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். அண்ணாமலை கூற்றின்படி, சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்த அடிப்படையில், எதற்காக வழங்கப்பட்டது என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.
அதே காலகட்டத்தில் அந்த மூன்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2017-18-ல் ரூபாய் 10.59 கோடி, 2018-19-ல் ரூ. 4.65 கோடி, 2019-20-ரூபாய் 7.7 கோடி என மொத்தம் ரூ. 22.24 கோடி சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. இந்தி மொழிக்கு நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பா.ஜ.க.வின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அது அமையப்போகிறது. பா.ஜ.க.வினர் பெறுகிற கையெழுத்தின் மூலமே அவர்களது எதிர்காலம் சூனியமாகிற சூழல் இன்றைக்கு ஏற்படப் போகிறது.
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
- சர்வதேச அளவில் பொருளாதரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையான நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.
காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.
* தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவாகி உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
* தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது.
- சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
மதுரை:
மதுரையை சேர்ந்த அமாவாசை, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை சாலையோரம் நட்டு வைக்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்றவும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம்.
தமிழக அரசு தனியார் நிலங்களில் கொடிக்கம் பங்களை வைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சாலைகளில் கொடி மரங்கள் வைக்க கட்சிக்கொடி ஏற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனிநீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும் என்றனர்.
பின்னர் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்சி கொடி மரங்கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க கூடாது என வாதாடினார்.
விசாரணை முடிவில், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்று கட்சி கொடி கம்பங்கள் நிறுவப்படுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம். மேலும் சட்ட விதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரி தான்.
திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார், எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை. இதனை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
- மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.
- மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கரும்பு 9.5 விழுக்காடு பிழித்திறன் உள்ளவைக்கு கொள்முதல் விலை ரூ.3,151 போதாது. டன்னுக்கு கூடுதலாக ரூ.1000 சேர்த்து வழங்க வேண்டும். உற்பத்தி செலவே டன்னுக்கு ரூ.3200 ஆகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2021-ம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.4000 வழங்கி இருந்தால் தற்போது ரூ.5 ஆயிரம் ஆக உயர்ந்திருக்கும். முந்தைய ஆட்சியில் வழங்கிய ஊக்க தொகையை வழங்கி பின் அதுவும் நிறுத்தப்பட்டது. ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.
1200 வேளாண் மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மின் இணைப்புகள் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பொறுத்தப்பட உள்ளது. இதனால் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதை கண்காணித்து, வரம்பு நிர்ணயித்து அதற்கு மேல் பயன்படுத்தும் மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை. 60 விவசாயிகளின் உயிர் தியாகத்திற்கு பின்பே இலவச மின்சாரம் கிடைத்தது.
மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.
அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு இதற்கு நிரந்தர தடை பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் உட்பட இந்த ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கிய பின்பு 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசு தடை பெற வேண்டும்.
கோடை வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் பகலில் 30 நிமிடம் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது 3000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 4500 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.
மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். மதுராந்தகம் ஏரியை தூர்வாரி பலப்படுத்துவதன் மூலம் நீர் கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே ஏரி சீரமைக்கும் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் புதா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
- திட்டம் நடைமுறைக்கு வந்தால் ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10-வது சுற்று ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
- முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் உத்திரகுமார் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து உத்திரகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
உத்திரகுமார் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு, வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வந்துள்ளார்.
இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி வழக்குகள், பொது ஏலத்தில் கலந்து கொண்டு தகராறு செய்த வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறை சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு உத்திரகுமார் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் அவரை மறித்து வாளால் சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு தப்பினர். இதில் உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாள் வெட்டில் அவரது தலை முற்றிலும் சிதைந்து காணப்பட்டது.
உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடரந்து உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரகுமாரின் அக்கா மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? அல்லது பழிக்கு பலியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.






