என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர்.
- கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது தொட்டபெட்டா மலை சிகரம்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வழிதவறி தொட்டபெட்டா மலை சிகரத்திற்குள் நுழைந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்த பணியில் 60-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர். நேற்று 4-வது நாளாக பணி தொடர்ந்தது.
யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கடந்த 3 தினங்களாக அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொட்டபெட்டா மலை சிகரம் திறந்ததை அறிந்ததும், ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்து சுற்றி பார்த்தனர். கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 25-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாவட்ட வாரியான சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
- பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார்.
- இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க வாரத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முதல் வாரம் நீதிபதிகள் என்.மாலா, எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார். இவர் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை 700 வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதேபோல, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் ஆகியோர் காலை 10.30 மணி முதல் டிவிசன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். இந்த வழக்குகள் எல்லாம் மாலை 5 மணிக்கு விசாரித்து முடித்தனர்.
பின்னர், தனித்தனியாக விசாரிக்க வேண்டிய வழக்குகளை சுமார் 5.30 மணிக்கு விசாரிக்க தொடங்கி, இரவு 9 மணிக்கு விசாரித்து முடித்தனர். இதனால் கோடைக்கால வழக்கு விசாரணை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்தது.
இதற்கு வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினேன்.
* பஞ்சப்பூரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்துள்ளேன்.
* ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.
* மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதே சான்று.
* தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முத்திரை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
* திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது.
* 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணம் திருச்சி தான்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய் ஆகும்.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.6.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய் ஆகும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 300 ரூபாய் ஆகும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது.
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். இளம் அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 16-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
திருச்சி:
திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகாமையில் ரூ.129 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த முனையத்தின் முன்புறம் பேரறிஞர் அண்ணா நிலையையும் அவர் திறந்துவைத்தார். இந்த கனரக வாகன சரக்கு வாகன முனையம் 8 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 250 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 102 இருசக்கர வாகனங்கள் 46 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் இங்குள்ள வணிக வளாகத்தில் தரைதளத்தில் 51 கடைகளும் முதல் தளத்தில் 28 கடைகளும் உள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
இதிலும் தனியாக 19 சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 27 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாவலர் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 14 படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளது 16 குளியல் அறைகள் உள்ளன. மேலும் 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்குமான கழிவறை வசதிகள் கூடுதலாக இந்த கனரக சரக்கு வாகன முனையம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 107 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கனரக வாகன நிறுத்துமிடங்களை அறிவிப்பு செய்யும் வசதி, பாஸ்ட்டேக் மூலம் வசூல் செய்யும் வசதி, தொழில்நுட்ப காரணிகள் மற்றும் பசுமை புல் வெளி போன்றவை இடம்பெற்றுள்ளது.
- காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
- யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு, பட்டாசுகள் வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
- சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
- மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
- சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.
நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
- மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை.
- மாணவர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
சென்னை:
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள மக்கள் குறித்து உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ 80690 09901, 80690 09900 என்ற டோல்-ஃப்ரீ எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். nrtwb.chairman@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா்.
- மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
சென்னை:
மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத்துறை பொறுப்பானது சட்டத்துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணி, சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது.
தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத்துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் அதே போன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன் சந்தித்து உள்ளாா். நீா்வளத்துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் ஐகோர்ட்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணி காரணமாகவே துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்நோக்கு மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி பிரச்சனை இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.






