என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும்- கனிமொழி எம்.பி.
    X

    தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும்- கனிமொழி எம்.பி.

    • தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும்.
    • மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    கோவை:

    மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.

    மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.

    அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×