என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.
    • எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் சட்டம் & விதிகள் 2024! நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல், வலுப்படுத்துதல் சமூக அமைப்புகள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    * 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை.

    * அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதே வாய்ப்பாக உள்ளது.

    * அதிகாரிகள் நல்ல பதிலை கூறினாலும் ஒன்றும் நடப்பதில்லை.

    * விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டம் பேசுகின்றனர்.

    * அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.

    * எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

    * அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும் நடைமுறைக்கு வந்தாலே இந்தியா இந்நேரம் ஒரு சமத்துவம் உள்ள தேசமாக எப்போதோ பரிணாமம் அடைந்திருக்கும். ஆனால் அதுவே இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றார். 

    • மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்
    • தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க.வைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.

    மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறர்கள்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

    கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்பட கூறியிருக்கிறார்கள்.

    தனிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.

    எனவே வருகிற 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல.
    • பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது.

    எழும்பூர்:

    சென்னை எழும்பூரில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போதையை ஒழித்துவிடுவேன் என அன்புமணி பேசியது குறித்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    பா.ம.க.வை கட்டுப்படுத்துங்கள், அப்பாவும், மகனும் மேடையிலேயே சண்டை போட்டுக்கொள்கின்றனர். சட்டவிரோத செயல்களை செய்பவர்களை ஆதரிக்கும் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை.

    தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. இதுகொள்கை சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி மேன்மேலும் உறுதியாக இருப்பதை தான் கடந்த 28-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது என்றார்.

    • தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது.
    • பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது.

    திருத்தணி:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரெயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது,

    'தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களால் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபவடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். இந்த மிருகங்களை வெட்டிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
    • திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர்.

    இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது.

    பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    • எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
    • இச்சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய விழாவை முன்னிட்டு பெரிய அளவில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சிலர் இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த ஏணி எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது உரசிய நிலையில், ஏணியில் மின்சாரம் பாய்ந்தது.

    இந்தச் சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1.3.2025) மாலை நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி, இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் (52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (45) த/பெ. பெர்னின், மனு (42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (35) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு.
    • 15 மண்டலங்களில் மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.

    தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கெனவே இருந்த 15 மண்டலங்களில் மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்படி, 14 மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி -சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால், தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதி போன்ற காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

    பாலியல் குற்றவாளி சீமான் பெண்களை அநாகரீகமாக தரக்குறைவாக பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்வதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து ஊடகத்தில் பெண்களை வாயில் சொல்ல முடியாத சொற்களால் அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னை என்ன செய்ய முடியும் என்று ஆணவத்துடன் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர் மீது தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.
    • தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர் வெடித்ததில் கேரளாவைச் சே்ந்த சிபு என்பவர் உயிரிழந்துள்ளார்.

    சிறுமலை பழையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

    ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர்

    மு.க.ஸ்டாலின்-ஓ , தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

    நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் .

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
    • புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம்.

    தமிழகத்தில் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கும், மார்ச் 5ம் தேதி முதல் 11ம் தேதிக்கும், மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இதையொட்டி, 10ம், 11ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

    • போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
    • காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.

    அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவருக்கும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், இந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×