என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

    இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார்.

    நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.

    நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.

    இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

    தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கு.
    • தேனி மாவட்டம் கம்பம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பொன்வண்ணனை சுட்ட போலீசார்.

    மதுரை உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மீது போலீசார் என்கவுண்ட்டர் நடத்தினர்.

    காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாராரி பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    இதில், படுகாயமடைந்த பொன்வண்ணனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பொன்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,  பொன்வண்ணன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    • புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
    • தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 8 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 9 கோடியே 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 46 காவலர் குடியிருப்புகள், என 18 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள்;

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் 93 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 80 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் என 1 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டிடங்கள் என்று மொத்தம் 19 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை துரைப்பாக்கத்தில் 1 கோடியே 20 லட்சத்து 64 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 6 குடியிருப்புகள்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 10 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 2 குடியிருப்புகள்; ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் 4 கோடியே 27 லட்சத்து 2 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 19 குடியிருப்புகள்; திருச்சி மாவட்டம் துறையூரில் 3 கோடியே 53 லட்சத்து 44 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள்;

    சென்னை மாவட்டம் அம்பத்தூரில் 6 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்;

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் 2 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 1 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 21 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தல், காவல்துறையின் பயன்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் செலவிலான 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 27 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலான 300 நான்கு சக்கர வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 45 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும் 50 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 60 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    • ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
    • இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.

    இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.

    சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.

    ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.

    உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.

    இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
    • அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து உள்ளது.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி கரையோர பகுதிகளில் மழையின்மையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்த போதிலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் நேற்று காலை வினாடிக்கு 2000 கன அடியாக நீடித்து வந்தன.

    இந்த நிலையில் இந்த நீர்வரத்து சரிந்து தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து உள்ளது.

    • யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
    • யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

    நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டம் காரணமாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
    • கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் வால்பாறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடையப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.

    இதேபோல் வால்பாறை நகரை சுற்றியுள்ள முடீஸ், சோலையார் அணை உள்பட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் எஸ்டேட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

    • தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள்.
    • இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.

    கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார்.

    நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.

    உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது.

    தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார். ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது.

    தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர்.
    • நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்றைய தினம், விருதுநகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அங்கிருந்த தமிழக பா.ஜ.க. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா அவர்கள் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

    கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார். 



    • த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
    • கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.?

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு இ.பி.எஸ். பதவி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இ.பி.எஸ். புறக்கணிப்பதால் பா.ஜ.க. உதவியுடன் தனது இருப்பை தக்க வைக்க செங்கோட்டையன் முயல்கிறாரா?

    த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது. செங்கோட்டையனுடனான மோதலுக்கு பின்னரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

    இபிஎஸ்-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு முயற்சிக்கிறாரா செங்கோட்டையன்? தர்மயுத்தம் நடத்தினால் ஆதரவு கிடைக்காது என்பதால் பா.ஜ.க. உதவியை நாடி உள்ளாரா?

    கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகாவிட்டால் ஷிண்டேவாக மாறுகிறாரா செங்கோட்டையன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு இணங்காவிட்டால், செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு தேர்தலில் களம் காண பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    ×