search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanimozhi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்.
    • எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களித்த பிறகு நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-

    இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற அந்த தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த உணர்வோடு இந்த புரிதலோடு நாம் வாக்களிக்க வேண்டும்.

    கேள்வி:- முதலமைச்சர் சொன்னது போல் 40-க்கு 40 வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது? பிரகாசமாக இருக்கிறதா?

    பதில்:- நிச்சயமாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுவையிலும் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

    கேள்வி:- மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எப்படி உள்ளது?

    பதில்:- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை பிறகு சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.

    திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
    • சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.

    இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.


    திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.

    2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.

    முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார்.
    • இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.

    தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

    இன்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யை ஆதரித்து திருவான்மியூரில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் (தென்சென்னை) போட்டியிடுகிறார். அந்த கட்சியில் (பா.ஜனதா) வேட்பாளர்கள் இல்லை. ஆகேவே இரண்டு மாநில கவர்னர்களை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தல் களத்தில் பா.ஜனதா களம் இறக்கிவிட்டுள்ளது.

    கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார். இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. தேர்தல் நெருங்கிய நிலையில், அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள்" என்றார்.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:-

    தயது செய்து உங்களுடைய எம்.பி. பதவியின்போது செய்த சாதனைகள் சொல்லுங்கள் என கனிமொழியிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஆளுநராக நீடிப்பதா? அல்லது வேட்பாளராக போட்டியிடுவதா? என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள்.

    அவர்களுக்கு (திமுக) தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிக்காரர்கள் இல்லையா?. அவர்களுடைய சொந்த உறவினர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எங்களுடைய கட்சியில் சாதாரண தொண்டனும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும்.

    எங்களுடைய கட்சியில் வேட்பாளர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 15 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அந்த 15 பேரில் நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். திமுகவில் கனிமொழி மட்டுமே விருப்பமனு செய்திருந்தார்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் இன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.

    தேவையில்லாத சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மையினருக்கு பல்வேறு கஷ்டங்களை கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவே இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.

    பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும். இன்னும் பல்வேறு சலுகைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
    • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
    • தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.

    இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.

    இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    • 7-வது தெருவில் உள்ள சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லயன்ஸ் டவுன் பகுதிக்கு சென்றார். அப்போது 7-வது தெருவில் உள்ள சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

    அங்கு மீனவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரது வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்தவாறு அவர்களிடம் வாக்கு கேட்டார்.

    அப்போது முதலமைச்சர் கூறும்போது, கனி மொழி எம்.பி., உங்கள் வீட்டு பிள்ளை அவரை மறந்து விடாதீர்கள். பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். த.மா.கா. சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

    ×